கீரிமலைக் கடற்கரை சுனாமி வந்து போனது போல அமைதியாக இருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பைத்தவிர, அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. எங்கிருந்தோ பறந்து வந்த மீன் கொத்திப் பறவை ஒன்று சட்டென்று தண்ணீரில் மூழ்கி எதையோ கொத்திச் சென்றது. சுதந்திரமாய்ச் சிறகடித்து வானத்தில் பறக்கும் கடற்கொக்குகளைக் கூட இன்று காணக் கிடைக்கவில்லை. அஸ்தி கரைப்பதற்காக கீரிமலைக் கடலில் தலை மூழ்கி எழுந்தபோது இதுவரை அடக்கிவைத்த எனது துயரம் தன்னிச்சையாகப் பீறிட்டு வெடித்தது. கிரிகைகள் செய்யும்போது துயரத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதால் கிரிகைகள் செய்த சமயாச்சாரியின் முன்னால் இதுவரை அடக்கி வைத்த துயரம் தண்ணீரில் ஒவ்வொரு முறையும் தலைமூழ்கி எழுந்தபோது என்னையறியாமலே வெடித்துச் சிதறியது. ஆற்றாமையின் வெளிப்பாடாய் இருக்கலாம், ஏனோ வடதிசையைப் பார்த்து ஓவென்று அழவேண்டும் போலவும் இருந்தது. என் கண்ணீரைப் பாக்குநீரணை தனதாக்கிக் கொண்டபோது, ஆர்ப்பரித்த ஓயாத அலைகளின் ஆரவாரத்தில் என் அழுகைச் சத்தமும் அதற்குள் அடங்கிப் போயிற்று.
இப்படித்தான் ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் மரண ஓலங்கள்கூட வடதிசையில் கடல் கடந்து சற்றுத் தொலையில் இருந்த உடன் பிறப்புக்களுக்குக் கேட்காமல் அரசியல் அலைகளால் அமுக்கப்பட்டிருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது. நினைவுகள் கரித்தது போல, வாயெல்லாம் உப்புக் கரித்தது. கரித்தது என் கண்ணீரா அல்லது வங்கக் கடல் நீரா என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாத அவலநிலையில் நானிருந்தேன்.
இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே இராணுவ நடமாட்டம் இருந்தது மட்டுமல்ல, பலர் சாதாரண உடையிலும் நடமாடினர். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அவர்களால் கவனிக்கப்படலாம் என்பதால் என் துயரை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். கவனமாக இருந்தேன் எனபதைவிட கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தேன். நான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு என்ன நடந்தது? ஏதோ ஒருவித பயங்கர அமைதி அங்கே நிலவுவதை என் உள்ளுணர்வு எடுத்துச் சொன்னது. இதே கடற்கரையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிற் தீர்த்தத் திருவிழாவின்போது நண்பர்கள், உறவுகள் புடைசூழ எவ்வளவு கலகலப்பாய் மகிழ்ச்சியோடு நீராடியிருக்கிறோம். கடற்கரை ஓரத்தில் இருந்த நன்னீர்க் கேணி என்பதால் கீரிமலைக் கேணி பிரசித்தி பெற்றிருந்தது. தென்னிந்தியாவில் இருந்து வந்த சோழ இளவரசியான மாருதப்புரவீகவல்லி இந்தக் கேணியில் நீராடித்தான் தனது குதிரை முகம் போன்ற தனது முகத்தை அழகான முகமாக மாற்றியதாக வைதீகக் கதைகள் உண்டு. இளவரசியின் விருப்பப்படியே தென்னிந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காங்கேயன் சிலை, அருகே இருந்த இந்தக் கடற்கரைத் துறைமுகத்தில் இறங்கியதால் அத்துறை காங்கேயன் துறையாயிற்று. குதிரை முகம் அழகிய முகமாய் மாறியதால் மா- விட்டபுரம் என்ற பெயரும் எங்கள் ஊருக்கு அமைந்ததாக பாரம்பரியக் கதைகள் உண்டு.
உள்நாட்டுப் போர் என்றுதான் சொன்னார்கள். சர்வதேசமே வேடிக்கை பார்த்திருக்க, போரின் உச்சக்கட்டத்தில் யாருமே வன்னிப்பக்கம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பாவும், தங்கையும் அந்தப் பகுதிக்குத்தான் இடம் பெயர்ந்து தங்கியிருந்தார்கள். ஆனாலும் இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார்கள். இருவரும் வெவ்வேறு துருவங்களாய் இருந்தாலும், இருவருமே ஒரே மண்ணைத்தான் நேசித்தார்கள். மண்ணை மட்டுமல்ல, மக்களை, தாய்மொழியை, இயற்கையைக்கூட மனதார நேசித்தார்கள்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபகுதியில் இருந்த எங்கள் கிராமமான மாவிட்டபுரம் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டதால், விரும்பியோ, விரும்பாமலோ சூழ்நிலையின் கட்டாயத்தால் குடும்பமே பரம்பரையாக வாழ்ந்த ஊரில் இருந்து இடம் பெயர்ந்து போகவேண்டி வந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கோட்பாட்டை அகிம்சைவாதியான அப்பாவும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதனால்தானோ என்னவோ பிறந்த மண்ணைப் பறிகொடுத்தாலும் கடைசிவரை தாங்கள் புகுந்த மண்ணைவிட்டுப் பிரிய இருவருமே முற்றிலும் மறுத்து விட்டார்கள்.
