- கணையாழி சஞ்சிகையின் பெப்ருவரி 2022 இதழில் வெளியான எனது கட்டுரை. கட்டுரையில் தவறுதலாக அக்டோபர் புரட்சி நடைபெற்ற ஆண்டு 2017 என்று அச்சாகியுள்ளது. இது எனது தட்டச்சுப்பிழை. அதனை 1917 என்று மாற்றி வாசிக்கவும். கணையாழி சஞ்சிகை மின்னிதழாக வெளியாகின்றது. மக்ஸ்டெர் இணையத்தளத்தில் சந்தா கட்டி அதனை வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள முகவரி: http://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/
பாரதியாரின் எழுத்துகள் தேடல் மிக்கவை. தெளிவு மிக்கவை. மானுடப் பருவத்தின் பல்வேறு படிகளிலும் , மானுட அறிவின் வளர்ச்சிக்கேற்ப புதிய அர்த்தங்களைத் தந்து விரிந்து செல்பவை. அவரது வாழ்வு குறுகியது. அக்குறுகிய வாழ்வினுள் அவர் எழுதினார். மானுட இருப்பு பற்றிச் சிந்தித்தார். சக மானுடர்கள்தம் வாழ்க்கை, அவற்றின் தரம், பிரச்சினைகள், துயரம் , தீர்வு என்றெல்லாம் சிந்தித்தார். அந்நியராதிக்கத்தில் அடிமைப்பட்டுக்கிடந்த பிறந்த நாட்டின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். தான் வாழ்ந்த மானுட சமூகத்தின் வர்க்க விடுதலைக்காக, வர்ண விடுதலைக்காகச் சிந்தித்தார். எழுதினார். அத்துடன் எழுத்துடன் நின்று விடாது சமூக, அரசியல் மட்டத்தில் செயற்பட்டார். பிறநாட்டுப் படைப்புகளையெல்லாம் வாசித்தார். அவற்றிலிருந்து அறிந்தவற்றைத் தன் சிந்தனைத் தேடலுக்குட்படுத்தினார். அத்தேடலினூடு தானடைந்த ஞானத்தைக் கட்டுரைகளாக்கினார். கவிதைகளாக்கினார்.
என்னைப்பொறுத்தவரையில் அவரது படைப்புகள் மட்டுமல்ல வாழ்க்கையுமே ஒரு வழிகாட்டிதான். என்னிடம் எப்பொழுதுமே பாரதியாரின் கவிதைத்தொகுப்பு என் முன்னால் மேசையிலிருக்கும். அவ்வப்போது அதைப்பிரித்து வரிகள் சிலவற்றை வாசித்தாலே போதும். சோர்வு அகன்று விடும். இருப்பின் இன்பம் , அர்த்தம் புரிந்து விடும். பாரதியாரின் கவிதைத்தொகுப்பொன்றினை என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டிலேயே அப்பா வாங்கித் தந்திருந்தார். {கூடவே புலியூர்க் கேசிகனின் சங்க இலக்கியப் பொழிப்புரை நூல்களும் கூடவே ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்) நூல்களையும் வாங்கித் தந்திருந்தார். இராமாயணனும், மகாபாரதமும் ஒவ்வொருவர் வீட்டிலிருக்க வேண்டுமென்பது அவரது கருத்து. அதனாலேயே குழந்தைகள் ஐவருக்கும் அக்காப்பியங்களிலிருந்தே பெயர்களையும் சூட்டினார். சசிரேகா, கிரிதரன், பாலமுரளி, மைதிலி, தேவகி என்பது அவர் எங்களுக்கு வைத்த பெயர்கள் என்றால் அவர் இவ்விடயத்தில் எவ்வளவுதூரம் ஆர்வமாகவிருந்தார் என்பதைப் புலப்படுத்தும். )
என்னை மிகவும் அதிசயிக்க வைத்த ஒரு விடயம். பாரதியார் தன் கவனத்தைக் கம்யூனிச அமைப்பின் மீது, அதற்கான ஆயுதப் புரட்சியின் மீது திருப்பியதுதான். அக்டோபர் 1917இல்தான் ருஷியாவில் புரட்சி நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்தது. பாரதியாரின் கவனத்தையும் அது ஈர்த்தது. அது பற்றி அவர் நிறையவே சிந்தித்திருக்கின்றார். அதன் நன்மை, தீமைகளைப்பற்றித் தனது எழுத்துகளில் தர்க்கித்திருக்கின்றார். அது அவர் வாழ்ந்த சூழலில் மகத்தானதொரு விடயமாக எனக்குத் தென்படுகின்றது.
