சுதந்திரன் பற்றிய ஞானம் சஞ்சிகைக் கட்டுரையும், அ.ந.கந்தசாமி பற்றிய தவிர்ப்பும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -
மார்ச் மாத ஞானம் சஞ்சிகையில் நூலகர் என்.செல்வராஜா 'ஈழத்து இதழியலில் சுதந்திரனின் வழித்தடம்! விரிவான ஆய்வுக்கான சில குறிப்புகள்' என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையினைப் படித்துப் பார்த்தபோது எனக்கு உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது. 1949 - 1952 காலகட்டத்தில் சுதந்திரனின் ஆசிரியப்பீடத்திலிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் பெயரை அங்கு நான் காணவில்லை. ஏன் இந்தத்தவிர்ப்பு? நூலகர் செல்வராஜாதான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.. அ.ந.க.வின் சுதந்திரன் பத்திரிகைக்கான பங்களிப்புப் பற்றிய பல குறிப்புகளை முகநூலிலும் , பதிவுகள் இணைய இதழிலும் பதிவு செய்துள்ளேன். சுதந்திரனில் அவர் எழுதிய படைப்புகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்துள்ளேன். கவீந்திரன், கலையரசன், பண்டிதர் திருமலைராயர், அ.ந.கந்தசாமி ஆகிய பெயர்களில் அ.ந.க.வின் படைப்புகள் சுதந்திரனில் அவர் ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. அதன் பின்னரே அ.ந.க இலங்கைத் தகவற்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பத்தாண்டுகள் (1953 -1963) பணிபுரிந்தார்.அக்காலகட்டத்தில் அவர் தகவற் திணைக்களத்தின் தமிழ்ச் சஞ்சிகையான ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரிய பீடத்திலிருந்தார்.
அ.ந.க.வின் சுதந்திரனுக்கான பங்களிப்பு பற்றி மேலும் குறிப்பிடுவதற்கு முன்னர் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். எழுத்தாளர் என்.கே.ரகுநாதனின் நேர்காணலொன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதனை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா தனது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளார். அதில் என்.கே.ரகுநாதன் கேள்வியொன்றுக்குப் பின்வருமாறு பதிலளித்திருப்பார்:
" கேள்வி: உங்களின் இலக்கியப் பயணம் எப்படி ஆரம்பமானது?
என்.கே.ரகுநாதன்: சிறுவயதில் இருந்தே எனக்கு நன்றாக வாசிக்கும் பழக்கம் இருந்தது. எங்கள் ஊரவரான யாழ்ப்பாணக் கவிராயர் எனப்படும் கவிஞர் பசுபதிக்கும் எனக்கும் இடையில் நல்லதொரு நட்பும் இருந்தது. இவையும் நான் எழுதிய கதைகள் எல்லாவற்றையும் உடன் பிரசுரம் செய்த சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் அ.ந. கந்தசாமியும் என் இலக்கியப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தனர் எனலாம். அதை விட 1951 ம் ஆண்டு எனது 20 வயதில் எழிலன் என்ற புனைபெயரில் நான் எழுதிய முந்திவிட்டாள் என்ற கதை இந்தியாவில் அந்த நேரம் வெளிவந்த பொன்னி என்ற சஞ்சிகையில் அட்டைப் படத்துடன் பிரசுரமாகி மிகுந்த ஊக்கம் தந்தது."