ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது. விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல இன்னிசையால் ஈர்க்கப்பட்டவர்கள் பல திசைகளிலும் இருந்து அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தனர்.
சிந்துஜா அந்த மண்டபத்தை இரண்டு தடவைகள் சுற்றி வந்து விட்டாள். ஸ்கைடோம் வாசலில் அவளது அறைத்தோழி ரமணியைச் சந்திப்பதாக இருந்தது. ஸ்கைடோமுக்கு எல்லாப் பக்கமும் வாசல் இருப்பதால் எந்த வாசலில் சந்திப்பது என்ற சந்தேகத்தில் தான் அவள் சுற்றி சுற்றி வந்தாள். கோயிலுக்குப் போனால்கூட ஒரு தடவை பிரகாரத்தைச் சுற்றிவர கஸ்டப்படுபவள் இன்று இந்த மண்டபத்தை இரண்டாவது தடவை சுற்றி வரும்போது இசையால் எவ்வளவு தூரம் கவரப் பட்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தாள். ரமணியிடம் தான் இவளது டிக்கட்டும் இருந்தது. இவள் வேலை முடிந்து இங்கே வருவதாகவும் ரமணி இங்கே காத்திருப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. என்ன காரணத்தாலோ ரமணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சொற்ப நேரத்தில் நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போவதாக வேறு அறிவித்து விட்டார்கள். வேறு டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போகலாம் என்றால் டிக்கட் எல்லாம் விற்பனையாகி விட்டதற்கான ‘சோல்ட் அவுட்’ என்ற அறிவிப்பு வாசலில் பளீச்பளீச் சென்று மின்னிக் கொண்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியைத் தவறவிட அவளுக்கு விருப்பமேயில்லை. இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி வாழ்நாளில் கிடைக்குமோ தெரியாது. யாராவது ‘ப்ளாக்கில்’டிக்கட் விற்கிறார்களோ என்ற ஆவலோடு வாசலில் நின்ற கும்பலை எட்டிப் பார்த்தாள்.
கையிலே இரண்டு டிக்கட்டோடு அந்த இளைஞன் யாரையோ தேடிக் கொண்டு நிற்பது அவளுக்குத் தெரிந்தது. இனியும் தாமதிப்பதில் பிரயோசனமில்லை. அவனிடம் கேட்டுத் தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தாள்.
அந்த முடிவோடு துணிந்து அவனருகே வந்தது ‘எக்யூஸ்மி’ என்றாள்.
அவன் திரும்பிப் பார்த்தான். சிவந்த நிறம். சுருட்டைமுடி. சுமாரான உயரமாய் இருந்தான்.
‘என்ன?’
‘டிக்கட் விற்கப்போறீங்களா?’
‘ஏன்? உங்களுக்கு டிக்கட் வேணுமா?’
‘இருக்கா? ஒரு டிக்கட் தர்றீங்களா?’
‘ஓன்று தான் இருக்கு! என்னோட ஃபிரண்டைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். வர்றேன் என்றான், ஆளையே காணோம், நிகழ்ச்சி தொடங்கப் போகிறது அது தான் யோசிக்கிறேன்.’
‘அப்போ அதை எனக்குக் கொடுங்களேன்’ கெஞ்சலாகக் கேட்டாள்.
‘கொடுக்கிறேன், ஆனால் விலை கொஞ்சம் அதிகம்!’
‘அதிகம் என்றால், எவ்வளவு?’
‘அறுபது’
அவள் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. எப்படியாவது இந்த நிகழ்ச்சியைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவலில் தான் அவள் இவ்வளவு தூரம் வந்திருந்தாள்.
கைப்பையை எடுத்து பணத்தை எண்ணிப் பார்த்தாள். உதட்டைப் பல்லால் கடித்தவளின் முகம் மீண்டும் வாடியது.
‘ஏன் பணம் இல்லையா?’
‘என்கிட்ட ஐம்பது தான் இருக்கு’
‘பரவாயில்லை கொடுங்க, மிகுதியை அப்புறம் தாங்க!’
அவன் ஆசை காட்டினான்.
