வெளியே காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. புழுதியை வாரி இறைத்துவிட்டு, பெருவெளியெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. வேப்பமரமொன்று தலை சாய்த்துவிட்டு எழும்பி நிற்கின்றது. கண்டி – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நேரம் மதியம் தாண்டி இரண்டை எட்டிப்பிடிக்கிறது.
“இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்யவேண்டியிருக்கு. உப்பிடியே படுத்திருந்தால்?” மனைவி வயிற்றைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தாள்.
இன்னும் பத்து நாட்களில் நியூசிலாந்து நாட்டுக்குப் புறப்படவேண்டும். இந்தப் புலம்பெயர்வு விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. என்னுடைய நண்பர்களில் பலர் முன்னதாகவே, இலங்கையை விட்டுப் புறப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் சிதறுண்டு போய்விட்டார்கள். இருந்து பார்த்துவிட்டு, நாட்டு நிலைமைகள் மிகவும் மோசமடையவே நானும் புறப்படுவதற்கு ஆயத்தமானேன். இதுவரை சொந்தநாட்டுக்குள்ளேயே நான்கு இடங்கள் இடம்பெயர்ந்துவிட்டேன். வடபகுதிக்குள் இரண்டு இடங்கள், பின்னர் தலைநகரம் கொழும்பு, இப்போது வன்னி. 1990 ஆம் ஆண்டு முதன்முதலாக இடப்பெயர்ந்த போது வீடுவாசல் சொத்துக்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்தேன். அதன் பிறகு உயிரைக் கையில் பிடித்தபடி மாறி மாறி ஓட்டம்.
நியூசிலாந்து போவதற்கான எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுவிட்டன. மனைவி ஏழுமாதக் கர்ப்பிணி. முதலாவது பிரசவம். இனியும் தாமதித்தால் அவரை விமானத்தில் ஏற்றமாட்டார்கள். வன்னியில் வேலை செய்வதால், அங்கு இருந்துகொண்டு பிரயாணம் தொடர்பாக எதையும் செய்துகொள்ள முடியாது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பின்னடைவையே தரும்.
வீட்டு முகப்பில் சைக்கிள் பெல் சத்தம் கேட்கின்றது. மனைவி ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பார்த்துவிட்டு, “உங்களுடன் வேலை செய்யும் யோகன்” என்றார். பாயைச் சுருட்டிக் கரையில் வைத்துவிட்டு வெளியே வருகின்றேன்.
“சேர்… உங்களைத் தேடி வவனியா பாங்கில் வேலை செய்யும் தேவலிங்கம் என்பவர் வந்துவிட்டுப் போனார். அவசரமாகச் சந்திக்கவேண்டுமாம்.”
“சரி… ஒஃபிஸ் வரும்போது சந்தித்துவிட்டு வருகின்றேன்.”
யாராக இருக்கும்? மனம் கணக்குப் போடுகின்றது. தினம் தினம் வேலை விஷயமாக பலரும் வந்து போகின்றார்கள். விமானப்படைத்தளத்திலிருந்து எயர்போர்ஸ், விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அபிவிருத்திப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தகாரர்கள் என வருவார்கள்.
வேலைக்கான உடுப்புகளை அணிந்து கொள்கின்றேன். ஹோலிற்குள் வீட்டுச்சாமான்கள் அடுக்கிவைக்கப்பட்ட பெட்டிகள் காலிற்குள் இடறுப்படுகின்றன. வாடகை வீட்டில் இருக்கின்றபடியால் பொருட்கள் குறைவு. பெரிய பொருட்களை வீட்டுச் சொந்தக்காரருக்கே குடுத்துவிடுவதென தீர்மானித்திருந்தோம்.
“நாளைக்குப் பின்நேரம் ஐஞ்சரை மணிக்கு கொழும்பு றெயின். கடைசி வரைக்கும் ஒண்டையும் வைச்சிராதையுங்கோ! வரேக்கை இரவுச் சாப்பாட்டையும் வாங்கியாங்கோ” சைக்கிள் ஏறும்போது மனைவி எச்சரித்தாள்.