இருவரும் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நான் புலம் பெயர்ந்த மண்ணில் இருந்தேன். நாட்டின் போர்ச் சூழ்நிலையால் கடைசிக்காலத்தில் எந்தவித தொடர்பும் எங்களுக்குள் இருக்கவில்லை. உறவுகள் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நல்லதொரு ஒரு செய்திக்காகப் புலம் பெயர்ந்த மண்ணில் ஏங்கியபடி தவித்தவர்களில் நானும் ஒருவன். போர் ஓய்ந்த சில நாட்களின் பின்தான் அந்தத் துயரச் செய்தி வந்தது. போர் மேகங்கள் திரண்டு வந்து குண்டு மழையாய்ப் பொழிந்த ஒரு நாளில் அப்பாவின் மரணம் சம்பவித்தாக தூரத்து உறவினர் ஒருவர் மடல் வரைந்திருந்தார். ஊர் சுமந்து போவதற்கு அந்த நேரத்தில் நான்கு பேர்கூட அங்கே கிடைக்கவில்லையாம். துப்பாக்கிச் சூடுகளுக்கும், ‘செல்’ அடிகளின் மத்தியில், முந்தியவனைப் பிந்தியவன் சுமப்பது என்ற நியதி போல, ஒரு தள்ளு வண்டியில் வைத்துத்தான் அருகில் இருந்த மயானத்திற்கு அப்பாவின் உடலை இருவர் தள்ளிச் சென்று சிதை மூட்டியதாகவும், அவரது அஸ்தியை எடுத்துக் கவனமாக வைத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஊர்மக்களால் விரும்பப்பட்ட ஒரு காந்தியவாதியாய், அகிம்சையின் பிறப்பிடமாய், தலைமை ஆசியராய், ஊராட்சி மன்றத் தலைவராய் இருந்த அவருக்குச் சாதாரண ஒரு நாளாக இருந்திருந்தால், அதற்குரிய அத்தனை மரியாதைகளுடனும் அவரது கடைசி ஊர்வலம் சென்றிருக்க வேண்டும். பிரித்தானியரிடமிருந்து கிடைத்த சுதந்திரத்தைத்தான் தமிழர்களுக்குக் கிடைத்த உண்மையான சுதந்திரம் என்று நினைத்து ஏமாந்தவர்களில் அப்பாவும் ஒருவர். பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும் பைந்தமிழின் ஓசை அங்கு கேட்க வேண்டும், ஓடையிலே தன் சாம்பல் கரையும் போதும் நம்தமிழின் ஓசையாங்கொலிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்லிக் காட்டும் வார்;த்தைகளை நான் அடிக்கடி நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இதெல்லாம் அவரது ஆசைகளாகவோ அல்லது கனவுகளாகவோ மட்டுமே இருந்தன. சாதாரண ஒரு நாளாக இருந்திருந்தால் இவை எல்லாம் நிறைவேறியிருக்கும். எப்படி எல்லாம் தனது இறுதி ஊர்வலம் நடக்க வேண்டும் என்று அப்பா எதிர்பார்த்தாரோ அதை எல்லாம் துறந்து கடைசிக் காலத்தில் அப்பா ஒரு அனாதைப் பிணமாய்ப் போய்விட்டாரே என்ற கவலை எனக்குள் குமைந்து கொண்டே இருந்தது.
எனவேதான் யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஊருக்குச் சென்ற என்னால், அப்பாவிற்கான திதியை மட்டுமே செய்ய முடிந்தது. பொதுவாக எங்க ஊரின்; வடக்கே, தென்னிந்திய கோடிக்கரையில் இருந்து பதினெட்டுக் கல் தெற்கே, கடற்கரை ஓரத்தில் இருந்த சடையம்மா மடத்தில்தான் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அந்த மடம் அகப்பட்டுக் கொண்டதால் வடமேற்குத் திசையில் சற்றுத் தள்ளி இருந்த ஈஸ்வரத் தலங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரத்திற்குச் சென்று அப்பாவின் திதியைக் கொடுத்தேன். ஈழத்தில் பஞ்சஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படும் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய தலங்களில் இதுவும் ஒன்றாகும். இவற்றில் சில கி.பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயன்மார்களின் தேவாரப்பாடல் பெற்ற புகழ்பெற்ற ஈஸ்வரங்களாகவும் இருக்கின்றன. சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத் திருத்தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அமைதியான தெளிந்த நீரோட்டம் போன்றிருந்த எங்கள் வாழ்க்கையில் விதி விளையாடத் தொடங்கியது. விதியே விதியே என்தாயை என்செய்தாய்? என்றது போல காலம் எதற்காகவும் காத்திருக்கவில்லை, ஆனால் விதி மட்டும் பலியெடுக்கக் காத்திருந்தது...!
தாயுமானவர் - 2
குரு அரவிந்தன்.
விதியே விதியே என்தாயை என்செய்தாய்? என்றது போல, அன்றொரு நாள் என் தாயைப் பழிவாங்கவே பொல்லாத விதி காத்திருந்தது. எனது தங்கையைப் பிரசவித்தபோது, அன்று எதிர்பாராமல் ஏற்பட்ட அம்மாவின் திடீர் மரணத்தை எங்களால் தாங்க முடியாததாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே நீண்ட நாள் எடுத்தது. அம்மா என்றொரு தெய்வம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏன் தேவை என்பதை அதன்பிறகான எங்கள் ஒவ்வொரு அசைவின் போதும்தான் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பாதான் எங்களுக்கு எல்லாமாகியிருந்தார். என்னை மட்டுமல்ல கைக்குழந்தையான தங்கையையும் அவர்தான் பாசத்தோடு வளர்த்தெடுத்தார். தாயாய், தந்தையாய், நல்லாசிரியனாய், நண்பனாய், மந்திரியாய் எங்கள் ஒவ்வொரு அசைவிலும் அவர் கலந்திருந்தார். ‘தாயுமானவர்’ என்றுதான் பக்கத்து வீட்டுப் பார்வதிப்பாட்டி எங்க அப்பாவை அழைப்பாள். சிறுவயதில் அதன் அர்த்தம் எனக்குப் புரிவதில்லை. வளர்ந்து, புலம் பெயர்ந்து சென்ற பின்புதான் அந்தச் சொல்லின் அர்த்தத்தை என்னால் முழுமையகப் புரிந்து கொள்ள முடிந்தது. சுருங்கச் சொன்னால் தாயிடம் எதிர்பார்க்கும் தாய்பாலைத் தவிர மற்றைய எல்லாவற்றையுமே அவர் எங்களுக்கு ஊட்டியிருந்தார். எங்களுக்காகவே அவர் வாழ்ந்திருந்தார். அவரைப் பிரிந்து இருக்கும் போதுதான் அப்பாவின் அருமை புரியலாயிற்று. என் தங்கை மாலதி சிரித்தால் அவள் கன்னத்தில் குழி விழும். சிறு வயதில் எடுத்த அம்மாவின் புகைப்படத்தில் அம்மா இருந்தது போலவே மாலதியும் தோற்றத்தில் இருந்தாள். மிகவும் சுறுசுறுப்பாகவும், இரக்கசுபாவம் மிக்கவளாகவும் இருந்தாள். அம்மாவின் பிரிவுத்துயரை எங்கள் வீட்டில் அவள்தான் தீர்த்து வைத்தாள்.
