கேள்வி: சென்றமுறை உங்களை கவர்ந்த உலக ஓவியர்களின் வரிசையில் பலரையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் முதலாவதாக இடம் பிடித்திருந்தவர் ஜோன் கொன்ஸ்டபில். அவரைப் பற்றி வாதிப்பதற்கு முன் இரண்டு கேள்விகள் உண்டு. முதலாவதாக, நீங்கள் குறிப்பிட்ட, ஓவியர்களின் பெரும்பாலான ஓவியங்கள் ரவிவர்மா காலத்து ஓவியங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, வான்கோவின் ஓவியம் மிக மிக வித்தியாசப்பட்டு காணப்படுகின்றது. இவற்றை ரசிப்பதற்கு அல்லது இவற்றின் உள்ளார்ந்த மதிப்பை சரியாக போற்றுவதற்கு தனியான ஒரு கற்கை – அல்லது பயிற்சி, தேவையானது என்று கருதுகின்றீர்களா?
பதில்: இல்லை. ஆனால், சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல சிறந்த ஓவியங்களைப் பார்த்து, பார்த்து பரீட்சயம் அடைய அடைய அவற்றால் நீங்கள் பாதிக்கப்படுவது நிச்சயமானதாகின்றது. பொதுவில் சாதாரண புகைப்படங்கள் போன்றே, ஓவியங்களையும் காண பழக்கப்பட்டுவிட்ட நாங்கள் இவற்றை மேலும் ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. மேலைத்தேய ஓவிய காட்சி கூடங்களில் எல்லாம் ஒவ்வொரு ஓவியத்திலிருந்தும் கிட்டத்தட்ட ஒரு முப்பது அடி தள்ளி இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்கள் இவ்இருக்கைகளில் அமர்ந்து குறித்த ஓவியங்களை ஓர் அரைமணி நேரம் செலவழித்து பார்க்கின்றார்கள். அவ்வோவியத்தின் மரங்கள், பூமி, புற்றரை, ஆறுகள், மலர்கள் இவை அனைத்துமே பார்வையாளர்களோடு பேசுகின்றன. ஏதேதோ கூறுகின்றன.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. உதாரணமாக, பகல் வேளைகளில் ஒரு மலையை அல்லது ஒரு மரத்தை நீங்கள் காணுகின்றீர்கள். மலை தெளிவாக தெரிகின்றது. ஆனால் அதே மலையை அல்லது மரத்தை, மாலையின், இருட்டும் வேளையில் ஒரு கருக்கலில் காணுகின்றீர்கள். அதன் ஓரங்கள் தெளிவுற அமைவதில்லை. இருந்தும், ஒரு கவிதையை போன்ற ஒரு உணர்வு அங்கே தோற்றம் கொடுக்க முற்படுகின்றது. அதனை பார்க்கும் பார்வையாளனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் ஊற்றெடுக்கின்றன. அக்கருக்கல் கூறும் கவிதை என்ன? இதைத்தான் வான்கோ போன்ற ஓவியர்கள் தத்தமது ஓவியங்களில் முன்னிறுத்த முனைந்தனர். தனது ஓவியங்களை அவர்கள் பேச வைத்தார்கள். பாட வைத்தார்கள் - கவிதைகளாய் உருவாக்க முயற்சித்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
கடந்த முறை நான் குறிப்பிட்ட அக்ரோசோவாவின் படத்தில் ((Dreams)இல் அவர் ஒருபடி மேலேயே சென்றுவிட்டார். வான்கோவின் படங்கள், அக்ரோசோவாவின் திரைப்பட காட்சிகளில் இயங்கத்தொடங்குகின்றன. சில படங்களில் அக்ரோசோவா குறித்த படத்தினுள் (ஓவியத்தினுள்) குதித்து, இறங்கி, நடந்து, வான்கோவை தேடி அலைந்து பின் இறுதியில் ஆச்சரியப்பட்டு அதிசயப்படுவது போலவும் அவரது காட்சி பிடிப்புகள் கூற முற்படுகின்றன.