மகாகவி பாரதியார்பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்யாவைப் பற்றிய கவிதை, 'செல்வம்', 'தொழிலாளர்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், மற்றுமவர் தத்துவப் பாடல்கள் இவையாவுமே நமக்குக் கூறி நிற்பவை தானென்ன? பாரதி ஒவ்வொரு விடயத்தினைப் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட கருத்துகளையும் வெகு நுணுக்கமாகப் பரிசீலித்துள்ளாரென்பது மட்டுமல்ல, அவர் காலத்து பூகோள நடப்புகளையும் அறிந்துள்ளாரென்பதையும்தான்.
இன்றைய உலகில், முரணான பல்போக்குச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பார்வைகளில் பாரதியினைக் கண்டு புளகாங்கிதமடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியாரின் உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முயல்வது மிகவும் அவசியம். இது பற்றிய அவரது முரண்பட்ட போக்குகளை, தேடலை அவரது எழுத்துகளினூடே அறிந்து கொள்ள முயலவதே சாலச் சிறந்தது.
'பாரத சமுதாயம்' என்னும் கவிதையில் அவர் பின்வருமாறு பாடுகின்றார்:
"முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை.
ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை.
மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?
பலனில் வாழ்க்கை இனியுண்டோ?"
இவ்விதம் பாரதியாரின் கவிதைகள் 'பொதுவுடமை'யினையும் 'சமத்துவத்தையும்' வரவேற்றுப் பாடுகின்றன. இவ்விதம் பொதுவுடமைக் கருத்தினை வரவேற்றும், ஆயுதம் தாங்கி நிகழ்த்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினையும் வரவேற்றுப் பாடிய பாரதியாரை மார்க்ஸியவாதிகள் புரட்சியினை , ஆயுதப் புரட்சியினை வரவேற்றிடும் ஒரு கவிஞனாக எண்ணி விடுகின்றார்கள். ஆனால் உண்மை இதுவா? பாரதியாரின் ஆவேசத்தினையூட்டிடும் சுதந்திரப்பாடல்களையும், பாப்பாப் பாட்டில் "பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்/பயங்கொள்ளலாகாது பாப்பா!மோதி மிதித்து விடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!" என்று பாடுவதையும் பார்த்துவிட்டு அவர் வன்முறையின் மூலம் தீர்வு காண்பதனையே விரும்புவதாக ஒரு சாரார் கருதிவிடுகின்றார்கள். ஆனால் இவை எல்லாவற்றையுமே தவிடு பொடியாக்கி விடுகின்றது பாரதியாரின் 'செல்வம்' என்ற கட்டுரை. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:
"ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடமையாகி விட்டது. இக்கொள்கை ஜெர்மனியிலும் ஆஸ்த்திரேலியாவிலும் துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகின்றது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரமாண்டமான பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ருஷ்யாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததால் அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்து விட்டது. அங்கிருந்து இந்தக் கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகின்றது. ஐரோப்பாவிலுள்ள பிராண்ஸ் இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைத் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகின்றார்கள். ஆனால் இந்த முறைமை போர் கொலை பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம், ஸகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குத்துவெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கின்றேன்.."
இதே கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பாரதியார் பின்வருமாறு கூறுகின்றார்:
"..'கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய குறைக்காது. பாபத்தை புண்ணியத்தாலே தான் வெல்ல வேண்டும். பாபத்தை பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை..." இவ்விதமாகக் கூறுமவர் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:"மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் 'ஸோஷலிஸ்ட்' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்து போய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் 'கூட்டு வாழ்க்கை' குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்தில் ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த வல்லரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டு...".