எங்க வீட்டு சுவர் எல்லாம் இந்திய சுதந்திர தியாகிகளின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தன. காந்தி, நேரு, அரவிந்தர், வாவேசு ஐயர், திலகர், கப்பலோட்டிய சிதம்பரனார், பாரதியார், நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், இராமகிருஸ்ணர், விவேகானந்தர் என்று அவர்களின் புகைப்படங்களே எங்கும் மாட்டப்பட்டிருந்தன. இந்தப் புகைப்படங்களைக் காட்டியே அப்பா எங்களுக்குச் சுதந்திரப் போராட்டக் கதைகள் சொல்வார். அப்பாவின் புத்தக அலுமாரி முழுவதும் சத்தியசோதனை, ரவீந்திரநாத்தின் கவிதைகள், அரவிந்தபோஸ்சின் வாழ்க்கை வரலாறு, பாரதி பாடல்கள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், கஸ்தூரிபாய் என்று அவர்களைப் பற்றிய புத்தகங்கள் எல்லாம் ஆத்மீகத்தையும், அகிம்சையையும் போதிப்பதாக இருந்தன. எங்க வீட்டில் மட்டுமல்ல, அனேகமான தமிழர்களின் வீடுகளில் இப்படியான படங்களே மாட்டப்பட்டிருந்தன. குடும்பப் படங்களைவிட இப்படங்களே பெரிய அளவில் சுவர்களை ஆக்கிரமித்தன. தங்கையின் கவனமெல்லாம் இவற்றின் மீது திரும்பியதாகத் தெரியவில்லை, பதிலாக அவளது கவனம் நேதாஜி மீதே அதிகம் இருந்ததை நான் அவ்வப்போது அவதானித்தேன். வளரும் பருவத்தில் அவள் அவரைப் பற்றிய நூல்களையே அதிகம் விரும்பிப்படித்தாள்.
‘இந்தியாவிற்கு நள்ளிரவில்தான் சுதந்திரம் கிடைத்ததாம், அது உனக்குத் தெரியுமாண்ணா?’ என்று பேச்சு வாக்கில் ஒருநாள் தங்கை குறிப்பிட்டாள்.
‘ஆமாம், அப்பா அவர்களைப் பற்றித்தானே தினமும் போதிக்கிறார்.’ என்றேன்.
‘இந்தியாவின் சுதந்திரத்தில் நேதாஜிக்கும் பங்கிருக்கு தெரியுமா?’
‘தெரியும்!’
‘அப்போ ஏன் அதைச் சிலர் மூடிமறைக்கிறாங்க?’
‘வன்முறையை அவங்க விரும்பவில்லைப் போலும், அதனால்தான் அதை முன்னிலைப்படுத்த அவங்க விரும்பவில்லை.’ என்று பதில் சொன்னேன்.
எனது வாதத்தை அவள் ஏற்கவில்லை என்பது அவளது பார்வையில் புரிந்தது.
ஒருநாள் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் அவளது படுக்கையில் தலையணைக்கு அடியில் இருந்ததை அவதானித்தேன். காலத்தின் கட்டாயத்தில் அவள் வளர்ச்சி;க்கு ஏற்ப அவளது சிந்தனையும் வளர்ச்சியடைந்தது.
‘கடல் கடந்து நாங்கள் இங்கே வாழ்ந்தாலும், ஏனப்பா இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களையே வீட்டுச்சுவர் எல்லாம் மாட்டியிருக்கிறீங்கள்’ என்று ஒரு நாள் இரவு உணவு அருந்தும்போது அப்பாவிடம் கேட்டேன்.
‘கடல்தான் எங்களைப் பிரிக்கிறதே தவிர மொழியால், உணர்வால், பண்பாடு கலாச்சாரத்தால் நாங்கள் ஒன்றாகவே வாழ்கிறோம்’ என்றார் அப்பா.
‘அப்பா இன்னமும் அந்தக் காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ என்பது போன்ற ஒரு அசட்டுச் சிரிப்பு தங்கையிடம் இருந்து உதிர்ந்ததை அப்போது அவதானித்தேன்.
காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி கண்ட கனவு போல, வீடும், காணியும், கிணறும் அதைச் சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் வைத்து அப்பாவும் அம்மாவும் சேர்ந்து தாங்கள் வாழ்ந்த இடத்தை ஒரு சோலையாகவே மாற்றியிருந்தனர். எந்த மண் பச்சைப் பசேலென்று செழித்த பூமியாக் காட்சி தரவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டாரோ, எதற்காக அப்பா பாடுபட்டாரோ அந்த மண் இன்று காய்ந்த பூமியாய்ப் போயிருந்தது.
யாழ்ப்பாணத்துக் கற்பகதரு என்று சொல்லப்பட்ட பனைமரங்கள் அனேகமாகத் தலையிழந்து முண்டங்களாய் நின்றன. மரங்கள் எல்லாம் இராணுவம் ஏவிய செல் விழுந்தும், தண்ணீர் இல்லாமலும் கருகிப் போயிருந்தன. இதைவிட நச்சுப் புகைகளின் தாக்கமும் செடி கொடிகளின் இலைகளில் தெரிந்தன. காங்கேசன்துறை வீதிக்கரையில் மாவிட்டபுரத்தில் இருந்த தோட்டங்களில் வெற்றிலைச் செடிகள் எப்பொழுதும் பச்சைப் பசேலென்று இருக்கும். கடும் பச்சையும், குருத்துப் பச்சையுமாய் முள்முருக்கை மரத்தைச் சுற்றி மேல் நோக்கி அவை படர்ந்திருக்கும். வீதியின் இரு மருங்கும் தோட்டத்தில் படர்ந்திருக்கும் அந்தக் கொடிகளின் அழகும் அழகுதான். அனேகமான முள்முருக்கை மரங்கள் பட்டுப் போயிருந்தன. அந்த வெற்றிலைக் கொடிகள் எல்லாம் நச்சுப் புகையின் தாக்கத்தால் சுருண்டு கீழே விழுந்து கிடந்தன. கொழுகொம்பு கிடைத்தால் மீண்டும் படர்ந்து நிமிர்ந்துவிட அவை தயாராக இருப்பதுபோல் தெரிந்தன. எங்கே எழுந்து நிற்க ஒரு ஊன்றுகோல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்கும் அந்த மண்ணின் மக்களின் வாழ்க்கையும் இப்படித்தான் தலைகீழாய் மாறிப்போயிருந்தன.
