கவிஞர் தமயந்தி கவிதைகள் ஏழு! - தமயந்தி -
- தமயந்தி (தமயந்தி சைமன்) கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்கலைஞர், காணொளிக் கலைஞர், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமை மிக்கவர். ஏப்ரில் 8 அவரது பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சொல்லும், செயலும் ஒன்றாக இயங்கும் சமூக,அரசியல் செயற்பாட்டாளர்களில் எழுத்தாளர் தமயந்தியும் ஒருவர். முகநூலில் அவர் பதிவு செய்திருந்த இக்கவிதைகள் அவர்தம் ஆளுமையினை வெளிப்படுத்தும். கடலுடனான அவர்தம் பிணைப்பை வெளிப்படுத்தும். தமயந்தி கடலின் மைந்தன். நவீனத்தமிழ் இலக்கிய உலகில் கடலைப்பற்றிய இவரது கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முக்கியமானவை. - பதிவுகள்.காம் -
1. சாட்சிகள் செத்த இரவு
எதுவுமே தெரியாததுபோல்
காலையில்
எழுந்துவரும் சூரியனிடம்
எதைத்தான் எடுத்துரைக்கும்
முகமுடைந்த பனந்தீவுகள்?
இரவோடு இரவாக
எல்லாவற்றையும் அள்ளிச்சென்ற
புயலின் வழித்தடம் பற்றி
எஞ்சியிருக்கும் கோரைப்புற்களிடம்
சாட்சியம் சொல்ல ஏது வார்த்தைகள்?
நிலமெங்கும்
கடற்கரை மணலைப்போல
சிந்திக்கிடக்கும் நட்சத்திரங்களை
கடகத்தில்
அள்ளிச் செல்கிறது கடல்.
புயல் பிரித்தெறிந்த
ஏதாவதோர் குடிசையின் கீழ்
நிலவு
உடைந்து கிடக்கக்கூடுமென
எல்லா திசைகளிலும்
தேடி அலைகிறது கடல்.
காரான் சுழி உறிஞ்சி
கரையில் போடப்பட்ட மீன்களுக்கு
பால் கொடுத்துக்கொண்டிருந்த
நிலவைக் கண்டு
விம்மி அழுதது கடல்
நிலவும் கடலும்
ஒன்றையொன்று தழுவிக்கொண்டபோது
பாதிப்பகலை முடித்துக்கொண்டு
மீண்டும்
பனந்தீவுகளுக்குப் பின்னால்
மறைந்துகொண்டது சூரியன்.
நாளையிரவோ
அல்லது
இன்னொரு நாளின் இருளிலோ
மீண்டும் புயல் வரக்கூடும்.
அப்போதும் சூரியனுக்கு
எதுவுமே தெரியாதுபோம்.