வேலை எட்டு மணித்தியாலங்கள் என்றபோதும், ஒருபோதும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வர முடிவதில்லை. சிலவேளைகளில் இரவு எட்டுமணிகூட ஆகும். அதனால் வீட்டிற்கு வந்து மதியம் சாப்பிட்டு, சிறிது உறங்கிப் போவதை வழமையாக்கிக் கொண்டேன். என்னுடன் வேலை செய்யும் மற்றப் பொறியியலாளரும் அப்பிடித்தான். மற்றும் எம்முடன் வேலை செய்யும் இரண்டு நிர்வாக உதவியாளர்களும்கூட மதியத்தில் வெளியே போய் சாப்பிட்டுவிட்டு வந்து மேசையில் தலைகுத்தி கோழித்தூக்கம் கொள்வார்கள். வேலைக்குப் போகாமல் எஞ்சியிருக்கும் ஊழியர்கள் விளாமரத்து நிழலில் இருந்து கதையளந்துகொண்டு இருப்பார்கள்.
எமது டிப்போ (வேலை ஸ்தலம்) நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான இயந்திரங்களையும் உபகரணங்களையும் வாடகைக்குக் கொடுப்பதாகும். அவற்றை இயக்கும் தொழிலாளர்களையும் வாகனங்களுடன் அனுப்பி வைப்போம். பெரிய ஹெவி றக், டோசர், லோடர், டிரக்டர்கள், றோலர்கள், தண்ணீர் வழங்கும் பவுசர்கள், கல்லுடைக்கும் மெஷின் போன்றவை எம்மிடம் இருந்தன. அவை நான்குபக்கமும் முட்கம்பி வேலிகளினால் சூழப்பட்ட, காணிக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காட்சியே அழகுதான். முப்பதிற்கும் மேற்பட்ட வன்னியைச் சேர்ந்த தொழிலாளர்கள் எம்முடன் வேலை செய்கின்றார்கள். அனைவரும் ஆண்கள். நாட்டில் இதைப் போன்று ஐம்பது டிப்போக்கள் இருக்கின்றன. அதிபர் ரணசிங்க பிறேமதாசா ஆட்சியில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டவை. தவிர வாகனங்களையும் உபகரணங்களையும் பழுதுபார்க்கவும், சேவிஸ் செய்யவும் என மூன்று மெயின்ரனன்ஸ் டிப்போக்கள் இயங்குகின்றன. எமக்கான தலைமை அலுவலகம் கொழும்பில் இருந்தது.
வவனியாவில்---வன்னியில்---டிப்போ ஆரம்பித்தபோது ஜனா, காசிநாதன் என்று என்னுடன் சேர்த்து மூன்று பொறியியலாளர்கள் வேலை செய்தோம். நாதன்---காசிநாதன்--- பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். ஜனா எங்களுக்கு சீனியர். பின்னர் ஜனா மாற்றலாகி கொழும்பில், கொலன்னாவ என்னும் இடத்திலுள்ள மெயின்ரனன்ஸ் டிப்போவில் வேலை செய்யப் போய்விட்டார். ஜனா இல்லாதது எனக்கு வலதுகரம் முறிந்தது மாதிரி இருந்தது. நாதனைப்பற்றி ஒரு சொல்லில் சொல்வதென்றாலும் பல பெயர்கள் தேவைப்படும். சகுனி, எட்டப்பன், திருகுதாளி, போக்கிரி இன்னும் என்னவெல்லாம்… என் தோளை ஒரு கை அணைத்திருக்கையில், முதுகின் பின்னாலே மறுகையில் கத்தி நீண்டிருக்கும். அவன் வவனியா வாசி. நான் யாழ்பாணத்தான். வன்னியில் பிறந்து வளர்ந்ததை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு, “இவன் யாழ்ப்பாணத்தான். எப்படி வன்னியில் வந்து வேலை செய்யலாம்?” என தொழிலாளர்களுக்கு என்னைப்பற்றி நஞ்சை விதைப்பவன். “நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக் கேட்டு நடந்தால், உங்களுக்கு நன்மைகள் காத்திருக்கும்” என்று சொல்லி தொழிலாளர்களைத் தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தான். அவர்களும் மந்திரித்து விடப்பட்டவர்கள் போல அவனின் பின்னாலே திரிந்தார்கள். வாகனங்களை கூடிய நேரத்திற்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு, நேரத்தைக் குறைவாகப் பதிவேட்டில் பதிவு செய்வான் நாதன். காசை வாங்கிப் பொக்கற்றுக்குள் போட்டுக் கொள்வான். சமூக அக்கறை என்பது துளிகூடக் கிடையாது. இருப்பினும் என்னுடன் ஒருபோதும் நேரிடையாகச் சண்டை போட்டதில்லை. ஒரு தடவை மேலிடத்தில் இருந்து ஒரு நிறைவேற்று அதிகாரி வந்து நாதனை விசாரணை செய்திருந்தார். எச்சரிக்கையுடன் மாத்திரம் தப்பித்துக் கொண்டான் அவன். இருப்பினும் அவன் இவை ஒன்றுக்கும் கிறங்கமாட்டான்.