‘அப்புறம் என்றால் எப்போ தர்றது?’
‘எப்ப வசதியோ அப்போ தாங்க!’
அவள் பணத்தைக் கொடுத்து டிக்கட்டை வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் உள்ளே போனாள்.
அவன் உள்ளே சென்று தனது ஆசனத்தைத் தேடி அமர்ந்தபோது நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. அவன் வந்து அருகே அமர்ந்ததைக் கூடக் கவனிக்காமல் அவள் இசையோடு ஒன்றிப் போயிருந்தாள். மகுடி கேட்ட நாகம் போல, ரகுமானின் இசைக்குள் குளித்துக்கொண்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் மற்றவர்களைவிட இவள் சற்று வித்தியாசமாய் அரங்கிலே அவர்கள் பாடும் போது தன்னை மறந்து அவர்களோடு சேர்ந்து தானும் ரசித்து தாளம் போட்டு ஹம்பண்ணிக் கொண்டிருந்தாள்.
இடைவேளையின் போது அவன் எழுந்து வெளியே போய்விட்டு வந்தான். கையிலே கொண்டு வந்த மக்டோனால்ஸ் கம்போவில் ஒன்றை அவளிடம் நீட்டினான்.
‘நோ.. தாங்ஸ், வேண்டாம்!’ என்று மறுத்தாள்.
‘பரவாயில்லை! உங்களுக்கும் சேர்த்துத் தான் வாங்கினேன், சாப்பிடுங்க!’
‘நான் ஏற்கனவே உங்ககிட்ட கடன் பட்டிருக்கிறேன்!’
‘தெரியும்! உங்க கிட்ட வேறு பணம் இல்லை என்று தெரிந்து தான் உங்களுக்கும் சேர்த்து வாங்கி வந்தேன், பிடியுங்க!’
கடன்பட்டார் நெஞ்சம் போல, வாங்குவதா விடுவதா என்று அவள் தயங்கியபோது அவன் அந்தப் பொட்டலத்தை அவள் கைகளில் திணித்தான்.
‘தாங்ஸ்..!’ என்றாள்.
‘நீங்க ரொம்ப நல்லாய்ப் பாடுறீங்க!’
‘நானா?’ வெட்கப்பட்டாள்.
‘ஆமா.. மேடையிலே அவங்க பாடினது எனக்குக் கேட்கவே இல்லை!’
‘ஏன்...?’
‘நான் என்னை மறந்து, உங்க பாட்டைத்தானே கேட்டுக் கொண்டிருந்தேன்.’
‘உங்களை டிஸ்ரெப் பண்ணிட்டேனா?’
‘இல்லை! உங்க குரல் ரொம்ப இனிமையாய் இருக்கு, அதிலே ஒருவித கவர்ச்சி இருக்கு, நான் உங்க ரசிகனாகிட்டேன்’
‘ஸாரி.. ஐலவ் மியூஸிக்!’
‘அப்படியா? மியூஸிக்கை மட்டும் தானா லவ் பண்ணுவீங்க?’
இவன் என்ன அர்த்தத்தில் கேட்கிறான் என்பது அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும், அவள் அதற்குப் பதில் சொல்லாமல் முகம் சிவந்தாள்.
‘உங்க விலாசத்தை தாங்களேன், நான் எப்படியாவது மீதிப் பணத்தை உங்க கிட்ட சேர்ப்பிக்கிறேன்.’ அவன் பலமாய் சிரித்தான்.
‘ஏன் சிரிக்கிறீங்க? நான் கேட்டது தவறா?’
‘இல்லை! நீங்கதான் என்கிட்ட கடன் பட்டிருக்கிறீங்க! முறைப்படி நீங்க தான் உங்க விலாசத்தை அல்லது போன்நம்பரை எனக்குத் தரணும்!’ அவள் ஒரு கணம் தயக்கம் காட்டினாள்.
‘இல்லை... வந்து போன் நம்பரைத் தரலாம்... ஆனால் அப்புறம் தினமும் போன்பண்ணி நீங்க என்னைத் தொந்தரவு படுத்தமாட்டீங்களே?’
