- அமரர் கமலா பாசின் (Kamla Bhasin, 24 ஏப்ரல் 1946 – 25 செப்டம்பர் 2021) இந்தியாவின் முக்கிய ஆளுமைகளிலொருவர். பெண்ணியவாதி, கவிஞர், எழுத்தாளர், சமூக அறிவியலாளர் எனப் பன்முக ஆளுமைகள் மிக்கவராக விளங்கியவர். பாலினம், கல்வி, மனித வளர்ச்சி, ஊடகங்கள் பற்றிய துறைகளில் கவனத்தைச் செலுத்தியவர். சங்கத் என்ற தெற்காசியப் பெண்ணிய வலை அமைப்பை நிறுவியவர். பெண்ணியம் என்பது மேலைத்தேசக் கோட்பாடு என்பதை நிராகரித்தவர் கமலா பாசின். இந்தியப் பெண்ணியமானது தனது போராட்டங்களாலும், இன்னல்களாலும் உருவானதென்று கருதியவர். பெண்ணியம் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான யுத்தம் அல்ல என்பது இவரது எண்ணம். பெண்ணியமானது ஆணை உயர்த்தி அவனுக்கு அதிகாரம் கொடுக்கும் கருதுகோளுக்கும், சம உரிமையை வலியுறுத்தும் கருதுகோளுக்குமிடையிலான , இரு கருதுகோள்களுக்குமிடையிலான போராட்டமே பெண்ணியம் என்றிவர் கருதினார். - பதிவுகள்.காம் -
படிப்பா, நீ ஏன் படிக்க வேண்டும்?
தந்தை மகளிடம் கேட்டார்.
என் மகன்கள் பலர் படிப்பார்கள்.
பெண்ணே! நீ ஏன் படிக்க வேண்டும்?
நான் ஏன் படிக்க வேண்டும்?
நீங்கள் கேட்பதால் பதிலளிக்கின்றேன்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.
பல நாள் மறுக்கப்பட்ட உரிமையென்பதால், நான் படிக்க வேண்டும்.
என் கனவுகள் சிறகடிக்க, நான் படிக்க வேண்டும்.
அறிவு புதிய வெளிச்சம் பாய்ச்சுமென்பதால், நான் படிக்க வேண்டும்.
போர்கள் பல புரிய வேண்டுமென்பதால், நான் படிக்க வேண்டும்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.
புறகணிப்பைத் தவிர்க்க, நான் படிக்க வேண்டும்.
சுதந்திரத்தைப் பெற, நான் படிக்க வேண்டும்.
இயலாமையை எதிர்க்கொள்ள, நான் படிக்க வேண்டும்.
உத்வேகத்தை அறிய, நான் படிக்க வேண்டும்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.
ஆணின் வன்மையைத் தகர்த்தெரிய, நான் படிக்க வேண்டும்.
என் மௌனத்தை முடித்துக்கொள்ள, நான் படிக்க வேண்டும்.
ஆண் ஆதிக்கத்தை எதிர்க்க, நான் படிக்க வேண்டும்.
அதிகார படிகளை தூள் தூளாக்க, நான் படிக்க வேண்டும்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.
ஏற்ப்புடைய நம்பிக்கையை ஏற்படுத்த, நான் படிக்க வேண்டும்.
நியாயமான சட்டங்களை உருவாக்க, நான் படிக்க வேண்டும்.
நுற்றாண்டாகப் படிந்த தூசைத் தட்ட, நான் படிக்க வேண்டும்.
எதிர்க்கப்படவேண்டியதை எதிர்க்க, நான் படிக்க, வேண்டும்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.
சரி தவறு என பகுத்தறிய, நான் படிக்க வேண்டும்.
வலிமையான குரல் எழும்ப, நான் படிக்க வேண்டும்.
பெண்ணிய பாடல்கள் எழுத, நான் படிக்க வேண்டும்.
பெண்களுக்கான உலகம் அமைக்க, நான் படிக்க வேண்டும்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர்: முனைவர் பாரதி ஹரிசங்கர்.
தற்போது சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'பெண்கள் கல்வி'க்கான பிரிவின் தலைவராகப் பணியாற்றும் முனைவர் பாரதி ஹரிசங்கர் எவ்வித ஆரவாரமுமில்லாமல் மொழிபெயர்ப்புத் துறையில் மிகவும் பயனுள்ள பங்களிப்பினைத் தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றிவருகின்றார். ஏற்கனவே நூறுக்கும் அதிகமான இவரது நூல்கள், மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றிய இவரது மூன்று நூல்களை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பாலின ஆய்வுகள், பின் காலனித்துவம் இலக்கியம், மெய்நிகர் கல்விமுறைகள் (online pedagogies) ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் முனைவர் பாரதி ஹரிசங்கர் Re-defining Feminisms (பெண்ணியத்தை மறுவரைசெய்தல்) என்னும் தொகுப்பின் இணையாசிரியர்களிலொருவர். (Shakti : Multidisciplinary Perspectives on Women’s Empowerment in India என்னும் ஆங்கில நூலின் தொகுப்பாசிரியர்களிலொருவர். இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் பதிவுகள் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன. . இவரது புலம் பெயர் தமிழர்கள் பற்றிய கட்டுரையொன்று The Literary Criterionஇல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கனடியப் பழங்குடி மக்களின் கவிதைகள் பலவற்றை இவர் தமிழுக்குக்கொண்டு வந்துள்ளார்.