கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் இறுதி அஞ்சலி! - வ.ந.கிரிதரன் -
அண்மையில் மறைந்த கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த எழுத்தாளர் பூர்ணிமா கருணாரன் முகநூலில் பின்வருமாறு குறிப்பொன்றினை இட்டிருந்தார்:
"நேற்றையதினம் இலக்கிய ஆளுமை திரு. K.S சிவகுமாரன் ஐயா அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு, அவரது சிதைக்கு தீ மூட்டிய வரையில் உடனிருந்தேன். மிகவும் வேதனையான உண்மை என்னவென்றால் அவரால் முன்னுக்கு வந்ததாக முகநூலில் பலரது பதிவுகளை காண முடிந்த அளவுக்கு, அவரது மரணச் சடங்கில் பலரைக் காண முடியவில்லை. யாரோ என் அருகில் இருந்த ஒருவர் கூறியதும் என் காதுகளில் விழுந்தது. 'ஆனானப்பட்ட பாரதியின் சாவுக்கே பதினொரு பேர் தான் என்று. தமிழ் சங்கத்தில் எனக்குத் தெரிந்த பலரையும் காணவில்லை. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிருவர் வந்திருந்தார்கள். தமிழ் சங்கம் என்பது இலக்கியவாதிகளின் இளைப்பாறும் இடமாக மாறி விட்டதா? தயவுசெய்து திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது போனாலும் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள். இதை நான் கூட கற்றுக் கொண்டது பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து தான். அவர்களின் இலக்கியவாதி ஒருவர் இறந்திருக்கும் பட்சத்தில் அங்கு எவ்வாறான மக்கள் கூட்டம் இருக்கும் என்பதைக் கண் கூடாக கண்டிருக்கிறேன். சென்று வாருங்கள். உங்கள் ஆளுமை எதிர் காலத்தில் ஏனும் புரிந்து கொள்ளப்படும். மிகவும் வேதனையோடு இதனைப் பகிர்கின்றேன்."
கொழும்பில் அவரை நன்கு அறிந்த இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பதிப்பாளர்கள் என்று பலர் உள்ளார்களே. அவர்களில் முகநூலில் அவரது நண்பர்களாகப் பலர் இருக்கின்றார்களே. அவர்களில் பலர் செல்லவில்லைபோல் தெரிகிறதே. பூர்ணிமா கருணாரனுக்கு கே.எஸ்.எஸ் அவர்களை முகநூல் மூலமே தெரிந்திருக்குமென்று நினைக்கின்றேன். அவர் தன் இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். ஆனால் ஆண்டுகள் பலவாக கே.எஸ்.எஸ் அவர்களை அறிந்த கொழும்பில் வாழும் கலை, இலக்கியவாதிகளுக்கு அது முக்கியமாகப் படவில்லையென்பது நவகாலத்தின் யதார்த்தம்.