‘தொந்தரவா? உங்களையா? எதற்கு?’
‘மீதிப் பணத்தைக் கேட்டு போன் பண்ணுவீங்க, அப்புறம் சாக்குப் போக்குச் சொல்லி என்னோட ரூமுக்கு வருவீங்க.’
‘ஓ..கோ..? நீங்க ரொம்ப முன்னெச்சரிக்கையாய்த் தான் இருக்கிறீங்க!’
‘ஆண்கள் விடயத்திலே நாங்க அப்படித்தான் இருக்கணும்!’
‘இருங்க, தாராளமாய் இருங்க. என்னோட மிகுதிப் பணத்தைக் கொடுத்திட்டா நான் ஏன் போன் பண்றேன்?’
‘அப்படியா? தட்ஸ்குட்! அப்படின்னா என்னோட போன் நம்பரைக் குறிச்சுக் கொள்ளுங்க!’
அவன் குறித்து வைத்துக் கொண்டான்.
அப்புறம் ஒரு தடவை நேரிலே சந்தித்தார்கள். அவள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் அவன் மிகுதிப்பணத்தை வாங்க மறுத்து விட்டான்.
‘இதற்குத்தான் சொன்னேன் ஆண்கள் கிட்ட கடன்படக்கூடாதென்று!’ பொய்யாய்க் கோபங்காட்டினாள்.
அதன் பின் அவர்கள் இருவரும் பலதடவைகள் தொலைபோசியில் பேசிக் கொண்டார்கள்.
அவளை எப்படியும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் தன்னை இன்று சந்திக்க முடியுமா என்று அவளிடம் அவன் கேட்டிருந்தான். அவனைச் சந்திப்பதில் அவளுக்கும் விருப்பம் இருந்தது. அவன் முகம் அடிக்கடி அவளின் நினைவில் வந்தது. அவனிடம் மெல்ல மெல்லத் தான் ஈர்க்கப் படுவதை அவளால் உணரமுடிந்தது.
கவர்ச்சியாக உடையணிந்து உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசும்போது தற்செயலாக முகம் பார்க்கும் கண்ணாடியைக் கவனித்தாள். ரமணி தனது கட்டிலில் சாய்தபடி வைத்த விழி மூடாமல் அவளையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
‘ஏய் என்ன அப்படிப் பார்க்கிறாய்?’
‘ஒன்றுமில்லை!’ ரமணி சட்டென்று சமாளித்தாள்.
‘இல்லை நீ எதையே மறைக்கிறாய், கொஞ்ச நாளாய் ஒரு மாதிரி இருக்கிறாய், ஏன் என்று சொல்லேன்?’
‘இல்லையே! நான் நல்லாய்தான் இருக்கிறேன்!’
‘என்னை நம்பச் சொல்லுறியா? உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? பிளீஸ் உனக்கு என்ன நடந்திச்சு என்று சொல்லேன்!’
‘சொல்றேன், இப்போ நீ வெளியே போகப்போறியா?’
‘ஆமா! நான் சொன்னேனே ஸ்கைடோமில் மியூசிக் புறோக்கிறாம் போது ஒருவனைச் சந்தித்தேன் என்று, அவனைத்தான் இப்போ பார்க்கப் போகிறேன்.’
‘நான் நினைச்சேன்..! நீ கட்டாயம் அவனைப் பார்க்கப் போகணுமா?’
‘இன்று தன்னைச் சந்திக்க முடியுமான்னு என்னைக் கேட்டான் என்னாலே மறுக்க முடியவில்லை! உனக்கொன்று தெரியுமா? அவன் என்னை லவ் பண்றான் போல இருக்குடி..!’
‘அவன் லவ் பண்றது இருக்கட்டும்! நீ அவனை விரும்பிறியா?’
‘தெரியலை! எனக்கு ஒன்றுமாய்ச் சொல்லத் தெரியலை! ஆனால் அவனை அடிக்கடி பார்க்கணும் போல எனக்குள் ஏதோ ஒரு உணர்வு இருக்கு!’
