கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது, தூரிகையானது நிறங்களில் எப்படி தோய்த்தெடுக்கப்படுகின்றதோ அதைவிட முக்கியமாக வாழ்வில் தோய்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது என கூறினீர்கள். அதாவது இவ்விரு அம்சங்களுமே ஒரு ஓவியத்தின் வெற்றியை அல்லது அதன் சாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கூறினீர்கள். முக்கியமாக ஓவியத்தில் வெளிப்படும் கருப்பொருளானது ஓர் ஓவியரின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலித்தே ஆகும் என்பதனை பிக்காசோவின் ஓவியங்களை கொண்டு நீங்கள் வாதித்தீர்கள். இப்பின்னணியில் இளைய தலைமுறையினருக்கான உங்களின் செய்தி என்னபதில்: இளைய தலைமுறையினருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு தகுதியுடையவன் என்று என்னை நான் கருதி கொள்ளவில்லை. ஆனால் இதை சொல்லலாம். அதாவது இளைய தலைமுறையினர் ஆழ்ந்து, மிக ஆழ்ந்து கடந்த கால ஓவிய பிரமாண்டங்களை கற்க வேண்டும். அது கொன்ஸ்டாபிளாக இருக்கலாம். அல்லது மொனேயாக இருக்கலாம். அல்லது பிக்காசோவாக இருக்கலாம். இது ஒரு துறை. ஆழமான, கண்டிப்பான, மிக பரந்த பரப்பிது. கடும் உழைப்பையும், அர்ரப்பணிப்பையும் கோரக்கூடியது இது.
கேள்வி: பிக்காசோவின் வாழ்விலிருந்து எதனை ஓர் இளைய தலைமுறையினர் கற்கலாம் என கருதுகிறீர்கள்?
பதில்: பிக்காசோவின் வாழ்விலிருந்தும் ஓவியத்திலிருந்தும் கற்க நிறையவே உண்டு. Acrobats என்ற விடயப் பொருளை பிக்காசோ 1905 இலும் வரைந்தார். பின் அதே விடயப் பொருளினை 1930 களிலும் வரைந்தார். இரண்டையும் எடுத்து நீங்களாகவே ஒப்பு நோக்கி கொள்ளுங்கள். நான் கூறும் ஓவியம் பொறுத்தும் வாழ்வு பொறுத்தும் உள்ள உண்மைகள் இத்தகைய ஒப்பீட்டினால் வெளிப்படுத்தப்பட்டு விடும்.
கேள்வி: இன்னும் சற்று விரிவாக இதனை விளக்குவீர்களா?
பதில்:பிக்காசோ, தனது ஆரம்ப காலத்தில் அடிமட்டத்து மக்கள் தொடர்பாக அல்லது ஏழ்மைப்பட்ட மனிதர்களின் வாழ்வு தொடர்பில் அதிக இரக்கமும், வேதனையும் நிறைந்த ஓவியங்களை வரைய தலைப்பட்டார். இதனை, ஓவிய விமர்சகர்கள், நீல காலப்பகுதி என்றும் Blue Period, Rose Period என்றும் வரையறுத்து, விடயங்களை முடித்துவிட பார்ப்பர். ஆனால் பிக்காசோவின் இந்த இரக்கம் அதாவது அடிமட்டத்து மனிதனுக்கான இவ்விரக்கம், எப்படி தோன்றியது என்பதே கேள்வி. பிக்காசோவின் வாழ்வானது, மேற்படி காலப்பகுதியில், ஏனைய மனிதர்கள் மீது இரக்கம் பாராட்டும் ஒன்றாக இருக்கும் வகையில், அவரது வாழ்வு, அத்தகைய மனிதர்களின் வாழ்வோடு அந்நியப்படாது, ஒன்றிணைந்து காணப்பட்டது. அதற்கேற்ற வகையில், அதாவது, அவ் இரக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அவரது தூரிகை அசைந்தது.