இலங்கை வங்கிக்கு முன்னால் சைக்கிளை நிற்பாட்டினேன்.
செக்கியூரிட்டியிடம் தேவலிங்கத்தைச் சந்திப்பதற்காக வந்திருக்கின்றேன் என்ற தகவலைத் தெரிவித்தேன். தேவலிங்கம் வங்கியில் உதவி மனேஜராக வேலை செய்கின்றார் என்ற தகவலை அவர் மூலம் அறிந்தேன். சில நிமிடங்களில் தேவலிங்கம் வந்து என்னை உள்ளே கூட்டிச் சென்றார். எதிரே இருந்த ஆசனத்தில் அமரச் சொன்னார்.
“ஒரு துக்ககரமான செய்தி. மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்” சொல்லியபடி என் முகத்தைப் பார்த்தார்.
“உங்கள் அம்மா இரண்டுகிழமைகளுக்கு முன்பதாக இறந்துவிட்டார்.”
நெஞ்சு திக்கென்றது.
“உங்கள் அண்ணா கொழும்பிலிருந்து தொலைபேசியில் சொன்னார். இருங்கள் அண்ணாவுடன் கதைப்பதற்கு ரெலிபோன் எடுத்துத் தருகின்றேன்.”
மனம் பதைபதைத்தது. இது எப்படி? அம்மா நலமாகத்தானே இருந்தார்! ஒன்றுமே கதைக்க முடியவில்லை. அமைதியாக இருந்தேன்.
“நான் ஒஃபிஷிற்குப் போய் அங்கிருந்து அண்ணாவுடன் கதைக்கின்றேன்.”
“இல்லை…. இப்போது நீங்கள் இருக்கும் நிலையில் உடனடியாக வெளியே எங்கும் செல்லாதீர்கள்.” சொல்லிவிட்டு அண்ணாவுக்கு ரெலிபோன் எடுத்துத் தந்துவிட்டு, என்னையே பார்த்தபடி நின்றார் தேவலிங்கம்.
“இரண்டு மூண்டு தரம் ஒஃபிஷிற்கு ரெலிபோன் எடுத்தன். ஒருத்தரும் எடுக்கேல்லை” மறுமனையில் அண்ணா. அவர் இலங்கைவங்கி கொழும்புக் கிளையில் வேலை செய்கின்றார். ரெலிபோன் லைன் வேலை செய்யத் தொடங்கியதும், எமக்கு இடையூறு செய்யாமல், அறைக்கு வெளியே போய்விட்டார் தேவலிங்கம்.
“லஞ் எண்டபடியாலை ஒருத்தரும் நிக்கேல்லைப் போல கிடக்கு.”
“அம்மா இரண்டுகிழமைக்கு முதல் இறந்துவிட்டா. செத்தவீடு எல்லாம் முடிஞ்சுதாம். எப்பிடி இறந்தா, ஆர் கொள்ளி வைச்சது எண்டு ஒண்டும் விபரமாத் தெரியேல்லை. நாட்டுநிலைமைகள் படு மோசமா இருக்கிறதாலை, இண்டைக்குத்தான் செய்தி வந்தது. நீ எப்ப கொழும்பு வாறாய்?”