யுத்தம் தின்ற எச்சக் காட்சிகளை எல்லாம் பார்க்க நேர்ந்தபோது, காலா காலமாய் யுத்தம் என்பது ஒரு கொலைக் களம் என்பது மட்டுமல்ல அழிவுகளின் ஏகப்பிரதிநிதியாகவும் இருப்பது மனித சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடே என்று நினைக்கத் தோன்றியது. மனித உயிர்கள் மட்டுமல்ல மரங்கள், செடிகள், விலங்குகள், காக்கை குருவியினங்கள் என்று எல்லாமே அழிந்து போவதற்கு இந்த யுத்தமே எப்போதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
ஊரிலே மற்றவர்களைவிட எங்க அப்பா நடையுடை பாவனையில் வித்தியாசமானவராக இருந்தார். மற்ற ஆண்கள், குறிப்பாக ஆசிரியர்கள் எல்லாம் பாண்டும் சேர்ட்டும் அணிந்து பாடசாலைக்கு வந்த காலத்தில் இவர் மட்டும் கதராடை கட்டி காந்திக் குல்லா போட்டிருந்தார். ‘சட்டம்பியார்’ என்றே பெற்றோர்கள் இவரை மரியாதை நிமிர்த்தம் அழைத்தார்கள். மதிப்பும் மரியாதையும் அவரிடம் வைத்திருந்ததால் தங்கள் குறைகளைத் தீர்க்கத் தினமும் எங்க வீடுதேடி அவர்கள் வந்தனர். தங்கள் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக அறிவுரை கேட்க, குடும்பப் பிரச்சனைக்கு புத்திமதி கேட்க, திருமணப் பொருத்தம் பார்க்க, காணிப்பிரச்சனை, எல்லைப் பிரச்சனை என்று தினமும் வீடுதேடிவந்து அப்பாவிற்காகக் காத்திருந்தனர். அரச கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும், அவர்களோடு தொடர்பு கொள்ளவும் அப்பாவையே நம்பிக்கையோடு நாடிவந்தனர். அப்பா அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும், பிறந்து வளர்ந்த சொந்த மண்மீதும், மொழிமீதும் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார்.
இந்தியப் பண்பாடு கலாச்சாரத்தில் ஒன்றிப் போனதால், எப்பொழுதும் கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி, மஞ்சரி போன்ற பத்திரிகைளை வாங்கிப் படித்தார். வீடு முழுவதும் நல்ல தரமான புத்தகங்களால் நிரம்பி வழிந்ததால் எங்களை அறியாமலே எங்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தெற்பத்திருவிழாவின் போது அப்போது கலைமகள் ஆசிரியராக இருந்த அறிஞர் கி.வா. ஜெகநான் அவர்கள் அந்த விழாவில் உரையாற்ற தமிழ் நாட்டில் இருந்து வந்திருந்தார். காங்கேசன்துறைக் கடற்கரையில் நடந்த, பக்தர்களால் நிரம்பி வழிந்த அந்த விழாவில் அப்பா கி.வாவின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்க, இதமான கடற்காற்றைச் சுவாசித்தபடி, அப்பாவின் மடியில் உட்கார்ந்து நான் நிலக்கடலையை உடைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடற்கரை முழுவதும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பளீச்சென்றிருந்தது. இதேபோல அந்த நாட்களில் பல அறிஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சொற்பொழிவாற்ற வருவதுண்டு. சில சமயங்களில் புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து கொண்டு, அந்த நாட்கள் திரும்பவும் வந்திடாதா என்ற ஏக்கத்தோடு நினைத்து பார்ப்பேன்.
விடுதலை வேண்டி ஊரெல்லாம் திரண்டு காந்தியின் அகிம்சை முறையில் சத்தியாக்கிரகம் செய்தபோது அப்பாவும் தன் பங்கிற்கு அதில் கலந்து கொள்ளக் கதராடை அணிந்து காந்திக் குல்லாவோடு பயபக்தியாகச் சென்றார். யாழ்பாணக்கச்சேரி என்று சொல்லப்பட்ட அரசகரும அலுவலகத்திற்கு முன்னால் ஏனைய தமிழ் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து அகிம்சை முறையில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தினார். அவருடைய நெற்றியிலே இருந்த தழும்பு ஏன் எற்பட்டது என்று காரணம் கேட்டபோதுதான், அகிம்சை முறையில் நடந்த ஒத்துழையாமை இயக்க நடவடிக்கையின்போது குண்டர்கள் கூட்டம் கற்களால் தாக்கிய போது ஏற்பட்ட தழும்புதான் அது என்பதை அவர் வேதனையோடு ஏற்றுக் கொண்டார்.
‘ஏனப்பா நிராயுத பாணியான உங்களை அவங்க தாக்கிய போது கோழைபோல முதுகு காட்டி ஓடினீங்களாப்பா?’ என்று தங்கை மாலதி கேட்டபோது அவரால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.
‘அதற்காக வன்முறையை ஆதரிக்கச் சொல்கிறாயாம்மா?’ என்று மட்டும் எதிர்க் கேள்வி கேட்டுத் தங்கையின் வாயை அடைத்துவிட்டார்.
அந்த நேரம் தங்கை மாலதி மௌனமாகிவிட்டாலும், இனம் புரியாத ஏதோ ஒரு வகை எழுச்சியை நோக்கி அவளின் சிந்தனை திரும்புவதை அவ்வப்போது நான் அவதானித்தேன்.
