ஜூன் 03 கலைஞர் கருணாநிதி பிறந்த தினம்
” கருத்து முரண்பாடு வந்தபின்னரும் நண்பர் எம்.ஜி.ஆர். என்னை கலைஞர் என்றுதான் விளித்தார். ஆனால், நான் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு திரைப்படத்தில் பேசி நடித்த ஜெயலலிதா தன்னைப்பற்றி மேடைகளில் விமர்சிக்கும்போது, “ ஏய் கருணாநிதி” என்றுதான் திட்டுகிறார்” இவ்வாறு தனது ஆதங்கத்தை பலவருடங்களுக்கு முன்னரே தெரிவித்திருப்பவர் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி.
அவருடைய இந்த ஆதங்கத்தை ஒரு வார இதழ் “சொன்னார்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கருத்துக்களில் படிக்கநேர்ந்தது.
கருணாநிதிக்கு, கலைஞர் என்ற பட்டத்தை அவர் எழுதிய தூக்குமேடை நாடகத்தின் அரங்காற்றுகையின்போது நடிகவேள் எம்.ஆர். ராதா வழங்கினார் என்பது தகவல். நடிகவேள் ராதா மாத்திரமின்றி பின்னாளில் அவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசு, ராதா ரவி, ராதிகா, வாசுவிக்ரம் ஆகியோருக்கும் மாத்திரமின்றி, சிவாஜி, எம்.ஜீ.ஆர், சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, ரி.எஸ். பாலையா, பி. எஸ்.வீரப்பா, எஸ்.வி. சுப்பையா, ரங்கராவ், நாகையா, ஆர். எஸ். மனோகர், என். எம். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார், பிரசாந்த், நெப்போலியன், விஜயகுமார், சத்திய ராஜ், மற்றும் கண்ணாம்பா, ராஜம்மா, டி.ஆர். ராஜகுமாரி, பானுமதி, பத்மினி, மனோரமா, விஜயகுமாரி, ராஜம், ஜெயலலிதா, சரோஜாதேவி, லட்சுமி, ஶ்ரீபிரியா, அம்பிகா உட்பட எண்ணிறந்த நடிகர்கள், கலைஞர் எழுதிய வசனங்களைப்பேசி நடித்தவர்களே!