‘அப்படின்னா என்னை விட, எங்க ஃபிரன்ட்ஸிப்பை விட, நேற்று வந்த அவன் தான் உனக்கு முக்கியமாய் தெரியுது, அப்படித்தானே?’
ரமணி கண்கள் கலங்க ஏக்கத்தோடு அவளைப் பார்த்துக் கேட்டாள். பட்டென்று அழுது விடுவாள் போல இருந்தது.
‘ஏய்! என்ன இது? அழாதே! உன்னை நான் மறப்பேனாடி? யார் குறுக்க வந்தாலும் எங்க நட்பை யாராலும் பிரிக்க முடியாதடி!’
அருகே சென்று அவளது கண்ணீரைத் துடைத்தபடி ஆறுதல் சொன்னாள். அந்த வார்த்தைகள் அவளுக்கு இதமாக இருந்தது.
‘உண்மையாய் தான் சொல்லுறியா? யாரோ ஒருத்தன் எங்களைப் பிரிச்சுட்டானேடி!’
‘எங்களுக்குள்ளே இருப்பது நட்பெடி! அவன் என் மேலே வைத்திருப்பது காதல்! இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே!’
‘நான் குழப்பலை! நட்பு எல்லையை மீறினால் அதுவே காதலாய் மாறிவிடும்! அது தெரியாதா உனக்கு?"
‘ரமணீ! நீ என்ன சொல்கிறாய்?’
‘ஆமாடி! நான் கூட உன்னோட தொடக்கத்திலே நட்போடு தான் பழகினேன். ஆனால் உன்னோடு நெருக்கமாய்ப் பழகத் தொடங்கியதாலோ என்னவோ உன்கிட்ட எனக்கு ஒருவித ஈர்ப்பு வந்திடிச்சு. நீ வைரஸ் சுரம் வந்து படுத்திருந்த போது உனக்குப் பணிவிடை செய்தேனே ஞாபகம் இருக்கா? அப்போ உன்னைத் தொட்டுத் தூக்கி உனக்குப் பணிவிடை செய்யும் போது எனக்குள் ஒரு சுகமான உணர்வு இருப்பதை உணர்ந்தேன். அப்போது தான் உன்னை நான் உண்மையிலேயே நேசிக்க ஆரம்பித்தேன். இப்போ உன்னைப் பிரிஞ்சு ஒரு நிமிடம் கூட என்னாலே இருக்க முடியாது என்கிற நிலை எனக்குள்ளே உருவாகிடிச்சு. என்னைத் தனியே தவிக்க விட்டுப் போயிடாதே.. பிளீஸ்!’ சிந்துஜாவின் கைகளை உணர்ச்சியோடு இறுகப்பற்றினாள் ரமணி.
‘நீ என்னடி சொல்கிறாய்?’ ஒன்றும் புரியாமல் சிந்துஜா கேட்டாள்.
‘நான் சொன்னது உனக்குப் புரியவில்லையா? என்னோட மனசிலை இருப்பதை எப்படி உனக்கு எடுத்துச் சொல்லி விளங்கப்படுத்துவது என்று தான் எனக்குப் புரியவில்லை!"
‘சரி, புரியக் கூடியதாய் தான் சொல்லேன்!’
‘உனக்கு நான் சொல்லப் போவது அதிர்ச்சியாய்த் தானிருக்கும்! ஆனாலும் நான் சொல்லித் தான் ஆகணும்!’
‘’சரி, சரி! அழாமல் சொல்லேன்!’
‘உன்னை நான் விரும்புறேன்டி!’
‘வட் டூயூ மீ....ன்....?’
‘ஐ லவ்யூ., ஐ லவ்யூ சிந்து!’ ரமணி விம்மியபடி சிந்துஜாவின் காலடியில் மண்டியிட்டாள்.
உடம்பெல்லாம் வியர்த்து விறுவிறுக்க, இது எந்தவகைக் காதல் என்று தெரியாமல், புதுமையான அந்த அனுபவத்தால் சிந்துஜா திகைத்துப் போய் அப்படியே நின்றாள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.