- Acrobats Family with the Monkey -
பிக்காசோ 1905 இல் Acrobats தொடர்பாக இரண்டு முக்கிய ஓவியங்களை கீறியிருந்தார். ஒன்று Two Acrobats with the Dog, மற்றது Acrobats Family with the Monkey. இரண்டுமே உலகத்தை மகிழ்விக்கும் சர்க்கஸ் வித்தைக்காரர்கள் அல்லது சர்க்கஸ் கோமாளிகள் தொடர்பானது. உலகத்தை மகிழ்விப்பவர்கள், அல்லது தங்கள் சாகசத்தால் மக்களை சந்தோஷிக்கவும் திகில்படுத்தி ஆர்ப்பரிக்கவும் செய்யும் இவர்கள் - எலும்பும் தோலுமாய் இருப்பர். இவர்களது கண்களில் நாளையை பற்றிய ஒரு சிந்தனை, ஒரு கவலை குடிகொண்டிருக்கும். சிறுவன் நாயின் தலையில் அன்புடன் கரம் வைத்தபடி இருப்பான். நாயும் நன்றியுடன் இருக்கும். அடுத்த ஓவியத்தில் தாயானவள் தன் குழந்தையை அன்புடன் மடியில் வைத்து பார்ப்பவளாக இருப்பாள். குழந்தையின் மெலிந்த தந்தை, இயலாமையுடன் குழந்தையை பார்ப்பார் - வேதனை கவியும். இது 1905 இன் பிக்காசோ.
- Two Acrobats with the Dog -
கேள்வி: பிற்காலத்தில்?
பதில்: பிற்காலத்தில் அவரது வாழ்க்கை முறையே வித்தியாசப்பட்டு போனது. அபரிமிதமான பணம் - செல்வம்-அதற்கேற்ற வாழ்க்கை முறை–அதற்கேற்ற சீரழிவுகள்….- இவையனைத்தும், ஒரு கலைஞனை ஆட்டுவிக்க கூடும். இப்போது அவனது உள்ளத்தில் இரக்கத்திற்கான வெளி சிறிதாயும் ஏனையவற்றிற்கான வெளி பெரிதாயும் இருத்தல் கூடும். இதற்கேற்ப அவனது தூரிகை அசையும் விதமும் வர்ணங்களை அவன் அதற்கேற்ப தேர்ந்து கொள்ளும் விதமும் வித்தியாசப்படவும் கூடும். 1930களில், பிக்காசோ Acrobatsஐ வரைந்துள்ளார். Acrobats தொடர்பாக ஆறு ஓவியங்களை 1929-1930களில் அவர் தீட்டினார் என கூறுவர். இவ்ஓவியங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உருவங்கள் ஆணா பெண்ணா என்பது தெளிவற்று இருப்பதாக ஓவிய விமர்சகர்கள் குறிப்பிடுவர். இவ் ஓவியங்கள் நவீனத்துவ ஓவிய பாணியில் தீட்டப்பட்டவை. இவற்றுக்கும் மக்களின் வேதனைகளுக்கும் அல்லது Acrobats வாழ்வின் வேதனைகளுக்கும் தொடர்பே கிடையாது. இது வாழ்வு ஏற்படுத்தி தரும் விதிகளில் ஒன்றா – அதாவது அழிக்க முடியாத விதிகளில் ஒன்றா– என்பதெல்லாம், இன்றும் புதிராகவே இருக்கின்றது.
கேள்வி: இப்பின்னணியில் வான்கோவின் ஸ்தானத்தை எப்படி மதிப்பிடுகின்றீர்கள்?
பதில்: இயற்கையுடனும் மக்களுடனும் சங்கமித்து, அவர்களுக்காய் தன் வாழ்வை தாரைவார்த்து சென்று விட்ட ஒரு மகாகலைஞன் அவன். இயற்கையின், மனிதனின் சங்கமிப்பின் அழகை அவனது ஓவியத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அவனது வாழ்வு போன்றே அவனது ஓவியமும் கொதிப்பேறி கிடந்தது. இவைகள் மனுகுல வரலாற்றின் பொக்கிஷங்கள். இவர்களை கற்காமல் வாழ்வின் இறுதி கட்டத்தை ஒரு மனிதன் அடைவது என்பது, ஒரு ஓவியனை பொறுத்தவரை, வள்ளுவன் கூறுவது போல “கண்ணிருந்தும் இல்லாத கதையாகத்தான்” இருக்கும். இதனாலேயே இத்துறையை தேரும் ஒரு இளைய தலைமுறையினரை இவ்விரண்டு அம்சங்கள் பொறுத்தும் - வாழ்வு பொறுத்தும் - வண்ணங்கள் பொறுத்தும் கற்க வேண்டி இருப்பது ஓர் முன்நிபந்தனையாகின்றது.