“என்ன செய்கிறது எண்டு தெரியேல்லை. யாழ்ப்பாணம் போய் எல்லாரையும் சந்திச்சுப்போட்டு வரலாம் எண்டு நினைக்கிறன்.”
“உனக்கென்ன விசரே! இப்ப இருக்கிற நிலையிலை நீ என்னண்டு யாழ்ப்பாணம் போக முடியும்? கடல் வழியா போனாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போனாலும் உடனை திரும்பி வர முடியாது. பிறகு உன்ரை வெளிநாட்டுப்பயணம் எல்லாம் தடங்கலாகிவிடும். நீ உடனடியா வெளிக்கிட்டு கொழும்புக்கு வா.”
அண்ணா சொன்னதைத்தான் வங்கியில் வேலை செய்த அனைவரும் சொன்னார்கள்.
ஒருவருடத்திற்கு முன்பதாக யாழ்ப்பாணம் சென்று, உறவுகளை சந்தித்துவிட்டு வந்த ஞாபகம் தலைதூக்கியது. கிளாலிக் கடலேரியை ஊடறுத்து, மரணத்தை எதிர்கொண்டு சென்று வந்த பயணம் அது. அந்தப் பயணத்தின்போது கூட ஒரு தத்துக் கழிந்திருந்தது. படகுக்கு ஏறுவதற்காக பற்றைகளுக்குள் பதுங்கியிருந்தபோது, சகடை ஒன்று வந்து போட்ட குண்டுகள் எமக்கு அருகே விழுந்து வெடித்து சிதறிப் பாய்ந்தன. நான் ஒரு திக்கிலும், மனைவி ஒரு திக்கிலுமாக தூக்கி எறியப்பட்டோம்.
“வெளிநாடு போற எண்ணத்தைக் கைவிடு. நான் இறந்துபோய்விட்டால் எனக்கு யார் கொள்ளி வைப்பது?” அம்மா தனக்குள் முணுமுணுத்தார். நான் கேட்காதது போல இருந்து கொண்டேன். அம்மாவுக்கு நான் வெளிநாடு போவதில் ஒருபோதும் பிடிப்பில்லை.
விடைபெறும்போது, “அம்மா ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். நாட்டு நிலைமைகள் இப்படியே தொடர்ந்து இருக்கப் போவதில்லை. தீர்வு ஒன்று வந்துவிடும்.” என்று சொல்லி வைத்தேன்.
வங்கியை விட்டுக் கிழம்பி, டிப்போவை நோக்கிப் புறப்பட்டேன். செக்கியூரிட்டிக்கூண்டைச் சுற்றி தொழிலாளர்கள் நின்றார்கள். என்னைக் கண்டதும் சூழ்ந்து கொண்டார்கள். கவலை தெரிவித்தார்கள். நாதனிற்கு ஏற்கனவே செய்தி எட்டியிருந்தது. ஒஃபிஷிற்குள் அவனும் நிர்வாக உதவியாளர்களும் வேலையில் மும்மரமாகியிருந்தார்கள். இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
“நியூசிலாந்துக்குப் போனால், பிறகு உடனை இலங்கைக்கு வர வாய்ப்பு இருக்காது. ஊருக்குப் போய் உறவினரைச் சந்தித்துவிட்டு போவதுதான் நல்லது” என்றான் நாதன்.
“நான் குழம்பிப் போய் இருக்கின்றேன். ஊரில் அப்பா அக்கா அண்ணா எல்லாரும் இருக்கின்றார்கள் தான். ஆனால் எப்படிப் போவது? போனாலும் உடனடியாக திரும்பி வாறதுக்கு சாத்தியம் இல்லை.” சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினேன்.
“இண்டைக்குத்தான் கடைசி நாள். நாளைக்கு வேலைக்கு வரமாட்டேன். அனேகமாக எல்லாம் சரி என்று நினைக்கின்றேன்.” சொல்லிவிட்டு எனது கொம்பனி வாகனத்தின் சாரதி பாலகுமாரைக் கூப்பிட்டேன்.
