சு.சமுத்திரத்தின் நெருப்புத் தடயங்கள் புதினம் காட்டும் சமுதாயமும் அதன் பின்புலமும் - முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி -635 752 -
முன்னுரை
புதினமோ, கதையோ, சிறுகதையோ எதுவாயினும் அது, தான் தோன்றிய காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றியதாக இருக்கும். ‘நெருப்புத் தடயங்கள்’ என்றும் புதினங் காட்டுஞ் சமுதாயம் யாது என்பதையும் அதன் பின்புலம் யாது என்பதையும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கம்.
இலக்கியமும் சமுதாயமும்
இலக்கியங்கள் யாவும் சமுதாயத்தில் நடந்த அல்லது நடக்கின்ற நிகழ்ச்சிகளைச் சுவைபடக் கூறுவனவாகும். சமுதாயத்தின் ஒரு கால கட்டத்தில் நிகழ்ந்த அல்லது நிகழுகின்ற நிகழ்ச்சிகளைக் காட்டும் ஒரு சமுதாயப் படங்காட்டும் கருவி என்று கூடச் சொல்லலாம்.
“மனிதர்கள் வாழ்க்கையில் கண்டவை, அவர்கள் கண்டு அனுபவித்தவை, உடனே கவர்ச்சி ஊட்டுபவை, நிலையாக நின்று கவர்ச்சி ஊட்டுபவை எவையோ, அவைகளைப் பற்றிச் சிந்தித்தவை, சிந்தி;த்து உணர்ந்தவை இவைகளைப் பற்றி அறிவிப்பதே இலக்கியமாகும்”1 என்னும் ஹட்சனின் கூற்று ஈண்டு நினைக்கத்தக்கது.
மனிதன் சமுதாயத்தில் கண்டதையும், அனுபவித்ததையும் வைத்துக் கொண்டே இலக்கியங்கள் படைக்கிறான். ஆகவே, மனிதனையும், சமுதாயத்தையும் அறிய இலக்கியம் நமக்கு உதவுகின்றது. காலத்திற்கேற்றவாறு சமுதாயமும் இலக்கியமும் மாறுகின்றன. சமுதாயமும் இலக்கியத்துள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எனவே, “இலக்கியம் ஒரு சமுதாய நிலையம்”2 என்பார் கூற்று சாலப் பொருந்துவதேயாகும்.