- தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவ குருநாதனின் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் வெளியான 'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்' என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள எனது நினைவுக் குறிப்பினை அவரது நினைவு தினத்தையொட்டிப் பகிர்ந்துகொள்கின்றேன். அவரது நினைவு தினம் ஆகஸ்ட் 8. மேற்படி நூலினைத்தொகுத்திருப்பவர் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரன். -
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களில் கலாநிதி க.கைலாசபதி, சிவப்பிரகாசம், எஸ்.டி.சிவநாயகம் ஆகியோர் வரிசையில் கலாசூரி சிவகுருநாதனையும் வைப்பார் பேராசிரியர் சோ.சந்திரசேகரன். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் 1956இல் உதவி ஆசிரியராகச் சேர்ந்து , செய்தி ஆசிரியராகவும் விளங்கியவர். பேராசிரியர் கைலாசபதி தினகரன் ஆசிரிய பீடத்திலிருந்து விலகியபோது அவருக்குப் பதிலாக அப்பதவிக்கு வந்தவர் சிவகுருநாதன் அவர்கள். 1961இலிருந்து 1995 வரை 34 வருடங்கள் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
யாழ் இந்துக் கல்லூரி, சாகிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. பின்னர் சட்டத்துறையிலும் பட்டம் பெற்று சட்டத்தரணியாகவும் பணியாற்றியிருக்கின்றார். அத்துடன் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகவுமிருந்திருக்கின்றார்.
விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். கலை, இலக்கியத்தின் மீதான இவரது ஆர்வம் இவரது மாணவப்பருவத்திலேயே ஆரம்பித்து விட்டது. சாகிராக் கல்லூரியில் படிக்கும்போது தமிழ்ச்சங்கச் செயலாளராக விளங்கியிருந்திருக்கின்றார். பேராதனைப் பல்கலைககழகத்தில் கற்றுக்கொண்டிருந்த சமயம் தமிழ்ச் சங்க வெளியீடான 'இளங்கதிர்' சஞ்சிகையின் ஆசிரியராக இருந்திருக்கின்றார், அதே சமயம் இந்து மாணவர் மன்றத்தின் 'இந்து தர்மம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார். இவை தவிர பின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தலைவராகவும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும் ( இரு தடவைகள்) இருந்திருக்கின்றார்.
இலக்கியத்துறையில் மட்டுமல்ல, நாடகக் கலையிலும் ஈடுபாடு மிக்கவர் சிவகுருநாதன். பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையுன் நாடகங்களான 'உடையார் மிடுக்கு' , 'தவறான எண்ணம்'ஆகிய நாடகங்களிலும் நடித்திருக்கின்றார் என்பதை எழுத்தாளர் கே.பொன்னுத்துரை கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியிருப்பார்.
இவரது பத்திரிகைத் துறை வெற்றிக்கு முக்கிய காரணம் மாணவப்பருவத்திலிருந்தே கலை, இலக்கியத்தின் மீது இவருக்கிருந்த தீவிர ஆர்வம்தான். இவருக்கு விருப்பமான துறையில் இவருக்கு வேலை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது இவரது பணியைச் சிறப்புறச் செய்வதற்கு உதவியாகவிருந்தது.
இவரைப்பற்றி என் மாணவப்பருவத்திலேயே கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அச்சமயத்தில் சந்தித்திருக்கவில்லை. ஆனால் இவர் தினகரன் ஆசிரியராகவிருந்த காலத்தில் என் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்டது எழுத்தாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் தினகரனில் நடத்தி வந்த கவிதைச் சோலைப் பகுதி. அதில் எனது ஆரம்ப காலத்துக் கவிதைகள் பல வெளிவந்துள்ளன. அத்துடன் எனது சிறுகதையான 'ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்' சிறுகதையும் இவர் தினகரனின் பிரதம ஆசிரியராகவிருந்தபோதே வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரை என் வாழ்நாளில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒரு தடவை ஏற்பட்டது. அது 83 கறுப்பு ஜூலை காலகட்டத்தில் நிகழ்ந்தது. அப்போது மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர், மேலும் இளைஞர்கள் பலர் தன்னார்வத்தொண்டர்களாக சரஸ்வதி மண்டப அகதி முகாமில் சேவையாற்றிக்கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் இளைஞர்களே தன்னார்வத் தொண்டர்களாகச் சேவையாற்றிக்கொண்டிருந்த சமயம் நிர்வாகத் துறையில் அனுபவம் வாய்ந்த முதியவர்களின் சேவையும் அகதி முகாமை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவைப்பட்டது. அச்சமயத்தில் எம்முடன் வந்து இணைந்து கொண்டார் சிவகுருநாதன் அவர்கள்.
நெற்றியில் எப்போது திருநீற்றுடன் காணப்பட்ட சிவகுருநாதன் அவர்களின் தோற்றம் இப்பொழுதும் என் சிந்தையிலுள்ளது. அச்சமயத்தில் இவருடன் நான் இலக்கியம் பற்றியோ, நான் எழுதுவது பற்றியோ உரையாடவில்லை. அகதி முகாம் நடைமுறைகள் பற்றியும், அப்போதிருந்த அரசியற் சூழல் பற்றியுமே உரையாடினோம். பின்னர் நான் சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் சென்று விட்டேன். அக்காலகட்டத்தில் இவரே சரஸ்வதி மண்டப அகதி முகாமை இறுதிவரை நடத்தியிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.
இவர் பிரதான ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் தினகரனில் என்னைப்போன்ற வளர்ந்து வந்த இளைஞர்கள் எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்தவர் என்பதையிட்டு எனக்கு எப்போதும் இவர் மீதான மதிப்புண்டு. அரச கட்டுப்பாட்டிலிருந்த பத்திரிகையாக 1971இலிருந்து தினகரன் செயற்பட்டுக்கொண்டிருந்தபோதும் , இவர் மிகவும் இலாகவமாகச் செயற்பட்டார் என்றே நான் கருதுகின்றேன். இவருடைய காலத்தில் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த முஸ்லீம் எழுத்தாளர்கள், மலையகத் தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் தினகரன் களமாக விளங்கியது. அறிஞர் அ.ந.கந்தசாமி தனது இலக்கிய அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு மீண்டும் எழுத வந்தபோது தினகரனில் நிறைய எழுதினார். அக்காலகட்டத்தில்தான் அவரது புகழ்பெற்ற ஒரேயொரு நாவலான 'மனக்கண்' தினகரனில் தொடராக வெளியானது. எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் அ.ந.க பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடர் வெளியானதும் இவர் தினகரனின் பிரதம ஆசிரியராகவிருந்தபோதுதான்.
இவர் தினகரனின் பிரதம ஆசிரியராகவிருந்த சமயம் தினகரன் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கியத்துப் பல்வேறு துறைகளுக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றிய விரிவான ஆய்வுகள் ஆற்றப்பட வேண்டும். உண்மையில் இவரது தினகரன் காலகட்டம் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த ஒரு காலகட்டம் என்பதில் மாற்றுக் கருத்துகளில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.