”பாலகுமார்…. நீ நாளைக்குக் காலமை வீட்டுக்கு வந்து, வீட்டில இருக்கிற பொருட்களை வாகனத்திற்குள் ஏற்றிக்கொண்டு இரவே கொழும்பிற்குப் புறப்பட்டுவிடு. நாளை மறுநாள் நாங்கள் இரண்டுபேரும் கொழும்பில சந்திப்போம். இதில ஏதாவது மாற்றங்கள் இருந்தால், நாளை வரேக்கை சொல்லுறன்.”
பாலகுமார் ஆமாம் போட்டான். கடந்த மூன்று வருடங்களாக எனது பிரத்தியேக சாரதி அவன். உயர்தரம் வரை படித்திருந்த அவன், பொருத்தமான வேலை கிடைக்காததால் இந்த வேலைக்கு வந்திருந்தான். நீண்ட திறந்த பெட்டி கொண்ட, றைவருடன் இன்னொருவர் மாத்திரம் அமரக்கூடிய `டாட்டா` றக் வாகனத்தைத் திருப்பி ஒப்படைக்க வேண்டியிருப்பதால், பாலகுமார் இனி டிராக்டர் தான் ஓடவேண்டி வரும். தொழிலாளர்கள் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்படும்போது, யோகன் என்னைக் கவலையுடன் பார்த்தான்.
“யோகன்… சைக்கிளை நாளைக்கு ஸ்ரேஷனில் வந்து வாங்கும்.” எனது சைக்கிளை அவன் தனக்குத் தரும்படி கெஞ்சிக்கொண்டிருந்தான். சமீபத்தில் தான் நான் எனது சைக்கிளை வாங்கியிருந்தேன். அவன் ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் தருவதாகச் சொல்லியிருந்தான். பாதி விலைதான் என்றாலும் நான் அவனுக்குத் தருவதாக வாக்குக் குடுத்திருந்தேன்.
வீட்டிற்கு வரும்போது மனைவி என் கைகளைப் பார்த்தாள். வெறுமையாகவிருந்ததைக் கண்டு ஏதோ நடந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். அம்மாவின் இறப்பைச் சொன்னபோது பதறிப் போனாள். ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டாள். ஆறுதல் சொல்வதற்கு அவளால் முடியவில்லை. அதிர்ச்சிக்குள்ளாகி விட்டாள். துயரத்தை இருவரும் இரவிரவாகப் பகிர்ந்து கொண்டோம். இரவு ஆகாரம் உண்ணவில்லை. தேநீரைப் பருகிவிட்டு உறங்குவது போலப் பாசாங்கு செய்தோம். உற்றாரும் இல்லை, உறவினரும் இல்லை, ஊராரும் இல்லை. நாமே நமக்குத் துணையானோம்.
●
புகையிரதத்திற்காக நானும் மனைவியும் காத்திருந்தோம். சற்றுத்தூரத்தில் யோகன், பாலகுமார் இன்னும் சில தொழிலாளர்கள் எம்மை வழியனுப்புவதற்காகக் காத்து நின்றார்கள். கடைசியில், “சேர்… என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. ஆயிரம் ரூபாய்கள் மாத்திரமே என்னாலை தரமுடியும்” என்று சொல்லிச் சைக்கிளை வாங்கிக் கொண்டான் யோகன். கடைசி நிமிடத்தில் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் நாதனும் மனைவியும் புகையிர நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
“மச்சான்…. ஒண்டுக்கும் கவலைப்படாதை. எல்லாம் நல்லபடி நடக்கும். உங்கட வெளிநாட்டுப் பயணம் சிறப்புற எனது வாழ்த்துக்கள்.” தோளில் அரவணைத்தான்.
