நதியில் நகரும் பயணம் (4): மெல்க் .(Melk) , ஆஸ்த்திரியா. - நடேசன் -
மெல்போர்னில் வீடு கட்டுவதற்கு நகரசபையில் அனுமதி வாங்கும்போது, வீடு கட்டி மிகுந்த நிலத்தில் எப்படி பூந்தோட்டம் அமைப்பீர்கள்? வீட்டின் முன்பகுதியில் எப்படி வேலி அமையும்? எனப் பல கேள்விகள் கேட்பார்கள். இப்படிப் சில கேள்விகளுக்கான பதிலைச் சொல்லியே அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமான நாங்கள் அதற்காக, பதிலைக் கூறாது கட்டடக் கலைஞரையும் (Architect) லாண்ண்ட்ஸ் ஸ்கேப் கலைஞரிடமும் ( Landscape Architect) விட்டு விடுவோம். இவற்றின் வழமை எப்படி மேற்கு நாடுகளில் உருவாகியது?
15 ஆம் நூற்றாண்டுகள் வரையில் மனிதர்கள் வசிக்காத இடமெல்லாம் விவசாயம் செய்ய வேண்டும். முக்கியமாக உணவு உற்பத்தியே விவசாயத்தின் நோக்கம். அலங்கார தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் என்பவற்றை அரசர்கள் மட்டுமே செய்வார்கள். மற்றவர்களுக்கு வசதியில்லை . ஆனால், 16ஆம் நூற்றாண்டுகளின் பின்பாக ஐரோப்பாவில் பிரபுக்கள், மத நிறுவனங்கள் தங்களது நிலங்களை அழகுபடுத்த முடியும். தங்களது செல்வத்தை வெளிக்காட்ட முடியும் என்பதால் வீடுகளிலும் மதகுருக்களின் மடங்களைச் சுற்றி பூந்தோட்டங்கள் வைத்தார்கள். இப்படியான புல்தரை , பூந்தோட்டங்கள் பேணும் முறையும் பரோக் வடிவமைப்பு (Baroque architecture) என்ற கட்டிடக்கலை மரபோடு இணைந்து உருவாகியது. இந்த வழமை ஐரோப்பிய நாடுகளிலிருந்து காலனி நாடுகளுக்கு உலகெங்கும் பரவுகிறது.
அது என்ன பரோக் வடிவமைப்பு?
அதுவரையும் நேரான கட்டிடங்கள், நேர் கோடுகளாகவும், வளைவுகளற்று இயற்கையிலிருந்து பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான இடவசதிகளோடு (Functional Space) மட்டுமே தேவை எனக் கட்டப்பட்டன. கட்டிடங்களது உறுதியும் நீடித்த தன்மையுமே முக்கிய விடயமாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டிலே வளைவுகள், பூந்தோட்டங்கள், நீச்சல் தடாகங்கள் என உருவாகியது .