எனவே, ஒரு ஓவியத்தினை இரசிப்பது எப்படி என்று வரும்பொழுது நாம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியாகியுள்ளது. சுருக்கமாய் சொன்னால் தேர்ந்த இரசனை என்பது பயிற்சியை நிராகரிப்பதில்லை என்றே கூறவேண்டும். இருந்தும் சில ஓவியர்கள் தமது ஓவிய திறனால் கல்லை போன்ற ஒரு மனதையும் ஊடுருவி செல்ல முயற்சித்தனர். இது ஓவியத்துக்கு மாத்திரம் அல்ல. இசைக்கும் பொருந்தும். கவிதைக்கும் பொருந்தும். பாரதிக்கும் பொருந்தும்.
- ஜோசப் மல்லொர்ட் வில்லியம் டேர்னர்
(Joseph Mallord William Turner (23 .04.1775 – 19.12. 1851)) -
- டேர்னரின் Folkestone ஓவியம் -
கேள்வி : அதாவது ஜோசப் மல்லொர்ட் வில்லியம் டேர்னர் (Joseph Mallord William Turner (23 April 1775 – 19 December 1851)) ஓவியங்கள் குறித்து மாக்ஸிம் கார்க்கி ஒரு தருணத்தில் கூறியது போல 'டேர்ன'ருக்குப் பிறகு, ஆங்கிலேய வானங்கள் மேலும் அழகுமிக்கதாய் மாறியது என்று கருதமுடியுமா?
பதில் : உண்மை. மனிதனின் இயற்கை பொருத்த ரசனை, ஓவியங்களால் அதிகரிக்கப்படலாம். ஓவியங்களால் மாத்திரம் அல்ல. இசையால், கவிதையால், இலக்கியத்தால். ஆனால், இவற்றால் அதிகரிக்கப்படுவது, இயற்கை பொருத்த ரசனை மாத்திரமல்ல. மாறாக, மனித துயர் பொருத்த அனுதாபங்களும் கூட அதிகரிக்கப்படலாம். கூடவே, மனிதனுக்கான நீதி பொறுத்த பிரக்ஞையும் கூட அதிகரிக்கப்படலாம். இவை ஓவியங்கள் ஆற்றக்கூடிய சிறப்பு செயற்பாடுகள் என குறிக்கலாம்.
கேள்வி: அண்மையில் எனது நண்பரொருவர் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அதன் பின்புற அட்டையில் அவரது புகைப்படம் இருந்தது. நூலின் முன் அட்டையில் நூலாசிரியர் அகதியாக வாழ்ந்த காலத்தில் அவரை வைத்து வரையப்பட்ட பென்சில் ஓவியம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இரண்டுக்கும் அநேக வித்தியாசங்கள். இரண்டுக்கும் இடையிலான, பலவருடங்களின் இடைவெளி, ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் பென்சில் வரைபட ஓவியர் நூலாசிரியரின் உருவத்தை பெருமளவில் நிராகரித்து, நூலாசிரியரின் ஆன்மாவை தனது ஓவியமாக தீட்ட முயன்றுள்ளாரோ என்ற சந்தேகம் எனக்குள் எழவே செய்கின்றது. அப்படியென்றால், கேள்வி, ஓவியங்களில் சில உடல் அம்சங்களை தவிர்த்து உள்நுழைந்து, மனிதர்களின் ஆன்மாவை சித்தரிக்க முற்படும் சங்கதிகளும் உண்டோ என்ற கேள்வி உண்டு. இது குறித்து யாது கூறுவீர்கள்?
