8
ஆங்கிலேயர் ஆட்சியின் மீது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட ஆத்திரங்களின் பிரதிபலனாய் பல்வேறு எழுச்சிகள் இந்தியாவில் நடந்தேறுகின்றன. 1857 முதல் 1859 வரை நடந்த சிப்பாய் கலகம் முதல் (8லட்சம் மக்களை பலி கொண்ட இக்கிளர்ச்சி கங்கை-யமுனை நகரங்களிலும் அவத்தை, புந்தல்காண்ட், அலிகார், லக்னோ, கான்பூல், அலகாபாத் போன்ற நகரங்களில் வரி கட்டாமலும் காலணியாட்சி அதிகாரிகளை விரட்டியடித்தும் பதிலுக்கு தத்தம் நிர்வாக அமைப்புகளை நியமித்தும்) பின் 1876-1878இல் நடந்தேறிய உப்பு வரி எதிர்ப்பு போராட்டம் மேலும் 1889 இல் சென்னை மாகாணத்தின் கோதாவாரி ஆற்றின் கரையில் நடந்தேறிய ராம்பா விவசாயிகளின் கிளர்ச்சி இவை அனைத்திலும் இந்திய மிதவாத சக்திகள், ஆங்கிலேயரின் நண்பர்களாகவே செயல்பட தலைப்பட்டனர். அவர்களின் நலன்கள் ஆங்கிலேய நலன்களுடன் பிண்ணி பிணைந்ததாய் இருந்தன. எனவேத்தான் இவர்களுக்கு சுதேசியம் என்பது முக்கியமற்று போனது.
வெள்ளையானை கூறுகின்றது:
“டியூக்கின் உதடுகள் திறந்ததும் எய்டன் நிறுத்தினான்… நீ சொன்னது சரித்தான்… இந்த சந்தர்ப்பத்தில் நம்முடைய மொத்த நீதியுணர்வும் சோதிக்கப்படுகின்றது… நம்முடைய யதார்த்தமும் நம்மை சோதிக்கின்றது… நம்முடைய யதார்த்தம் மதராசையோ அல்லது இந்தியாவையோ மட்டும் கருத்தில் கொள்வதல்ல. நாம் உலகம் முழுவதை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டியிருக்கிறது…” (பக்கம் - 264)
அண்மையில் பி.ஜே.பி யின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவும், பா.ஜ.க வானது இலங்கையிலும் நேபாளிலும் தோற்றுவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
எல்லைகள் கடந்த மூலதனத்தின் நீட்சியை இது பிரதிபலித்தாலும் இதே கருத்துக்கள் போராடும் மக்களை சோர்வுற செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக பி.ஜே.பி யின் ஆட்சி குறித்து உள்ளூர திருப்தி தெரிவிக்கும் சில இடதுசாரிகள் கூட ‘இந்திய ஆட்சி’ என்பது உலகம் என்பதனை முழுமையாக கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற அடிப்படையில் மக்களின் போராட்ட நடவடிக்கையை நிராகரிப்பவர்களாக உள்ளனர் - ஏதோ இவர்கள் தாம் உலகத்தின் நகர்வையே நிர்ணயிப்பவர்கள் போல.
மறுபுறத்தில் மூலதனம் எவ்வாறு நாடுகளின் எல்லைகளை கடந்து ஊடுருவி கைக்கோர்க்கின்றதோ அல்லது போட்டி போடுகின்றதோ அல்லது ஆக்கிரமிக்கின்றதோ அதை போன்றே உழைப்பும்; நாடுகளின் எல்லைகளை கடந்து தமது தோழமை சக்திகளுடன் நேசம் கொள்கின்றது. அதாவது கார்ல் மார்க்சுக்கு நாடு என்ற ஒன்று இருக்க முடியாது என்பது போல, - இந்துத்துவாக்கும் மொழி என்ற ஒரு வரையறை இருக்க முடியாது. இக்காரணத்தினாலேயே மேற்படி பிரக்ஞையால் உந்தப்பட்ட கவிஞன் எழுதுவான்:
“முன் மொழிய ஒரு தேசம் இல்லை… ஆனால் எங்கும் உண்டு என் தோழமை மக்கள்…”
இதேப் போன்று வெள்ளை யானையிலும் ஆங்கிலேயருக்கான வாஞ்சை ஆங்காங்கே துளிர்விட்டு கிடப்பது தவிர்க்க முடியாததாகின்றது. இக்காரணத்தினாலேயே வெள்ளையானையில்,ஷெல்லி தூற்றப்படுதலும் ஏய்டன் விரும்பப்படுதலும் நடந்தேறுகின்றது. அதாவது, மிதவாதிகளுடனான கைகோர்ப்பு என்பது அன்று நடந்ததை போல இன்றும் தொடர்வதாகவே உள்ளது. இதற்கு இலக்கியம் என்பது ஓர் தொடர்பற்ற விடயம் என்பதிலும் பார்க்க பக்கபலமாய் செயல்படுவது என்பதிலேயும் வெள்ளையானையின் அரசியல் முக்கியத்துவம் வெளிப்படுகின்றது.
