இலங்கை தேசிய சாகித்திய விழாவில் 'சாகித்தியரத்னா' விருது பெறும் எழுத்தாளர் க. சட்டநாதன் - முருகபூபதி -
- எழுத்தாளர் சட்டநாதன் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமானதோர் ஆளுமையாளர். அவருக்கு இலங்கை அரசின் சாகித்தியரத்னா விருது கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றி எழுத்தாளர் முருகபூபதி எழுதிப் 'பதிவுகள்'இணைய இதழில் வெளியான கட்டுரையிது. விருது பெற்றுள்ள சட்டநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள். - பதிவுககள்.காம் -
இம்முறை எழுத்தாளர் க. சட்டநாதனுக்கு இலங்கை அரசின் சாகித்தியரத்னா விருது கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமது நீண்ட கால இலக்கிய நண்பர் க. சட்டநாதனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றோம். குறிப்பிட்ட விருது வழங்கும் விழா இம்மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கிறது. வட இலங்கையில் வேலணையில் பிறந்திருக்கும் சட்டநாதன் அந்தத் தீவுப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கமான உறவை பேணி வளர்த்தவர். இவரை நண்பராகப் பெறுபவர்கள் எளிதில் இவரை மறந்துவிடமாட்டார்கள். இவரை இழக்கத் தயாராகமாட்டார்கள்!
வேலணையில் மறுமலர்ச்சிக்கழகம், தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் முதலானவற்றிலும் அறுபதுகளில் சட்டநாதன் இணைந்திருந்த காலத்திலேயே தரமான இலக்கிய ரசனை மிக்கவராகவே திகழ்ந்திருந்திருப்பதாக பேராசிரியர் சிவச்சந்திரன் பதிவுசெய்துள்ளார்.
'எனது கதைகள் பற்றி நானே ஏதாவது சொல்லவேண்டும் போலிருக்கிறது. விஸ்தாரமாக அல்ல, சுருக்கமாக. எந்தப்புற நிகழ்வுகளுமே என்னைப்பாதிக்கிறது. மனதைத் தொட்டு நெருடுகிறது. சில சமயங்களில் காயப்படுத்துகிறது. இந்த அனுபவங்களையெல்லாம் சிறைப்பிடிக்கும் எத்தனம்தான் எனது கதைகள். இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகாரமுனை மழுங்க, பெண் தன்னைச்சுற்றிப்பிணைந்து கிடக்கும் தளைகளைத்தகர்த்து, விட்டு விடுதலையாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகிறது. ஆண் – பெண் உறவு உணர்வு விவகாரங்களைக்கடந்து சமூகத்துடனான மனித உறவுகளின் சித்திரம்தான் பிச்சைப்பெட்டிகளும் அந்தக்கிராமத்துச் சிறுமியும் முதலான சிறுகதைகள். இக்கதைகளிலும் ஏனைய கதைகளிலும் வருபவர்கள் நமது சிநேகத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்கள். மனிதநேசம் சாஸ்வதமானது.'