பதில் : இந்நூலின் இருபடங்களையும் நானும் அவதானித்தேன். முன் அட்டையில் தோன்றுபவரின் கண்களில் இரக்கம் உண்டு. ஆழ்ந்த சிந்தனை உண்டு. வருத்தம் உண்டு. இவை அனைத்தும் மனுகுலத்துக்கானது என்ற அக்கறையும் உண்டு. ஆனால் இவை பின் அட்டையில் காணக்கிட்டாத ஒன்று. ஒரு புகைப்படத்தால் இவற்றை வெளிக்கொணர முடியுமா என்பது சந்தேகமே. முடியாது என்பதல்ல. ஆனால் ஓவியனுக்கு இவற்றை வெளிக்கொணர்வது ஒப்பீட்டளவில் சற்றே சிரமம் குறைந்த கருமமாகவே இருக்கும். ஒரு உதாரணம். எனது நண்பர் சிவப்பிரகாசம், மாலை வேளையில், கொழுந்தெடுக்கும் ஒரு பெண்மணி, தனது அந்நாளைய பணியை முடித்துவிட்டு, வீடு திரும்புகையில், குழந்தை பராமரிப்பு நிலையத்தில், தன் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு திரும்பும், ஒரு இளம் தாயின் முக்காடு அணிந்த பின்புற தோற்றத்தை, அவளது கூடையுடனும் மட்டக் கம்புடனும் சோகம் நிறைந்த ஒரு வானமும் மேகங்களும் சூழ்ந்து, பின்னணியாய் இருக்க, வரைந்திருந்தார். இங்கே அவளது முகமும் தெரியவில்லை. அவளது கண்களும் தெரியவில்லை. இருந்தும் அவ்வோவியம் முன்னிறுத்திய வாழ்க்கை ஆயிரம் கேள்விகளை பார்ப்பவரிடையே கேட்பதாக அமைந்து இருந்தது. அதாவது ஓவியங்கள் ஒரு கருக்கலில் தோன்றும் மரத்தை போல ஆயிரம் விடயங்களை பார்ப்பவருடன் பேச வல்லவைதாம்.
- ஓவியர் வின்சன்ட் வில்லியம் வான்கோ
(Vincent Willem van Gogh 30 March 1853 – 29 July 1890) -
- ஓவியர் வான்கோவின் 'நட்சத்திர இரவு (Starry Night)' ஓவியம் -
கேள்வி : நல்லது. இப்போது வான்கோ பற்றி… வான்கோ Starry Night என்ற தன் பிரபல்யமான ஓவியத்தை பல விதமாக வரைந்திருந்தார். இப்படி, ஒன்றையே பல விதமாக வரைவது பொதுவில் ஏற்கத்தக்கதுதானா?
பதில் : ஒவியர்கள் தமது ஓவியங்களை பல்வேறு விதமாக வரைந்து காட்சிப்படுத்துவது பொதுவில் காணக்கூடிய ஒன்றுதான். ஒவ்வொரு ஓவியரும், சில வேளைகளில் பத்து பதினைந்து பிரதிகளை உருவாக்கியிருப்பார்கள். வண்ணங்களும் தீட்டும் வகைப்பாடுகளும் கூட வித்தியாசமுற்று இருக்கலாம். இவற்றில் சிறப்பானதை காலம் தேர்ந்து கொள்கிறது. மற்றவற்றை பின்னுக்கு தள்ளிவிடும்.
- ஜோன் கொன்ஸ்டபில்
( John Constable (11 June 1776 - 31 March 1837) -
- ஜோன் கொன்ஸ்டபிலின் Wivenhoe Park, Essex ஓவியம் -
கேள்வி : ஜோன் கொன்ஸ்டபிலால் நீங்கள் கவரப்படுவதற்குரிய காரணங்கள் யாவை என்பதனை கூற முடியுமா?