9
தலித்துகள் பொறுத்த ஜெயமோகனின் அணுகுமுறை என்பது அலாதியானதுதான். ஒருபுறம் தலித்துகளின் வரலாற்றுச் செழுமைகளை செயற்கையாக ஊக்குவித்தும் பெருமை பேசியும,; சாதீயத்தைக் கடந்தவராய் தன்னை இனங்காட்டி, மகிழும் ஜெயமோகன் மறுபுறத்தில் அவர்களது கீழ்மைகளைத் தூக்கிப் பிடித்து அவர்களை எள்ளி நகையாடி திருப்தியும் காண்பார். இவ்விரண்டு அணுகுமுறையிலும் நுண் அரசியல் அபரிமிதமாக செயற்படுகின்றது, தெளிவு. தலித்துக்களின் வரலாற்றுச் செழுமைகளைத் தூக்கிபிடிப்பதன் மூலம் அவர்களின் தனித்தன்மையை ஊக்குவித்து, அவர்களைத் தனிமைப்படுத்தவும் நாட்டின் பிரதான போர்முனையாக தலித்தியத்தைத் திறந்துவிட செய்யும் அவரது நுண் அரசியல் அவதானத்துக்குரியது. காத்தவராயன் என்ற தலித்திய இளைஞன் குறிப்பிடுவதாக ஜெயமோகன் குறிப்பிடுவார்:
“எங்கள் சாதிக்குள் நெடுங்காலமாகவே கல்வி மரபொன்று இருந்து வருகின்றது. மூத்தவர்களைக் குருவாக கொண்டு அதை நாங்கள் கற்று வருகின்றோம். என் தந்தை ஒரு அறிஞர். என் பாட்டனாரும் மரபான நூல்களில் அறிஞர்தான். இங்கே வெள்ளையர் அரசு கொண்டு வந்த பல முக்கியமான நூல்கள் எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக பேணப்பட்டவை” (பக்கம் - 83)
மேல் நோக்கிய பாரம்பரியம் குறித்த நகர்வு ஓரளவு வசதியை எட்டி பிடித்திருக்கும், தலித்திய சிறு முதலாளிய சிந்தனைகளுக்கு, திருப்தியளிப்பதாய் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் பிழை காண முடியாது. ஆனால் இப்படியான தலித்திய பிரஞ்ஞையைத் ‘தனிமைபடுத்தி’ தட்டியெழுப்பி கட்டி வளர்ப்பதன் மூலம் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டத்தில், இப்பிரஞ்ஞை சில சந்தர்ப்பங்களில் ஒன்றிணைவை தடுத்து பிளவுகளை ஊக்குவிக்கும் அரசியல் கருவியாகவும் செயற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இவ்வழியில் ஆதிக்க சக்திகள் காப்பாற்றப்பட்டு விடுவர். தலித்துக்களில் செயற்கையாக இப்படியாக ஆதிக்க சக்திகளால் ஊக்குவிக்கப்படும் ‘செழுமை’ பிற சாதியினரையும் பற்றி கொள்ளாமல் இருக்க முடியாது. கொள்கின்றது. அதாவது உழைப்பின் அடிப்படையில் ஒன்றிணையாமல் சாதீய அடிப்படையில் மாத்திரம் ஒன்றிணைவதால் நாட்டின் பிரதான முரண்பாடு சிதறிடிக்கப்பட்டு சாதீய முரண்பாடு முன்னிலை நோக்கி நகர்த்தப்படுகின்றது. இக்காரணத்தால் அம்பானி காப்பாற்றப்பட்டு விடுவார்.
