அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 2) - ஜோதிகுமார் -
III
இன முறுகலை நாவல் கையாளும் முறைமை
பாரதி முதல் கார்க்கி வரை இனமுறுகலின் பாதிப்புக்களை ஆழ உணர்ந்திருந்தனர். பாரதி அல்லா அல்லா என்ற பாடலை (1920) எழுத நேர்ந்ததின் பின்னணி அன்றைய இந்தியாவின் யதார்த்தமாக இருக்கலாம்.
ஆங்கில ஆட்சியில், அவர்களது மறைகரத்தின், செயற்பாடுகள் அச்சம்தரும் விளைவுகளை அன்றைய இந்தியாவில் ஏற்படுத்தின.
1915ல் ரஷ்யப் புரட்சி சூழ்கொண்டு இயங்கியப்போது, யூதர்களுக்கு எதிரான இனவாத அலையைக் களமிறக்கி அதற்கூடு புரட்சிகர அலைகளைத் திசைதிருப்பிவிடலாம் என்னும் நப்பாசை ஆதிக்கச் சக்தியினரிடம் காணப்பட்டது. ஆக இனவாதம் என்பது ஆதிக்கச் சக்திகள் கையாளக்கூடிய பிரதானமான ஆயுதங்களில் ஒன்றாகக் காலம் காலமாக இருந்துள்ளது. இது மக்களைத் தூண்டி, வெறியர்களாக மாற்றி, எச்சில் வடிய ஒருவரை ஒருவர் கடித்து குதறித்தள்ளும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இட்டுச்செல்கின்றது.
கார்க்கியின் இறுதி நாவலான, “கிளிம்மின் வரலாறு” என்ற பிரமாண்டமான படைப்பில் இவ் இனமுரண்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்.
இதே போன்று இந்தியாவில் இனவாத ஆயுதமானது ஆதிக்கச் சக்திகளால் மிக நன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உருவாக்கக்கூடிய பாதகங்களைப் பாரதி போன்ற கலைஞர்கள் மிக நுணுக்கமாக உள்வாங்கி இருந்தனர் என்பதனையே அவர்களது படைப்புகள் காட்டுவதாய் உள்ளன.
ஆனால், 1947ல் ஜின்னா-காந்தி தலைமையில் இந்தியா-பாகிஸ்தான் என இந்தியா பிரிப்பட்டபோது பத்து லட்சம் மக்கள் கோரமாய்க் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட பத்து இருபது லட்சம் மக்கள் நிரந்தரமாய் அகதிகளாயினர். இப்பிரளயம் விளைவித்த நன்மைகளை ஆதிக்கச் சக்தியினர் வாய்வுறிஞ்சிட குடித்தப்படி இருக்கின்றனர், இன்றுவரை.