இவை எவற்றை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஒன்றினை மட்டும் அவை எமக்கு வெகுதெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன. அதாவது பாரதியார் பொதுவுடமைச் சமுதாயத்தினை ருஷ்ய அமைப்பு முறையினை வரவேற்றிடுகின்றார். ஆனால் ருஷ்யப் புரட்சி நிகழ்ந்த முறையினைத் தான் வரவேற்றிடவில்லை. அதே சமயம் ருஷ்ய நாட்டினைக் கொடுங்கோலன் ஜார் வருத்தி வந்திட்ட முறையினைக் கண்டு மனம் வெதிர்த்திட்ட பாரதியார் அக்கொடுங்கோலனின்றும் ருஷ்ய மக்களை விடுவித்த புரட்சி என்பதற்காக ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டிய போதும் வன்முறைப் புரட்சியினை அவர் மனம் ஒப்பவில்லை.
அதே சமயம் 'ருஷ்யாவின் விவாக விதிகள்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதுகின்றார்:
"..போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன் மீது ராஜரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கட்சியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்ற அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால் 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு'. ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்ஜியத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்க முடியும்? சில தினங்களின் முன்பு இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரஞ் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷ்யாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விபரங்களைப் பிரசுரஞ் செய்துள்ளது. அவற்றைப் பார்க்கும்போது நவீன ஐரோப்பிய நாகரிகம் என்று புகழப்படும் வஸ்த்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவநிலைமை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கின்றதென்று தெளிவாக விளங்குகின்றது. ஆன்பெண் இருபாலாரும் பரிபூர்ண ஸமானம் என்ற கொள்கைக்கு பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டை சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரிகத்தின் உண்மையான நோக்கம். ..அந்த வகையில் பார்த்தால் ஐரோப்பாவின் இதரபகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷ்யா உயர்ந்த நாகரிகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யஷமாகத் தெரிகிறது..."
இவையெல்லாம் நமக்குக் காட்டி நிற்பவைதான் யாதோ? பாரதியார் புதிய ருஷ்ய சமுதாய அமைப்பினை வரவேற்றிடுகின்றார் என்பதையல்லவா?..சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஆவேசத்துடன் கண்டித்த பாரதியாரை நவீன ருஷ்ய அமைப்பு முறை கவர்ந்திட்ட போதிலும் அது ஏற்பட்ட வழியினை அவரால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. அதனால் தான் இவ்விடயம் பற்றிய அவரது கேள்விகள் தேடல் ஆகியன அவரது பல்வேறு கட்டுரைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அதே சமயம் மேற்படி கட்டுரைகள் அவர் தன் மனதுக்கேற்ற வழியில் இவற்றிற்கான தீர்வுகள் பற்றிச் சிந்தித்திருப்பதையும் புலப்படுத்தி நிற்கின்றன. உதாரணமாக அவரது 'செல்வம்; என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுவார்:
"..முதலாவது இந்தியாவிலுள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள். எனவே கொள்ளைகளும், கொலைகளும், சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டு பிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும். செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது. ஸாத்தியமும் இல்லை.."