தாயுமானவர் - 3
குரு அரவிந்தன்
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தமிழ் மண்ணில் அகிம்சை நிலைப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது. அப்பாவும் இது போல பலதடவைகள் அகிம்சை முறைப்போராட்டத்தில் பங்கு பற்றினார். ஓவ்வொரு முறையும் தடியடி வாங்குவது, ஜெயிலுக்குப் போவது என்று ஒழுங்காக நடந்ததே தவிர இவர்களின் கோரிக்கை ஒன்றுமே ஆட்சியாளரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியாவதும் எதிர்க்கட்சி ஆட்சியாளராவதும் மாறிமாறி நடந்ததே தவிர யாரும் சிறுபான்மை இனத்தவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக இல்லை. ஜனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும் பெரும்பான்மை இனத்தவரே எப்பொழுதும் ஆட்சியாளராக இருந்தார்கள். அப்பாவின் அகிம்சை முறையிலான போராட்டத் தோல்விகள் மாலதியை மனதளவில் பாதித்திருக்க வேண்டும். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல என்று அப்பா அடிக்கடி எங்களுக்கு நினைவு படுத்தினாலும், எந்த ஒரு பலனும் தராத இத்தகைய அகிம்சை முறைப் போராட்டங்களை இளம் இரத்தம் ஏற்றுக் கொள்வதாக இல்லை.
அகிம்சை பற்றி அப்பா போதனை செய்யும் போதெல்லாம் அவள் அப்பாவின் நெற்றித் தழும்பைத்தான் பார்ப்பாள். அவளது பார்வையை அப்பா புரிந்து கொண்டு மௌனமாகி விடுவார். ஆனாலும் அவள் அப்பாவை அடிக்கடி சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாள்.
‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வந்தது..
நெற்றி மேலே காயமொன்று வைத்துவிட்டுப் போனது’
என்று அவள் வாய்க்குள் முணுமுணுப்பதிலிருந்து அப்பாவிற்குப் புரிந்து விடும்.
‘அகிம்சை என்றால் என்ன என்று உனக்கு இப்போ புரியாதம்மா, என்றாவது ஒருநாள் இரத்தம் சிந்தும் போது நீ புரிஞ்சு கொள்வாய்’ அப்பா அதற்கும் சாந்தமாய்ப் பதில் சொல்வார்.
‘இந்தக் காலத்திற்கு இதெல்லாம் சரிவராதப்பா’ என்பாள் மாலதி.
மாலதி வளரவளர அவளது போக்கில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அப்பா அதைக் கவனித்தாரோ தெரியவில்லை, ஆனால் நான் அவதானித்தேன். அப்பாவின் அகிம்சைக் கோட்பாட்டோடு தங்கை மாலதிக்கு ஒத்துப் போகவில்லை என்பதை நான் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டேன்.
அப்பா எப்படி இராசராச சோழனைப் (கி.பி 985 – 1014) பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தாரோ அதேபோல தங்கை மாலதி எல்லாள மன்னன் பற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பாள். ஈழத்தின் பல கிராமங்களைத் தஞ்சைக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தது பற்றியும், திருவாலங்காட்டுப் பட்டயங்கள் பற்றியும் அப்பா சொல்லிக் காட்டுவார். எல்லாள மன்னன்மீது (கிமு 145 - 101) தங்கைக்கு ஒரு வித பக்தி இருந்தது. அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்பதால் அந்த மன்னனை வீரகாவியம் படைத்தாக தங்கை பெருமைப்பட்டுக் கொள்வாள். அனுராதபுர ஆட்சியின்போது எட்டுத் தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்குமேல் ஆட்சி புரிந்ததைச் சொல்லிக்காட்டுவாள். 22 வருடங்கள் ஆட்சி செய்த ஈழசேனனையும், 44 வருடங்கள் ஆட்சி செய்த அவனது மகன் எல்லாளனைப் பற்றியும் புகழ்வாள்.
‘அண்ணா, எல்லாள மன்னன் வஞ்சனையால்தான் தோற்கடிக்கப்பட்டான் என்பது உனக்குத் தெரியுமா?’ என்றாள் ஒரு நாள்.
‘துட்டகைமுனுவால் தோற்கடிக்கப்பட்டது தெரியும் ஆனால் வஞ்சனையால் தோற்கடிக்கப்பட்டான் என்பது எனக்குத் தெரியாது.’ என்றேன்.
‘எல்லாள மன்னன் குதிரைச்சமர் யானைச்சமர் எல்லாவற்றிலுமே சிறந்த வீரன். எனவேதான் அவற்றைத் தவிர்த்து உண்மையான வீரன் என்றால் தரையிலே நின்று சண்டை பிடிப்போமா என்று துட்டகைமுணு சவால் விட்டான். தள்ளாத வயதிலும் விட்டுக் கொடுக்காது இளைஞனான துட்டகைமுணுவோடு தரையிலே நின்று சண்டை போட்டதால்தான் எல்லாள மன்னன் தோல்வியைத் தழுவிக் கொண்டான். சுருங்கச் சொன்னால் வஞ்சக நோக்கம் கொண்ட ஒருவனால் ஏமாற்றப்பட்டான்’ என்றாள் மாலதி.
‘எல்லாள மன்னன் இறந்தபோது நாட்டு மக்கள் அவனுக்குக் கோயில் கட்டிக் கும்பிட்டதாகச் சரித்திரம் கூறுகிறது. அனுராதபுரத்தில் தூர்ந்துபோன அந்தக் கோயில் இப்பொழுதும் இருக்கிறது. எல்லாள மன்னன் இறந்தபோது ஈழத்தமிழனின் சரித்திரமும் முடிந்து விட்டதாகவே பேசப்பட்டது. தமிழன் பாரம்பரியமாய் பரம்பரையாய் வாழ்ந்த மண்ணின் சரித்திரம் முடியவில்லை. முடியப்போவதும் இல்லை. அதன்பின் பல தமிழ் மன்னர்கள் வந்து போய்விட்டார்கள். வருவதும் போவதும் தொடரத்தான் செய்யும்’ என்று அப்பாவோடு வாதாடுவாள்.
ஈழத்து தமிழ் மன்னர்கள் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருந்தாள். தகுந்த ஆதாரங்களோடு அவர்கள் ஆண்ட காலங்களை ஆவணப்படுத்தியிருந்தாள். தொன்று தொட்டு பாரம்பரியமாய் வாழ்ந்த எங்கள் இனம் எந்தக் காரணம் கொண்டும் அழிந்து போகக்கூடாது, மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்று மொழிக்கு முதன்மை கொடுத்து வாதாடுவாள்.
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண் என்பதால் அப்பா அந்த மண்ணைவிட்டு வெளியே வர விரும்பவில்லை. அம்மா ஒரு சங்கீத ஆசிரியையாக இருந்தாள். அப்பா ஒரு சங்கீதப் பிரியர். அதனால் சங்கீத ஞானம் அம்மாவிடம் மட்டுமல்ல மாலதியிடமும் அந்த இசை ஞானம் இருந்தது.
‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே’
என்று பாரதி பாடலைத் தங்கை மாலதி எப்போதாவது பாடும்போது அப்பாவும் சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவார். ‘எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்தது மிந்நாடே.. அவர் கன்னியராகி நிலவினிலாடி களித்தது மிந்நாடே..’ திடீரென அம்மாவின் நினைவுகளில் மூழ்கி உணர்ச்சி வசப்பட்டு அவர் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். அப்போதெல்லாம் மாலதிதான் அவருக்கு ஆறுதல் சொல்வாள்.
‘அப்பா இப்படியே பாடிப்பாடி எத்தனை நாளைக்கு அழுதிட்டே இருப்பீங்க?’
‘என்னம்மா செய்யிறது, உன்னுடைய அம்மா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து வாழ்ந்த வீடு இது, இதை எல்லாம் விட்டிட்டு எப்படியம்மா நாங்க தனியே போறது. அம்மாவின் நினைவுகளைத் தூக்கி எறிஞ்சிட முடியுமாம்மா?’ சொந்த வீட்டை விட்டுப் பிரிந்து செல்ல அவரால் முடியவில்லை.
‘இங்கே இருந்தாக் கொன்று போடுவாங்கப்பா, இந்தப் பக்கம் இன்னும் செல் வந்து விழவில்லை. இராணுவம் நெருங்கீட்டு இருக்கிறாங்களப்பா, எந்தநேரமும் அவங்க இந்தப் பக்கம் நகரலாமப்பா.’
‘எனக்கு என்னைப்பற்றிப் பயமில்லையம்மா, அண்ணாதான் வளர்ந்திட்டான். அவன் இங்கே இருந்தால் அவனது உயிருக்கு ஆபத்து’
‘என்னப்பா சொல்லுறீங்க, என்னோட கூட்டாளிங்க எல்லாம் இங்கேதானே இருக்கிறாங்கப்பா’ என்றேன்.
‘யாருக்கு எப்ப என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது மகனே, அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.’ என்றார் அப்பா தீர்க்கமாக.
‘என்னப்பா?’ என்றே அவசரமாக.
‘அம்மாவின் கடைசி ஆசையை நீதான் நிறைவேற்றி வைக்க வேண்டும்’
‘சொல்லுங்கப்பா!’
‘நீ படிச்சு நல்லாய் வரவேணும். சமுதாயம் மதிக்கக்கூடிய பொறுப்புள்ளவனாக வாழவேண்டும்.’
‘நான் படிச்சுக் கொண்டுதானே இருக்கிறேன்.’
‘நாட்டு நிலைமை சரியில்லை. இங்கே இருந்து படிக்கச் சரிவராது, அதனாலே நீ வெளிநாடு போகவேண்டும்.’
‘வெளிநாட்டிற்கா? நானா, என்னப்பா சொல்லுறீங்க?’
‘நீ வெளிநாடு போய்ப் படிச்சால்தான் மாலதியையும் அங்கே கூப்பிடலாம். இரண்டு பேரையும் கரை சேர்த்திட்டால் நான் நிம்மதியாய் கண் மூடிடுவேன்’
அப்பாவின் கனவுகள் எல்லாம் இப்படித்தான் தொடர்ந்தன. எங்களைக் கரை சேர்ப்பதிலேயே அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். இறுதி யுத்தம் தொடங்கு முன்பாகவே என்னை வெளிநாட்டிற்குப் படிப்பதற்காக அனுப்பிவிட்டார்.
அப்பாவின் விருப்பப்படியே மேற்படிப்பிற்காக நான் வெளிநாடு சென்றாலும் என்னால் கவனம் செலுத்திப் படிக்க முடியவில்லை. என் கவனம் எல்லாம் ஊரிலேயே இருந்தது. அப்பாவைப்பற்றிய, தங்கையைப் பற்றிய கவலையோடும் ஏக்கத்தோடும் தினம் தினம் காலம் கழிந்தது. தினசரி வரும் அவலச் செய்திகள், அவர்களை அங்கே தனியே விட்டு விட்டு நான் மட்டும் கோழை போல இங்கே ஓடி வந்திருக்கக்கூடாதோ என்று நினைத்துப் பார்க்கவும் வைத்தது. எங்கள் குடும்பம் போலவே அந்த மண்ணில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களின் நிலைமையும் கவலைக்குரியதாகவே இருந்தது. வெளிநாட்டில் இருந்து இப்படிப் பதட்டப் படுவதால் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. தொடக்கத்தில் எங்கேயாவது குண்டு வெடித்தால் பதட்டப்பட்ட மனசு தினம் தினம் அங்கே குண்டு வெடிப்பதும், அப்பாவி மக்கள் இறப்பதும் ஒரு நிகழ்ச்சியான பிறகு எனக்கும் அது தினசரி நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது.
இனிமேலும் அங்கே தங்க முடியாது என்ற நிலையில், சொந்த வீட்டைவிட்டுப் பிரியும் கடைசி நேரத்தில் ‘போய்வருகிறேன்’ என்றபடி அப்பா வாசற்படியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றித் தேம்பி அழுத காட்சி மாலதியை நிறையவே பாதித்திருந்தது. மண்ணை, மரத்தை, ஆடுமாட்டை என்று ஒன்றையுமே மிச்சம் விடாமல் அவர் பிரிவுத் துயரோடு விடை பெற்ற கடைசி நாட்களில்கூட ‘போய் வருகிறேன்’ என்று நம்பிக்கையோடுதான் புறப்பட்டாராம். அந்த நம்பிக்கை அவரிடம் கடைசிவரை இருந்தாலும், பிறந்து வளர்ந்த சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்டபோது அவர் துடித்துப் போய்விட்டார். வீட்டை விட்டுப் பிரிந்தாலும் தாய்மண்ணை விட்டுப் பிரிய அவர் மறுத்து விட்டார்.