புகையிரதம் புறப்பட்டதும் எல்லோரும் கை அசைத்து விடை கொடுத்தார்கள். அப்புறம் நானும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்தபடி, சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தோம். அம்மாவின் இழப்பின் துயரத்தை, நேற்றிலிருந்து நாம் இருவரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். அம்மாவின் நினைவுகள் நம் இருவரையும் வாய் ஓயாமல் கதைத்க வைத்தன. சொந்த வாழ்விடத்தை விட்டு வெளியேறி ஐந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டன. அயலில் உற்றார் உறவினர் நண்பர்கள் என யாரும் இல்லை. எமது தற்போதைய இருப்பிடத்திலிருந்து, 140 கி.மீட்டர்கள் தூரத்தில் நடந்த இழப்பைத் தெரிந்துகொள்ள இரண்டுவாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதுவும் `அம்மா இறந்துவிட்டார்’ என்று மொட்டையான ஒற்றை வாய்க்கியம். ஒரு நாட்டிற்குள் இருக்கும் இருவேறுபட்ட நடப்புகள் இவை. நாட்டின் ஏழு மாகாணங்களும் தொழில்நுட்பப் புரட்சியுடன் வீறுநடை போட, வடக்கு கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களும் - உணவுக்கும் எரிபொருளுக்கும் அன்றாட தேவைகளுக்கும் அல்லாடும் மனிதர்களுமாக - நரக வாழ்க்கையில் மூழ்கியிருந்தன. `இனப் பிரச்சினை’ என்ற வண்டு’ அழகான மாம்பழத்தை அரித்து உள்ளே புகுந்து சம்மாணமிட்டுப் பல வருடங்களாகிவிட்டன.
புகையிரதம் தலைநகரைச் சேர்ந்தது. அண்ணாவும் மகளும் எமக்காக புகையிர நிலையத்தில் காத்து நின்றார்கள். கதைப்பதற்கு பெரிதாக எதுவும் இருக்கவில்லை. வீட்டின் ஹோலிற்குள் சிறிய மேசை வைத்து அம்மாவின் படத்தை வைத்திருந்தார்கள். அருகே குத்துவிளக்கில் சுடர் பிரகாசித்தது. உறங்குவதற்கு முன்னர் படத்திற்கு முன்னால் நின்று மெளன அஞ்சலி செலுத்தினோம். அண்ணனின் மகள் தேவாரம் பாடினாள். இரவில் உறக்கம் வரவில்லை. புது இடம் என்பதாலும் இருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம்.
மறுநாள் காலை ஒன்பதுமணியளவில் பாலகுமார் வீட்டுக்கு வந்துவிட்டான். பொருட்களை இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு, கொலன்னாவ மெயின்ரனஸ் டிப்போ போய்ச் சேர்ந்தோம்.
“பாலகுமார்… வாகனத்தை உள்ளுக்கை கொண்டுபோய் நிப்பாட்டிப்போட்டு, திறப்பைக் கொண்டுவந்து என்னட்டைத் தாரும். நான் ஜனாவுடன் கதைத்துக் கொண்டிருக்கிறன்.”
எல்லாம் முடித்து பாலகுமார் போகும்போது, ஏக்கத்துடன் என்னைப் பார்த்தான். அவனது கையிற்குள் இரண்டு நூறு ரூபாய்த்தாள்களை வைத்தேன். அவன் கண்கள் கலங்க விடைபெற்றுக் கொண்டான்.
ஜனா அம்மாவின் இறப்பைப் பற்றி மீண்டும் விசாரித்தார். ஏதோ ஒன்றைச் சொல்லுவதற்கு தயங்குவது போல் இருந்தது.
“வவனியா டிப்போவில் இருந்து ஏழெட்டுத் தொழிலாளர்கள் கையொப்பமிட்டு, fபக்ஸ் ஒண்டு ஹெட் ஒஃபிஷிற்கு, ஜெனரல்மனேஜரின் பெயருக்கு வந்திருக்காம். உன்னுடைய வாகனம் அக்ஷிடென்ற் பட்டிருக்கின்றது எண்டும், வலதுபக்க முன்பாகம் சேதமடைந்து திருத்தப்பட்டிருக்கின்றது எண்டும் அதிலை எழுதியிருக்காம்.” ஜனா வெடிகுண்டு ஒண்டைத் தூக்கிப் போட்டார்.
“டிப்போ மனேஜர் வாகனத்தை வடிவாகச் செக் பண்ணச் சொல்லியிருக்கின்றார். உது மச்சான்… உன்ரை திருகுதாளியின்ரை வேலை.”