மேலுள்ள பாரதியாரின் கூற்றினை வாசிப்பவர் பாரதியாரின் முரண்பட்ட போக்கினை வெகு இயல்பாகவே விளங்கிக் கொண்டிட முடியும். பொதுவுடமையினைப் போற்றிப் பாடிடும் பாரதியார், நவீன் ருஷ்யாவினை, அதன் அமைப்பு முறையினை, அங்குள்ள பெண்களின் நிலையினை வரவேற்ற பாரதியார் "இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. .." என்று கூறுவது 'தனியுடமை'யை ஆதரிப்பதாகுமன்றோ எனக் கேட்கலாம். ஆனால் இன்னுமோரிடத்தில் "செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் பொருந்தாது.." என்று கூறுவது மறைமுகமாகக் கூறி நிற்பது தானெது? செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் கூடாது. ஆனால் அமைதியானதொரு வழியில் இதற்கான தீர்வு காணப்படலாம் என்பதைத்தானே. ருஷ்யப் புரட்சியினை வரவேற்கும் பாரதி, அங்குள்ள பெண்கள் நிலையினை வரவேற்கும் பாரதி ஆயுதப் புரட்சி விடயத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுவதை மேற்படி கூற்றுகளால் அவதானிக்க முடிகிறது. இத்தகையதொரு தடுமாற்றத்தின் விளைவினை அவரது 'தொழிலாளர்' என்னும் கட்டுரையிலும் காணக்கூடியதாகவிருக்கிறது. அதிலோரிடத்தில் அவர் பின்வருமாறு கூறுவார்:
"..எனவே இந்தியாவில் முதன் முதலாக தொழிலாளர் கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச் சமயத்தில் நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதிறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலே கிள்ளிவிட முயற்சி செய்யவேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்...ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யாவிடின் நாளடைவில் ருஷ்யாவிலுள்ள குழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்... ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைனியங்களில் பெரும்பகுதியார் தொழிற்கட்சியையும் அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய் விட்டனர். இதனின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற்கட்சிக்குக் கிடைத்து விட்டது. தேசத்து நிதியனைத்தையும் சகல ஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து எல்லோரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கின்றார்கள். தேசத்துப் பிறந்த ஸர்வஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது உண்மையாய் விடில், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமல் போகும்படி ஸகலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால் தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தியடைந்து ஜனங்களின் சேஷமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும். எனவே ருஷ்யாவிலுள்ள அபேவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையனவல்ல. ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருச்க்யக் கொள்கைகள் இப்பொழுது அனுஷ்டிக்கப்படும் ருஷ்யமுறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால் அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்தன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும், ஏழைகளும், ஒருவரையொருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும், தூக்குமரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?"
இவையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பவைதான் யாதோ? இவற்றில் காணப்படும் பாரதியாரின் தடுமாற்றம் நமக்கு உணர்த்துவதுதானெதுவோ? சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ருஷ்யாவின் கோட்பாடுகளை ஓரளவுக்கு பாரதியார் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அதனை அடைவதற்கு ருஷ்யா கைக்கொள்ளும் ஆயுதப் புரட்சியினையும், பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தினையும் தான் அவரால் ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. அதே சமயம் மானுடரின் முழுவிடுதலை பற்றியும் பாரதியார் பெரிதும் சிந்தித்திருக்கின்றாரென்பதையும் அவரது படைப்புகள் நமக்குப் புலப்படுத்தி நிற்கின்றன. மானுடரின் முழுவிடுதலை அகவிடுதலயினைப் பெறுவதன் மூலம், மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்று அவர் கருதுவதையே அவரது 'சர்வமத ஸ்மரஸம்' , 'தாய்மாண்பு', 'அன்பு செய்தல்' முதலான கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன.
பாரதியாரின் மேதமை அவரது காலகட்டச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் எத்தனை மகத்தானதென்று புலப்படும். உண்மையில் பாரதியார் அன்றையச் சூழலில் 'ருஷ்யா'வை பற்றித் தனது நோக்கினத் திருப்பியதும், பெண்களின் நிலை பற்றிய பிரச்சினையில் ரஷ்ய, ஐரோப்பிய முறைகள் பற்றிய ஆய்வினை நடத்தியதும், இந்திய தத்துவ நூல்களை விரிவாக ஆராய்ந்ததும், 'நிற்பதுவே நடப்பதுவே' என்னுங் கவிதையில் பொருள்முதல்வாத/கருத்து முதல்வாதத் தத்துவங்களையிட்டு ஆராய விளைந்ததும், தீண்டாமை/பெண் விடுதலை பற்றிச் சூழலை மீறிச் சிந்தித்ததும்..இவை யாவுமே மகத்தான விடயங்களாகும். அவர் வாழ்ந்த சூழலில் அந்த அளவுக்குச் சூழலை மீறிச் சிந்தித்ததே மாபெரும் அற்புதமெனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.