குறுகிய தமிழ்த் தேசிய வாதத்தைப் போன்றே, குறுகிய சாதிய வாதத்தை நிராகரித்து உழைப்போரை அடித்தளமாக கொண்டு எழும் இன்குலாப்பின் எழுத்துக்களை நாம் ஒருகணம் இவ்வகையில் நினைவூட்டிக் கொள்ளலாம். இனம் குறித்தும் சாதீயம் குறித்தும் கவிஞர் இன்குலாப் அவர்கள் எழுதியிருந்தாலும் கூட அவ் எழுத்துக்களின் அடித்தளத்தில், ஊடுருவிநிற்கும் அடிப்படை நாதம் உழைக்கும் மக்கள் சார்ந்ததாகவே இருப்பது இவ்வகையில் குறிக்கத்தக்கது.
‘அத்தகைய’ எழுத்துக்களை மூழ்கடிப்பதென்றால், ‘இத்தகைய’ எழுத்துக்கள் முடுக்கிவிடப்படுவதென்பது ஒரு சராசரி அரசியல் சூத்திரதாரியின் தந்திரமேயாகும். வெள்ளையானை இந்த வகையிலும் சோடை போனதாக தென்படவில்லை. இவ்வகையில் காத்தவராயனுக்கூடு வெள்ளையானை மேலும் கூறுகின்றது:
“இங்கே பொது மரபாக நிறைய நூல்கள் கற்கப்படுகின்றன. அவையெல்லாம் சென்ற ஆயிரம் வருடங்களாக முக்கியத்துவம் பெற்றவை. அந்த நூல்கள் இங்கே உருவாவதற்கு முன்னதாக இருந்த நூல்களை எழுதியவர்களும் கற்பித்தவர்களும் நாங்கள்தான் - நாங்கள் அந்த நூல்களை இன்னும் கற்கின்றோம். அந்நூல்களை நான் முழுமையாகவே கற்றிருக்கின்றேன். பொது மரபில் உள்ள நூல்களையும் கற்றிருக்கின்றேன். அத்துடன் சித்த வைத்தியத்தையும் முறையாக கற்றிருக்கின்றேன். அதைத்தான் தொழிலாக செய்து வருகின்றேன்…” (பக்கம் - 84)
பழமையின் துதி பாடலும், கீழ்நிலை மக்களின், தொழிலாள – விவசாயிகளின், உண்மை விடிவு தொடர்பில் இருக்கக்கூடிய அரசியல் விஞ்ஞான பொருளாதார அறிவுத் துறைகள் இங்கு நிராகரிக்கப்படுதலும், புறந்தள்ளப்படுதலும் ஏதோ ஒரு வகையில் அரங்கேறவே செய்கின்றன. மறுபுறத்தில், இதேப்போன்று ஒவ்வொரு சாதியினரும் தத்தம் செழுமைகளைப் பேச கற்றுவிக்கவும் கற்றுவிக்கப்படலாம் - அவரவர்க்குச் சிலைகளையும் எழுப்பி கொள்ளலாம். சாதி சங்கங்களை அமைத்துக் கொள்ளவும் செய்யலாம். ஆனால், இவற்றின் மொத்த விளைவு யாதாக இருக்க கூடும்?
இத்தகைய சூழலிலேயே, இங்கே தொழிற்படும் நுண் அரசியல் என்பது, எதனை ஊக்குவிப்பதற்காக நடாத்தப்படுகின்றது என்பதைப் பொதுவில் வாசகர்கள் கண்டுணர முடிந்தால் சிறப்பானதாய் இருக்கும். இனி ஜெயமோகன் அவர்கள் தன் அடுத்த கட்டத்திற்கு மெதுவாய் நகர்ந்து செல்கின்றார். இதே காத்தவராயன் கூறுவான்:
“ஆமாம் சார் - நீங்கள் அளித்த வேலைகளுக்காக நாங்கள் நன்றியுடன் இருக்கின்றோம். உங்கள் செருப்புகளை தேய்க்கவும் உங்கள் வார்களை பாலிஷ் போடவும் கொடுக்கப்பட்ட வாய்ப்பகளுக்காக நன்றியுடன் இருக்கின்றோம். உங்களுக்காக போர் களங்களில் சாகும் வாய்ப்பை அளித்தமைக்காகவும் உங்களுடைய ரகசிய நோய்களை எங்கள் உடலில் சுமக்க செய்தமைக்காகவும் நன்றியுடன் இருக்கின்றோம். உங்கள் எல்லா சுயநல நோக்கங்களுடன், அயோக்கிய தனங்களுடனும் தந்திரங்களுடனும் கொடுமைகளுடனும் கூட. நீங்கள் மானுட தெய்வங்கள் தாம்.. அதற்காக எங்கள் தலைமுறைகள் உங்களுடன் இருக்கும்…” (பக்கம் - 99)
