(பதிவுகளில் அன்று) வெற்றிச் சிகரத்தை நோக்கி: எண்ணம் மற்றும் எழுத்து (1) - கி. ஷங்கர் (பெங்களூர்) -
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர்
ஆகஸ்ட் 2003 , பதிவுகள்
பெங்களூர், இந்தியாவில் தற்போது வசித்து வரும் திரு .கே.சங்கர் ஒரு இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்ற்¢ல் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் பதிவுகளில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். இது அவரது முதலாவது ஆக்கம்.
வெற்றிச் சிகரத்தை நோக்கி: எண்ணம் மற்றும் எழுத்து (1)
உலகின் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு கிராமத்திலோ, குக்கிராமத்திலோ அல்லது நகரத்திலோ பிறந்து வளர்ந்து வரும் எந்த ஒரு இளைஞநிடமோ, இளைஞியிடமோ இருக்கக்கூடிய ஒரு தாக்கம், _ பொதுவான ஒரு தாக்கம் என்னவென்றால் அது வெற்றியின் தாக்கம்தான். இளம்பிராயத்தினர் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் விரும்புவது என்னவென்றால் அது வெற்றியின் சிகரத்தை தொடுவதுதான். ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா என்ன? நிச்சயமாக இல்லை. ஏன்? காரணமென்ன?
ஏனென்றால் சிலர்தான் வெற்றியின் சிகரத்தை தொடும் சூழ்நிலையில் வளர்கிறார்கள் அல்லது வளர்க்கப்படுகிறார்கள் அல்லது தயார் செய்யப் படுகிறார்கள். பலருக்கு இந்த வெற்றி என்பது ஒரு எட்டாக்கனியாக, ஒரு அடிமனக் கனவாகவே முடிந்து விடுகிறது. ஏன்? எல்லோராலும் இந்த உலகில் வெற்றி பெற முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். இந்த உலகில் உள்ள எல்லோருமே வெற்றி பெறுவதற்காக பிறந்தவர்கள்தான். மனிதர்களை இரண்டு வகையாகத்தான் பிரிக்க முடியும். அது ஆண், பெண் என்ற பிரிவல்ல. வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெறாதவர்கள் என்பது கூட அல்ல. அது முயற்சி உள்ளவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என்பது ஒரு பிரிவு. முயற்சி இல்லாதவர்கள், பயிற்சி பெறாதவர்கள் என்பது இன்னொரு பிரிவு.