இந்த இக்கட்டான நெருக்கடியில் புதியதொரு தலையிடி வந்து சேர்ந்தது. எப்படியாவது நான் வெளிநாடு போவதைத் தடுத்தேயாகவேண்டும் என்று குறியோடு இருக்கின்றான் நாதன். சரியான விளக்கம் கொடுக்கப்படாவிட்டால் எனது பதவி விலகலை நிர்வாகம் நிராகரிக்கக்கூடும், அல்லது காலதாமதமாக்கக் கூடும்.
“ஜெனரல் மனேஜர் ரொம்பப் பொல்லாதவராயிறே! இனத்துவேஷம் பிடிச்சவர் எண்டும் கேள்விப்பட்டிருக்கிறன். ஜனா… உங்களுக்குத் தெரியும் தானே! முந்தி இரண்டு மூண்டு இஞ்சினியரைக் கையும் களவுமாப் பிடிச்சு `சக்’ பண்ணினவரல்லவா அவர்?”
“உண்மைதான்.... அந்தாள் ஒரு கொதியன். என்ன செய்யும் எண்டு சொல்லமுடியாது. இருக்கிற நிலைமையைப் பொறுத்து ஆளின்ரை மூட் மாறும்.
நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. முதலிலை ஹெட் ஒஃபிஷ் போய் டிப்போ மனேஜரைச் சந்தி. அந்தாள் நல்ல மனுஷன். அந்தாளுக்குள்ளாலைதான் அலுவல் பாக்கவேணும். நானும் அவரோடை கதைக்கிறன்.”
ஜனாவிடம் விடைபெற்றுக்கொண்டு, தலைமையகத்திற்குச் சென்றேன். கொலன்னாவையிலிருந்து ஹெட் ஒஃபிஷ் போவதற்கு இன்னொரு பஸ் பிடிக்கவேண்டி இருந்தது. அங்கே எல்லாமே சிங்கள முகங்களாக இருந்தன. முதலில் டிப்போ மனேஜரைச் சந்தித்தேன்.
“ஜனா உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லியிருப்பார் என நினைக்கிறன். உங்களைப்பற்றி இதுவரை காலமும் எதுவித முறைப்பாடுகளும் இங்கு பதிவாகவில்லை. நீங்கள் ஒரு கடின உழைப்பாளி என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்த விபத்து எப்படி நடந்திருக்கின்றது என்பதில் நாம் குழம்பிப் போயிருக்கின்றோம்.
உங்களிடம் நான் ஒரேயொரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். பதில் தர வேண்டும்.”
“ஓம்... ஓம் சேர்… கட்டாயம்.... கேளுங்கோ.”
“உம்முடைய வாகனத்தை நீர் எப்பொழுதாவது நாதனுக்கு ஓடக் கொடுத்திருக்கின்றீரா?”
“இல்லை சேர். ஆனால்… நான் யாழ்ப்பாணம் போய் லீவிலை இரண்டு கிழமைகள் நிண்டபோது, நாதன் எனது வாகனத்தைப் பாவித்து மனைவியுடன் சுற்றுலா போயிருக்கின்றார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். யாழ்ப்பாணத்திலிருந்து வந்ததும், நான் எனது வாகனத்தின் ஓடோமீட்டரைப் பார்த்தேன். அதில எதுவித மாற்றமும் இல்லாதது கண்டு பேசாமல் விட்டுவிட்டேன்.”
சிரித்துக்கொண்டே, “பொறுங்கள்… ஒருநிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார் டிப்போ மனேஜர். ஜனாவிற்கு ரெலிபோன் செய்தார்.
“ஜனா…. உம்முடைய நண்பர் என்னுடன் தான் இருக்கின்றார். வாகனம் அடிபட்டிருப்பதாக உறுதிப்படுத்தினீர்கள். ஆனா ஓடோமீட்டரைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே! ஓடோமீட்டரைக் கழற்றி நம்பரைப் பின்னோக்கிச் சுற்றியிருக்கின்றார்களா என்று ஒருதடவை பாருங்கள். அவசரம் இல்லை.... ஆறுதலாகப் பார்த்துச் சொன்னால் போதும்.”