தாயுமானவர் - 4
குரு அரவிந்தன்
பிறந்து வளர்ந்த சொந்த மண்ணிலேயே அகதியாக்கப் படுவோம் என்று அப்பா ஒருபோதும் நினைத்ததில்லை. ‘முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே’ என்ற பாரதியின் பாடல்களுக்காகவே பாரதிமீது காதல் கொண்ட அப்பாவிற்கு இப்படி ஒரு நிலை வந்த போது துடித்துப் போய்விட்டார். தங்கையின் வற்புறுத்தலால் சொந்த வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்தாலும் தாய்மண்ணை விட்டுப் பிரிய அவரது மனம் இடம் தரவில்லை. சொந்த வீட்டிற்கு மீண்டும் திரும்பிச் செல்வேன் என்ற நம்பிக்கையோடுதான் அவர் தற்காலிகமாக இடம் பெயர்ந்திருந்தார். மண்மீது கொண்ட பாசத்தால் சொந்த மண்ணை, தாய்மண்ணை விட்டுப் பிரியமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பலரில் அப்பாவும் ஒருவராக இருந்தார்.
கிளிநொச்சி பாடசாலையில் கிபீர் விமானங்கள் குண்டு வீசியபோது அதைக் கேள்விப்பட்ட அப்பா ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தார். தலைமை ஆசிரியர் என்ற வகையில் குழந்தைகளோடு பழகி அவர்களின் உளவியலை நன்றாக அறிந்து வைத்திருந்தவர் அப்பா. குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்ற நம்பிக்கையில், பள்ளியை ஒரு கோயிலாகத்தான் அவர் நினைத்து வாழ்ந்திருந்தார். எதையுமே பதட்டப்படாமல் நிதானமாக எடுத்துக் கொள்ளும் அப்பாவின் மனதை அந்த நிகழ்வு நிறையவே பாதித்திருந்தது. அப்பாவை மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க ஒவ்வொருவரையும் அது பாதித்திருந்தது. இயலாமையால் ஒவ்வொருவரையும் துடிக்கவைத்தது. அதன் தாக்கமோ என்னவோ, எப்படியோ யாரையோ பிடிச்சு அவசரமாக தங்கையைக் கொண்டு எழுதி எனக்கு ஒரு கடிதம் போட்டிருந்தார்.
‘கிளிநொச்சி வான்பரப்பில் இருந்து குண்டு போட்டாங்களாம். கேள்விப்பட்டியோ தெரியாது. குழந்தை குட்டின்னு நிறைப்பேர் இறந்திட்டாங்களாம். எல்லாமே பள்ளிக்கூடப் பிள்ளைங்க, கேள்விப்பட்டதில் இருந்து மாலதி தவித்துப் போயிருக்கிறாள். இங்க நான் ஒரு குமரை வச்சுக் கொண்டு தவிக்கிற தவிப்பு யாருக்குத் தெரியும். எப்படியாவது இவளைக் கரை சேர்த்திட்டா நான் நிம்மதியாய்ப் போயிடுவேன். நிம்மதி இழந்ததால தூக்கம் போச்சு. இப்ப இவளையும் இழந்திடுவேனோ என்று எனக்குப் பயமாயிருக்கு.
குண்டு வீச்சில் பிள்ளைகள் செத்துப் போனதைக் கேள்விப்பட்டதும், எங்க பக்கத்து வீட்டுப் பார்வதிப் பாட்டி தாங்க முடியாமல் தெரு மண் அள்ளித் திட்டீட்டா. மனசெரிஞ்சு யாராவது திட்டினா அது பலிச்சிடும்ணு பெரியவங்க சொல்லுவாங்க. எய்தவன் இருக்க நாம அம்பை நோகலாமா? அவசரப்பட்டிட்டாவோ என்று நினைக்கிறேன். எனக்கு மனசு கேக்கல, எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதோ தெரியாது. ஆண்டவன்தான் தப்புப் பண்ணுறவங்களை மன்னிக்கவேணும்’ - அப்பா
அப்பாவின் அந்தக் கடிதத்திலேயே மிகுதியாய் இருந்த வெற்றிடத்தில் மாலதி குணுக்கி எழுதியிருந்தாள்.
‘ஆண்டவன்தான் தப்புப் பண்ணுறவங்களைத் தண்டிக்கணும்’ என்று அப்பா எழுதுவார் என்று நினைச்சா அவங்களை மன்னிக்கணும் என்றல்லவா எழுதியிருக்கிறார். இப்படி மன்னிச்சு மன்னிச்சே அப்பாவின் காலம் போயிடுமோ தெரியாது. அகிம்சையும் காந்தியமும் அவரோடு கூடப்பிறந்திருக்கலாம். அல்லது அப்படியே வளர்ந்திருக்கலாம். ஒருவேளை எங்க வீட்டுச் சுவரிலே மாட்டியிருந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் அகிம்சை முறையிலான போராட்டம் இவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களின் வழியைப் பின்பற்றியே சுதந்திரம் பெற்றுவிடலாம் என்று அப்பா கனவு கண்டு கொண்டிருக்கிறாரோ தெரியாது? அகிம்சா மூர்த்தி மகாத்மா காந்தியின் மரணத்தோடு அகிம்சையும் மரணமாகிவிட்டது என்பது அப்பாவிற்குத் தெரியாதா? இத்தனை நாட்களில் இந்த மண்ணில் ஏற்பட்ட அனுபவங்கள் அவருக்குப் போதாதா? அதன் பின் நடந்த அகிம்சை முறையிலான எந்தப் போராட்டமாவது வெற்றி பெற்றதாகச் சரித்திரம் இருக்கிறதா? ஈவு இரக்கமின்றி எத்தனை குழந்தைகளைக் கிபீர் விமானத்திலிருந்து குண்டு போட்டுக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஏன் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குழந்தைகளின் அவலக்குரல் இவர்களுக்குக் கேட்கவில்லையா? அவர்களுடைய குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்பதால் மௌனம் காக்கிறார்களா?
ஒரு இனத்தின் மீது வெறுப்பிருக்கலாம் அதற்காகப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப்பார்க்காமல் கொலை வெறியோடு பாடசாலை மீது குண்டு வீசியவனை எப்படி எங்களால் மன்னிக்க முடியும்? அண்ணா நீ எப்பவுமே அப்பாவின் பக்கம்தான் என்று எனக்குத் தெரியும். அப்பாவின் போதனைகள் உனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அகிம்சை, சாத்வீகம் என்று சொல்லிக் கொண்டே, உங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு நீங்கள் காலத்தைக் கடத்தி விடுவீர்கள். என்னால் முடியாதப்பா, எம்மினம் அழிவதைப் பார்த்துக் கொண்டு, சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு இனிமேலும் மௌனமாக இருக்கமாட்டேன். தீமை பிறர்கள்; செய்ய ஆவி பெரிதென்றெண்ணி அஞ்சிக் கிடக்க மாட்டேன். – அன்புத் தங்கை மாலதி.
