அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்! தீப ஒளித் திருநாள் என்றும் தீபாவளியை அழைப்பர். இந்து மதத்தவர்களால் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை இதுவாகும். மனிதவாழ்க்கையில் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இப்பண்டிகை இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மியான்மர், பிஜி தீவு, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. இப்போது புலம்பெயர்ந்த சில நாடுகளிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான ஆண்டுகளில் பொதுவாக தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகின்றது. தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்குப் புராணக்கதைகள், இராமாயணக் கதைகள் போன்றவற்றின் மூலம் பல காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். அறிவியல் வாதிகள் பொருத்தமற்ற புராணக் கதைகள் என்றும் வாதிடுவர். புராணங்களில் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட தீபத்திருநாளையே இன்று தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் 2021 நவெம்பர் மாதம் 4 திகதி வருவதாக நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலாச்சார நாடாகிய கனடாவில், அவர்களின் நாட்காட்டியின் குறிப்புக்கு ஏற்ப, வெவ்வேறு தினங்களில் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. சிலர் ‘தீபாபலி’ என்றும் இத்திருநாளைக் குறிப்பிடுவர்.
தீபாவளி அன்று தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள் அதிகாலையில் தூக்கத்தால் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புப் பலகாரங்களைப் பரிமாறியும் கொள்வர். சிலர் விருந்தினருக்குப் பரிசுகள் தந்தும் மகிழ்வர். பெரியோரை வணங்கி அவர்களி;டம் இருந்து ஆசீர்வாதம் பெறுவர். தீப ஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ போன்றவற்றைக் கொளுத்தி மகிழ்வது மக்களின் வழக்கமாகும்.
இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். 1577 ஆம் ஆண்டு இந்தியாவில் பொற்கோயில் கட்டுமான பணிகள் தொடங்கிய தினத்தையே சீக்கியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.
வாழ்க்கையில் சூழ்ந்திருக்கும் துன்பம் என்ற இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் உதயமாக வேண்டும் என்பதற்காகவே மக்கள் அனைவரும் இறைவழிபாடு செய்கிறார்கள். அன்றைய தினம் அகத்தில் உள்ள இருள் என்ற அழுக்கை அகற்றி, ஒளி என்ற தூய்மையைப் பெறுவதே இதன் நோக்கமாகும். உற்றார், உறவினர், குடும்ப நண்பர்கள் ஒன்றுகூடும் தினமாகவும் தீபாவளித் திருநாள் இருக்கின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.