ஜனாவுடன் பேச்சை முடித்துக் கொண்டதும், டிப்போ மனேஜர் இருக்கையை விட்டு எழுந்து கொண்டார்.
“இருந்து கொள்ளுங்கள். நான் ஜெனரல் மனேஜர் ஃபிறீயா இருக்கின்றாரா எனப் பார்த்து வருகின்றேன்.”
அவர் போகும் திசையில் கண்களைச் சுழலவிட்டேன். என்ன நடக்கப் போகின்றதோ என மனம் பதட்டமடைந்தது. ஜெனரல் மனேஜரின் சுழல்கதவைத் தள்ளியபடி உள்ளே நுழைந்தார் டிப்போ மனேஜர். கதவு 180 பாகையினூடாக விரிந்து ஊஞ்சல் போல ஆடுகின்றது. உள்ளே மாமிசமலையொன்று வண்டியும் தொந்தியுமாக வீற்றிருக்கின்றது. உதட்டுக்கு மேலே மீசை என்ற பெயரில் பெரிய தும்புக்கட்டை பயம் காட்டுகின்றது. கதவு மெதுவாக ஓய்ந்து அவர் உருவம் மறைகின்றபோது, மீண்டும் அதைத் தள்ளியபடியே டிப்போ மனேஜர் வெளியே வருகின்றார். மீண்டும் அந்தப் பூதம் உருப்பெருத்து என்னை விழுங்குகின்றது. முகத்தைக் கீழே தாழ்த்தி நிலம் நோக்கினேன்.
“ஜெனரல் மனேஜர் வரச் சொல்கின்றார். வாருங்கள்... சந்திப்போம்” என்னைக் கூட்டிக்கொண்டே பல மேசைகளைத் தாண்டிச் செல்கின்றார் டிப்போ மனேஜர். பல தலைகள் ஆணும் பெண்ணுமாக எங்களை நோக்கித் திரும்புகின்றன. பலிபீடத்தை நெருங்க நெருங்க பயம் மேலும் என்னைப் பற்றிக் கொள்கின்றது. இந்தத் தடவை சுழல் கதவைத் தட்டி, அனுமதி பெற்றுக்கொண்டதும் இருவரும் உள்ளே சென்றோம். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, எதிரே இருந்த கதிரைகளில் எங்களை அமரும்படி சொன்னார் ஜெனரல் மனேஜர்.
“அம்மாவின் இழப்பிற்கு எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றபடியே பேசத் தொடங்கினார் ஜெனரல் மனேஜர்.
“நாதனின் கடிதம் எழுதும் ஆங்கிலப்புலமைதான் அவரை எனக்குக் காட்டித் தந்தது. சுத்த மோசம். உங்களுக்கெதிரான குற்றச்சாட்டை - நாதன் தன் கைப்பட எழுதி, தொழிலாளர்களின் கையொப்பத்தைப் பெற்று fபக்ஸ் மூலம் அனுப்பியிருக்கின்றார். அவரைப்பற்றி பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எம்மிடம் உள்ளன.
இந்த விடயத்தில் உங்கள் மீது எந்தவிதமான குற்றங்களையும் எம்மால் கண்டுகொள்ள முடியவில்லை.
நீங்கள் நாளைக் காலை பத்துமணியளவில் வாருங்கள். உங்கள் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதற்கான கடிதமும், உங்களுக்குரிய நற்சான்றிதழ், மற்றும் உங்கள் சம்பளப்பணமும் காத்திருக்கும். நீங்கள் இதுவரைகாலமும் திறம்பட வேலை செய்ததற்கு, நிர்வாகத்தின் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள்.”
நான் இருக்கையை இறுகப் பற்றிக் கொண்டேன். எனது முகத்தில் ஜெனரல் மனேஜரின் பார்வை வெளிச்சமடித்தது. டிப்போ மனேஜர் புன்முறுவல் பூத்தபடி, தலையை மேலும் கீழும் ஆட்டி ஜெனரல் மனேஜரின் உரையை ஆமோதித்தார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.