பதில் : ஜோன் கொன்ஸ்டபிலை எனக்கு முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்தது எனது தந்தையாரே. ஜோன் கொன்ஸ்டபிள் பொறுத்த பல்வேறு கதைகளையும் அவர் எனக்கு கூறியுள்ளார். இது நடந்தது எனது மாணவப் பருவத்திலாகும். ஜோன் கொன்ஸ்டபிளின் ஓவியங்கள் ஒர் பிரகாசத்தினை மனதினுள் உண்டு பண்ண கூடியவை. அவர் வரைந்த மரங்களையும், ஓடைகளையும், புல்வெளிகளையும், இளஞ்சூரியனையும் இன்னமும் என்னால் மறக்க முடியாது. அவரை போல இயற்கையை ஆராதித்தவர்கள் இருப்பார்களா என்பது கூட, என்னில் ஓடும், சந்தேகமே. அவரைப்பற்றி கூறும்போது விமர்சகர்கள் “அவர் தனது ஒளியை தேடினார் - தனது பனித்துளியை தேடினார் -அவர் தனது மென்காற்றை தேடினார் - தனது மலர்களை தேடினார்” என்று கூறுவார்கள். ( He Sought his light, his dew, his breeze, his blooms) . இது நல்லது. ஆனால் வான்கோ வித்தியாசப்பட்டு தனது ஓவியங்களுக்கூடாக மனிதனின் வியர்வையை, மனிதனது துயரை, மனிதனது கண்ணீரை - ஏன், அதற்குறிய காரணத்தை கூட விசாரிக்க முயற்சித்தார், என்றே கூறுதல் வேண்டும். இப்படியாகத்தான் ஜோன் கொன்ஸ்டபிளும் வான்கோவும் ஆளுக்காள் வித்தியாசப்பட்டார்கள். ஆனால் இவ்விருவருமே என்னுள் செல்வாக்கு செலுத்தினார்கள். எனக்கு உதவி புரிந்தார்கள். ஆனால் அவர்களின் படைப்புகளின் எத்தனை விகிதாசாரத்தை எனது படைப்புகள் உள்ளடக்குவதில் வெற்றிக்கண்டன, என்று கேட்பீர்களானால் அதற்குறிய பதில் ஒரு சிறு அளவிலானது என்பதுவாகவே இருக்கும்.
கேள்வி: அதாவது, ஜோன் கொன்ஸ்டபில் தனக்கான சூரிய ஒளியை, மென் காற்றை தேடினார் என்றால் அவர், தான் உண்மையாய் கண்ட சூரிய ஒளியை சற்றே பரிமளித்து தன் ஓவியத்தில் தந்தார் எனலாமா?
பதில்: ஓவியனுக்கு அந்த உரிமை உண்டு – ஒரு கவிஞனைப் போலவே.
- ஓவியர் வான்கோவின் Potato Eaters ஓவியம் -
கேள்வி: அப்படி என்றால், வான்கோவின் Potato Eaters உம் சற்று அதிகமாக பரிமளிக்கப்பட்டது தானா?
பதில்: ஓரளவில். அதாவது, அவர்களது சோகத்தை நிராசையாக மாற்றாமல், லோசாக இசைத்து, அதற்கூடு அவ்வாழ்வு முன்வைக்கும் கேள்விகளை – கோரும் நீதி – நியாயப்பாடுகளை, பார்வையாளன் முன் குத்தி காட்டுகின்றது. இங்கே, பரிமளிப்பது என்ற சொல்லை விட யதார்த்தப்படுத்துவது என்ற சொல், தேவைப்பட்டதாகின்றது. அவர்களின் சோகத்தை பரிமளிப்பது என்றால், அது சில வேளைகளில் நிராசையில் முடிவடையக் கூடும். துயரினை கூறுதல் ஆக்கபூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு இட்டுச் செல்வதாக இருக்க வேண்டும். அவல ஒலியை எழுப்புவதாக இருக்க கூடாது என விமர்சகர்கள் கூறுவார்கள்.
அனுப்பியவர்: ஜோதிகுமார் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.