அப்பா சொல்லிக் கொடுத்த பாரதி பாடல்களின் தாக்கம் அவளது கடிதத்தில் தெரிந்தது. மன்னிக்க முடியும் என்று அப்பா மன்னித்தார். அன்புதான் உலக மகாசக்தி என்று அப்பா நம்பினார். எந்தப் பட்டறையில் இதை எல்லாம் அப்பா கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை. அவருடைய உலகம் முற்றிலும் வேறாக இருந்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒருவரா என்று இளைஞர் கூட்டம் அவரை ஏளனத்தோடு பார்த்தது.
மாலதியை இழந்திடுவேனோ என்று அப்பா பயந்தது போலவே ஒரு நாள் அந்த நிகழ்வு நடந்து விட்டது. ஆமாம், உண்மையாகவே மாலதி தொலைந்து போயிருந்தாள். பாடசாலையால் நெடு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையே என்று அப்பா பதட்டப்பட்டுத் தேடியபோதுதான் அவள் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம் அப்பாவின் கண்களில் பட்டிருக்கிறது. மாலதி இயக்கத்தில் இணையப்போவதாகச் சொல்லிவிட்டு வீட்டைவிட்டுப் போய்விட்டாள். அப்பா எவ்வளவோ முயற்சி செய்தும் அவள் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. தாய்மண்ணுக்காக, இனத்திற்காக, மொழிக்காக விடுதலை வேண்டிப் போய்விட்டாள் என்று ஊர் பேசிக்கொண்டது.
வீட்டைவிட்டு மாலதி இயக்கத்திற்குப் போனபோது அந்தப் பிரிவுத்துயரை அப்பாவால் தாங்க முடியாததாக இருந்தது. இவ்வளவு கட்டுப்பாட்டோடு அடக்க ஒடுக்கமாய், ஒழுக்கத்தோடு வளர்ந்து வந்த பெண் எப்படிக் கட்டுப்பாட்டை மீறினாள் என்ற அதிர்ச்சிதான்; அப்பாவிடம் மிஞ்சி இருந்தது. தங்கையின் பிரிவும் எங்கள் துயரின் ஒரு தொடர் அங்கம் போலாகிவிட்டது. எங்கே தவறு நடந்தது என்பதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தாயில்லாப் பிள்ளைகள் என்று எந்தக் குறையும் வைக்காமல் வளர்ந்த தனது பிள்ளைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையும் அவரது ஏமாற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியே ஏமாந்தவர் அப்பா.
தன் வளர்ப்பில் எங்கோ தவறு செய்து விட்ட குற்ற உணர்வில் அப்பா தவித்துப் போய்விட்டார். அவளாகவே விரும்பித்தான் சென்றாள் என்பதால் அவள் இனித் திரும்பி வரமாட்டாள் என்பது அப்பாவிற்குப் புரிந்து போய்விட்டது. அவள் வீட்டைவிட்டுப் போனது சரியா பிழையா என்பதை நான் ஆராயவில்லை. பட்டிமன்றம் போட்டு விவாதிக்கவும் தயாராக இல்லை. எனது கவலை எல்லாம் அப்பா தனித்துப் போய்விட்டாரே என்பதில்தான் இருந்தது. நான் புலம் பெயர்ந்த மண்ணிலும், மாலதி இயக்க முகாமிலுமாய் அப்பாவை விட்டுப் பிரிந்திருந்தோம். கடைசிக் காலத்தில் தசரதமன்னன் போல அப்பாவும் புத்திர சோகத்தால் வாடவேண்டும் என்ற நியதியோ புரியவில்லை.
‘என்ன பாட்டி, இங்கேயிருந்து ஒரு பிடி மண் எடுத்து தூற்றினால் அங்கே மேலே பறக்கிற விமானத்தை அடிச்சிடுமா’ என்று பார்வதிப்பாட்டி இயலாமையால் அன்று மண் எடுத்துத் திட்டியபோது தங்கை மாலதி பாட்டியைக் கேலி செய்ததாக அன்று கடிதத்தில் எழுதியிருந்தது இன்று என் நினைவிற்கு வந்தது. அன்று பாடசாலைப் பிள்ளைகள் அநியாயமாகக் கொல்லப்பட்டது பலரின் மனதையும் பாதித்திருந்தது. அந்த சோகநிகழ்வு நினைவை விட்டு அழியாமல் ஒவ்வொருவர் மனதிலும் எங்கேயோ உறுத்திக் கொண்டே இருந்தது.
‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பதைப் பிறிதொருநாளில் அதே கிபீர் விமானம் விபத்துக்குள்ளாகி அந்த விமான ஓட்டியின் உடல் சிதறிச் செத்தபோது ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பது எவ்வளவு உண்மை, அநியாயம் செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிரூபணமாயிடிச்சு என்று பலரும் பேசிக் கொண்டார்கள். இயலாமையின் தவிப்பிற்குத் தீனி கிடைத்தது போல, அந்த ஒரு தனி மனிதனின் மரணத்தில், பாதிக்கப்பட்ட ஆயிரமாயிரம் பேர் மகிழ்ச்சியடைந்ததாகக் காட்டிக்கொண்டதில் அவர்களுக்குள் ஒருவித ஆத்மதிருப்தி. இதைப்போலத்தான், அரசு தண்டிக்காவிட்டாலும் ஒவ்வொருவரையும் தெய்வம் தண்டிக்கும் என்று அவலப்பட்டவர்கள் சமாதானம் அடைந்தார்கள். ஆனாலும் அந்தச் செய்தியைக் கேட்க அன்று அந்த விமான ஓட்டியைத் திட்டித் தீர்த்த பார்வதிப் பாட்டியோ, மனிதாபிமானத்தோடு மன்னித்து மறந்துவிட்ட அப்பாவோ இன்று உயிரோடு இல்லை. நேற்றிருந்தார் இன்றில்லை என்பதும் நியதிதானே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.