நினைவுகள் சாசுவதமானவை. நினைவுகளை தேக்கி வைப்பதற்கு நினைவாற்றலும் தேவை. அத்துடன் நினைவுகள்தான் மனச்சாட்சி. அத்துடன் நீதி புகட்டும் ஆவணம். இலங்கையில் பசுமையை படரச்செய்த மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை, மலையகத்தின் ஆத்மாவை கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் பதிவுசெய்த சில ஆளுமைகள் பற்றிய தனது பசுமையான நினைவுகளை எழுத்தாளர், ஆய்வாளர், இலங்கை அரச மட்டத்தில் பல உயரிய பதவிகளை வகித்திருக்கும் எம். வாமதேவன் “ நீங்காத நினைவுகளில் மலையக மண்ணின் மைந்தர்கள் “ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய இலங்கை எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசுவழங்கும் திட்டத்தின் அடிப்படையில் நடத்திய போட்டியில் கட்டுரைப்பிரிவில் தாம் எழுதிய "குன்றிலிருந்து கோட்டைக்கு " நூலுக்கு இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசினைப்பெற்றிருக்கும் எழுத்தாளர் வாமதேவனுக்கு வாழ்த்துக் கூறியவாறு, இந்நூல் பற்றிய நயப்புரைக்குள் வருகின்றேன்.
கல்வி, தொழிற்சங்கம் – அரசியல், நிர்வாகம், இலக்கியம், ஊடகம் முதலான துறைகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி அமரத்துவம் எய்திவிட்ட, இர. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், டி.வி. மாரிமுத்து, எம். சின்னத்தம்பி, வி. கே. வெள்ளையன், பெ. சந்திரசேகரன், ஓ. ஏ. இராமையா, எம். இராமலிங்கம், சி. நவரட்ன, பி. முருகேசு, சி. வி. வேலுப்பிள்ளை, சாரல்நாடன், தமிழோவியன், மல்லிகை சி. குமார் எஸ். எம். கார்மேகம், ந. நெடுஞ்செழியன், பொன். கிருஷ்ணசாமி ஆகியோர் பற்றிய நினைவுகளை நூலாசிரியர் வாமதேவன் தொகுத்து வழங்கியிருக்கிறார். அவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் சித்திரிக்கும் இந்த நூலைத் திறந்ததும் மனதை அதிர வைக்கும் செய்தியையும் அறிந்துகொள்கின்றோம். அதனைப்பார்த்தவுடன் மனம் கனத்துப்போனது. சில நிமிடங்கள் மனம் உறைந்துவிட்டது. நூலாசிரியர் வாமதேவனின் அருமைத் தந்தையாரும் அன்புச் சகோதரிகள் மூவரும் 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அப்புத்தளை பெரகலை மண்சரிவில் உயிர் நீத்திருக்கும் செய்தியே அது. அவர்களுக்கும் அதன்பின்னர் இயற்கை எய்திய அன்புத்தாயருக்கும் நூலாசிரியர், இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.