கேள்வி: அதாவது, ஒரு இளைய தலைமுறையினர் வான்கோ யார் என்ற கேள்வியை தீர்க்கமான முறையில் அவனுள்ளேயே எழுப்பிக் கொண்டு அவனைக் கண்டுப்பிடிக்க அல்லது புரிந்து கொள்வதில் முழு முயற்சியையும் செலுத்த வேண்டும் என்கின்றீர்களா?
பதில்: நிச்சயமாக. பாரதியின் வாழ்வை கற்பது அல்லது வான்கோவின் வாழ்வை கற்பது என்பதெல்லாம் இப்படியாகத்தான் அர்த்தப்படும்.
கேள்வி: வாழ்வின் எந்த பக்கங்களில் ஓர் இளைய தலைமுறையினர் தன் தூரிகையை நனைத்தாக வேண்டும் என கருதுவீர்கள்?
பதில்: சுருக்கமாக கூறினால் அது வான்கோ அல்லது பாரதி நனைத்த பக்கத்தில் என சுருக்கமாக கூறுவேன்.
கேள்வி: இது எப்படித்தான் நிறைவேற போகிறது?
பதில்: இதற்கு பதிலளிப்பதானால் இந்த பேட்டி போதாததாகிவிடும். வில்லியம் டர்னர் (William Turner) தன் ஓவியங்களுக்காக, புயல் சுழன்று வீசியடிக்கும், கடலில், தன் தோணியுடன் அல்லது சிறு படகுடன், கடலுக்கு சென்றதாக தகவல். இங்கே, அவனைப் புரட்டி எடுத்த அலைகளும் ஆர்ப்பரித்து பொங்கும் கடலும் அவனது ஓவியங்களை உருவாக்கினவா அல்லது தன் ஓவியத்தை உருவாக்க என்றே அவன் சுழலையும் அலைகளையும் தேடிக் கொண்டு கடலுக்குச் செல்ல துணிந்தானா என்பதே கேள்வியாகின்றது. விடயம், இவையனைத்தையும் ஒரு இளைய தலைமுறையினர் கற்றாக வேண்டி உள்ளது.
வாசிப்பு-ஓவிய பயிற்சி-மானுட தர்மங்களை உள்வாங்கும் நேர்த்தி- இவையும் இவை போன்ற இன்னும் அனந்த விடயங்களும் இங்கே பின்னிப் படரவேண்டி இருக்கும். இவற்றிலிருந்துதான் மொனே-வான்கோ போன்ற ஓவியர்கள் ஒரு சகாப்தத்து மனிதர்களாக தோற்றமெடுக்கின்றார்கள் என்பேன் நான்.
- WheatField with Crows (1890) -
கேள்வி: வான்கோவின் வாழ்வையும் பிக்காசோவின் வாழ்வையும் அவ்வாழ்வுகள் தாக்கம் செலுத்திய ஓவிய வகைப்பாடுகள் பொறுத்தும் விளக்குவீர்களா?
பதில்: வான்கோவின் இறுதி ஓவியம் WheatField with Crows (1890) என கருதுகிறேன். பிக்காசோவின் இறுதி ஓவியம் அவரது மரண ஓலத்தை அல்லது மரண பயத்தை வெளிப்படுத்தும் சுய விம்பம் (Potrait) குறித்த சித்திரமாகும்.
விடயம் அவரவர்க்கு வாழ்வு தந்த தாக்கங்களிற்கு ஏற்ப அவர்களது ஓவியத்தின் கருப்பொருளும் வெளிப்படுத்தும் முறைமையும் அவற்றில் தேங்கி கிடந்த நிறங்களும், அம்சங்களும், ஆளுக்காள் வித்தியாசப்படுகின்றன. ஒருவரின் ஓவியத்தில் தன்னை பற்றிய ஏக்கம், இறுதி காலக் கட்டத்தில் கப்பி பிடிக்கின்றது. மற்றவர் உற்பத்தி செய்பவனின் வியர்வைதுளி குறித்து விசாரிக்க முற்படுகின்றார். இரண்டும் வௌ;வேறு பாதைகள்-வௌ;வேறு கலாசாரங்கள் சம்பந்தப்பட்டது.
- சுய விம்பம் (Portrait) -
கேள்வி: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து இளைய தலைமுறையினருக்கு நீங்கள் யாதை கூறக் கூடும்.
