இவர் ஒ ரு சிறந்த ஊடகவியலாளராகவிருந்தவர். சிறந்த நடிகையாக ஒளிர்ந்தவர்; திறமை மிக்க நர்த்தகியாக மிளிர்ந்தவர். இவரதும், இவரது கணவரதும் நினைவு தினம் ஆக்ஸ்ட் 12. இவர் நடித்த திரைப்படம் இலங்கையில் வெளியான முதலாவது சினிமாஸ்கோப் தமிழ்த்திரைப்படமான 'தெய்வம் தந்த வீடு' அதில் இவர் குமுதினி என்னும் பெயரில் நடித்திருந்தார். நடிகர் ஏ.ரகுநாதனுடன் நடித்திருந்தார். இவரது இனிய குரல் இவரைச் சிறந்த வானொலிக் கலைஞராக மின்ன வைத்தது.
அரசியலில் ஒருவர்மேல் ஒருவர் சேற்றை வாரியிறைப்பார்கள். அதற்காக ஒருவரையொருவர் கொன்று குவிப்பதில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின்போது மாற்றுக்கருத்துள்ளவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் உரியதொன்றல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயுதப்போராட்டங்களில் இவ்வகையான போக்கு நிலவியதைக் காண்கின்றோம். இவ்வகையான போக்கே பல நாடுகளில் ஆயுதப்போராட்டங்களின் தோல்விகளுக்கும் முக்கிய காரணங்களிலொன்றாகவிருந்தது.
இவரது கணவர் இவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டார். முன்னாட் போராளிகளிலொருவரான அவர் கொல்லப்பட்டபோது மனைவியுடன் சேர்ந்து 'பயண' வர்த்தக நிறுவனமொன்றினை நடத்திக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட இவர்கள்து பெண் குழந்தைக்கு வயது ஒன்று. இவர்தான் 'தெய்வம் தந்த வீடு' என்னும் இலங்கைத்தமிழ்த்திரைப்படத்தில் குமுதினி என்னும் பெயரில் நடித்திருந்த ரேலங்கி செல்வராஜா. கொக்குவிலைச் சேர்ந்தவர். இவரது கணவரான சின்னத்துரை செல்வராஜா ஓமந்தையைச் சேர்ந்த முன்னாட் போராளி.
நடிகையாக, வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக, நர்த்தகியாக மின்னிய ரேலங்கி செல்வராஜா வானொலியில் நுழைந்தபோது நான் நாட்டை விட்டு வெளியேறியிருந்தேன். அதனால் இவரது வானொலித் தொலைக்காட்சிப் பங்களிப்பைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அணமையில் இவர் வழங்கியிருந்த இறுதியான நேர்காணலொன்றைக் கேட்கும் வாய்ப்புக்கிடைத்தது. அப்போது உணர்ந்தேன் இவரது குரலினிமையை. ஊடகத்திறமையை. https://www.youtube.com/watch?v=VLQipmPHT7s
அந்நேர்காணாலில் இவர் தன் கலையுலக அனுபவங்களை விபரித்திருக்கின்றார். அதில் இவர் மூத்த வானொலிக்கலைஞரான எஸ்.கே.ராஜனே தன்னை இத்துறைக்கு முதலில் அழைத்து வந்தவர், ஊக்கப்படுத்தியவர் என்று குறிப்பிடுகின்றார். அந்நேர்காணல் மிகவும் முக்கியமானது. இந்நேர்காணலைக் கண்டவர் கார்மேகம் நந்தா. பத்மசிறீ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. யு டியூப்பில் சிறி சந்தனா ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மிகவும் துயரமான விடயமென்னவென்றால் இவருடன் பணியாற்றிய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களோ, நடிகர்களோ , நர்த்தகிகளோ , சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களோ இவரைப் பெரிதும் நினைவு கூர்வதாகத்தெரியவில்லை. ஆனால் இவர் வழங்கிய இறுதி நேர்காணலில் தன்னை வானொலிக் கலைஞராக்கியவர் மூத்த வானொலிக்கலைஞர் எஸ்.கே.ராஜன் என்று குறிப்பிட்டிருக்கின்றார். தனக்குப் பிடித்த வானொலிக் கலைஞர்கள் அப்துல் ஹமீத், சற்சொருபவதி நாதன் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
யுத்தம் முடிந்து 24 வருடங்கள் கழிந்து விட்டன. இன்று நாம் கடந்தகாலத் தவறுகளை மீள இனங்காணவேண்டும். எதிர்காலத்தில் இவை போன்ற தவறுகள் ஏற்படாதவாறு விழிப்புணர்வுடன் இருப்பதற்கு இத்தகைய சுயவிமர்சனங்கள் உதவும். பாடசாலை அதிபர்கள், நடிகர்கள், வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், மதகுருக்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாற்றுக்கருத்துள்ள அரசியல்வாதிகள் என்று பலரைப் போராட்டச் சூழல் பலியெடுத்துள்ளது. ஆயுதம் தரிக்காத நிராயுதபாணிகள் இவர்கள். இவர்கள் எவருமே மாற்றுக்கருத்துகளுக்காகப் பலியாகியிருக்கத்தேவையில்லை.
ரேலங்கி செல்வராஜாவின் இறுதி நேர்காணலிது - https://www.youtube.com/watch?v=VLQipmPHT7s
* புகைப்பட உதவி - தம்பிஐயா தேவதாஸின் 'இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை' நூல்.