பதில்: எனது தந்தை தனது இறுதி காலங்களில் தன் பிள்ளைகளுக்காக ஒரு குறிப்பு புத்தகத்தை வடிவமைக்க துவங்கியிருந்தார். கிட்டத்தட்ட ஓர் 12 அங்குல நீளமும் 8 அங்குல அகலமும் கொண்ட ஒரு வித்தியாசமான குறிப்பு புத்தகம் அது. அவரே அக்குறிப்பு புத்தகத்தை தொகுத்தும் ஆக்கியும் இருந்தார். அக்குறிப்பு புத்தகத்தில் கிட்டத்தட்ட 50 வெவ்வேறு விதமான பேரரிஞர்களின் செய்திகளையும் கூற்றுக்களையும், தத்துவங்களையும் அவரது குறிப்பு நூலில் நான்கைந்து வரிகளில் அல்லது இன்னும் சிறிதாக அல்லது இன்னும் பெரிதாக–அழகான எழுத்துக்களில் தீட்டியிருந்தார். சேக்ஸ்பியர், சோக்ரட்டீஸ், தாகூர், லெனின், விவேகானந்தர், ராமாயணம், வேதங்கள், பௌத்ததத்துவம், காத்தே என 50க்கும் மேற்பட்ட அறிஞர்களின் அறிவு திரட்சியை அல்லது மேற்கோள்களை அவர் தன் பிள்ளைகளுக்காக இக்குறிப்பு நூலில் நகலெடுத்து எழுதி வைத்தார். இதற்காக அவர் இரண்டு வருடங்களுக்கு மேலான ஒரு காலப்பகுதியை எடுத்துக் கொண்டார் என நினைக்கின்றேன். நூலின் நுழைவாயிலில், அழகிய பெரிய தனித்தனி எழுத்துக்களால் இந்நூலை தன் பிள்ளைகளுக்கு அவர் சமர்ப்பணம் செய்திருந்தார். அவற்றில் என் மனதுக்கு இதம் தரும் வரிகள்:
“என் அருமை குழந்தைகளுக்கு இவற்றை நான் சமர்ப்பணம் செய்கின்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அதாவது, கடந்த காலத்தின், பிரமாண்டமான மனங்களுடனும் அறிவுலகத்துடனும் அவர்கள் சங்கமித்து உறவாடி சந்தோ~pத்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்..”
இதனையே நான் இன்றிருக்க கூடிய அல்லது நாளை தோன்றக்கூடிய ஒரு நாளைய ஓவியனுக்கு அல்லது இளைய தலைமுறையினருக்கு, சமர்ப்பணமாக கூறுவேன்.
கேள்வி: மிக்க நன்றி சதா, உங்களின் அருமை நேரத்தை செலவழித்து இந்நெடிய பேட்டியை தந்தமைக்கு.
பதில்: எனது ஓவிய பயணத்தில் பங்கேற்ற, உதவிபுரிந்த அனேகர் உண்டு. இந்நீண்ட நெடிய பேட்டியை சாத்தியப்படுத்திய, “பதிவுகள் கிரிதரனுக்கு” என் முதற்கண் நன்றி. இது போலவே, தான் வரும்போதெல்லாம் கனடாவில் இருந்து எனக்காக வர்ணங்களையும், கன்வாஸ்களையும் சுமந்து வரும் நண்பர் ராதாகிருஸ்ணன் உட்பட, எனது ஓவியங்களின் கண்காட்சியை ஜெர்மனி போன்ற வெளிநாட்டிலும், உள்நாட்டின் பல இடங்களிலும் காட்சிப்படுத்த உதவிய நண்பர்களையும் நான் மறக்க முடியாது.
ஆனால்என் ஓவிய வாழ்வுக்கு அடித்தளம் இட்ட என் தந்தை, நான் களைத்து சோர்கையில் தேனீர் தந்தும், என் ஓவியங்களை அவரது ஓவியங்களாக கவனமாக எடுத்துக் கொண்டு மாணவக் கண்காட்சியில் கொண்டு சென்ற பிரதர் ஜோசப் ஆகிய என் ஆரம்ப காலத்து ஆசானும் - பின்னர் டொனால்ட் ராமநாயக்க, கெப்ரியல் போன்ற எனது பிற்காலத்தைய ஆசான்களும் - மற்றும் நூல் வழியாக நான் கற்ற கடந்த கால மாபெரும் கலைஞர்களான கொண்டபிள்-மொனே-வான்கோ-பிக்காசோ போன்ற பெரியோர்கள்-இவர்கள் அனைவரின் நினைவுகளுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அன்பானவர்கள் இல்லாவிடின், இந்த பேட்டியும் நானும், இருந்திருக்க முடியாது என்பதே உண்மை. நன்றி.