இதைவிட அநாகரிகமான முறையில் நுண் அரசியலின் செயற்பாட்டை இலக்கியத்தில் காண்பது அரிதாகவே இருக்கும். இது ஒரு புறம் இருக்க மேற்படி கூற்று அம்பேத்காரின் அரசிலுக்கு புது வரைவிலக்கணம் சமைக்க முயற்சிக்கின்றதா என்ற கேள்வியும் மேல்நிலை நோக்கி நகராமல் இல்லை. ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதியில் எந்த சாதித்தான் (ஒரு பிரிவினர்) ஆங்கிலேயர் சார்பாக செயற்படவில்லை என்பதனையும் எம்மை நாம் கேட்டுக் கொள்ள வேண்டியதாகவே இருக்கின்றது. இந்திய வரலாற்றை எடுத்து பார்த்தால் இங்கே காத்தவராயனின் நன்றியறிதல் என்பதை விட காந்தியின் நன்றியறிதல் அதிகமாக உண்டென கருத இடமுண்டு. உதாரணமாக சூலூ தேசிய போராட்டத்தின் போதும் (Zulu War)- முதலாம் உலக யுத்தத்தின் போதும் ‘ஆங்கில’ படை சார்பாக மருத்தவ வசதிகளுக்காக ஆள் திரட்டியது வெறும் கருணையின் அடிப்படையில் மாத்திரம் தானா என்பது கண்டுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது. (ஏனெனில், அக்காலப்பகுதியில் காந்தி, சர்ஜன்ட் மேஜர் காந்தியாக இருந்தார், அறியப்பட்டார். பிரிட்டிஷ் அரசு படைக்கு அவர் கடுமையாக உழைத்து ஆள் சேர்த்தார் என்பது வரலாறு).
ஆனால் ஜெயமோகனின் திருப்தி இங்கே தலித்துக்களை அவர்களுக்கூடாகவே அவர்களைத் தாழ்த்தி கூறுவதன் மூலம் முன்வைக்கப்படுகின்றது. வெள்ளை யானையில், ஓரிடத்தில், ஓர் பிரிட்டிஷ் அதிகாரி பின்வருமாறு குறிக்கின்றார்:
“பிரிட்டிஷ் சட்டங்கள் எல்வாவற்றிலும் அவர்கள் இந்தியர்களைப் பார்த்து சிரித்த ஓர் ரகசிய சிரிப்பு இருக்கின்றதே என்று கர்ணல் சொல்வதுண்டு” (பக்கம் 157)
உண்மைதான். ஆனால் இதனையே ஒத்த, ரகசிய சிரிப்பொன்று, ஜெயமோகனின் எல்லா எழுத்துக்களிலும், தலித்துக்களை, பார்த்து சிரிக்கப்படுகின்றது.
முடிவுரை
ஏய்டன், பஞ்சம்,ஷெல்லி, காத்தவராயன், நீலமேகம், என்று விரியும் இந்நாவலில் ஜெயமோகன் குறிப்பிட்ட ஓர் இந்திய வாழ்வில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் தத்துவங்களில் இருந்தும் தர்க்கங்களில் இருந்தும் தன் நாவலுக்கான குறித்த விடய பொருட்களை நுணுக்கமாக தேர்வு செய்து கொள்கின்றார். இத்தகைய தேர்வானது, தனக்கே உரிய ஓர் அரசியலை நுணுக்கமாக முன்னகர்த்த வசதி செய்து தரும் வகையில் பிரஞ்ஞையுடன் ஆற்றப்படுகின்றது. ஒருவகையில், இப்படி தேர்வதே ஜெயமோகனது அரசியலாகின்றது. அல்லது அவரது அரசியலே இத்தகைய ஒரு தேர்வை அல்லது ஒருதலைபட்சமான தேர்வினை நிர்ணயம் செய்கின்றது. இந்தியாவின், சாதீயக் கட்டுமானங்களில் யாரிடம் தான் தாழ்வான அம்சங்கள் இல்லை.
காத்தவராயன் ஏற்றுக்கொள்ளும் ஆங்கிலேயருக்கான நன்றியுணர்வினை இந்துத்துவ கண்டுப்பிடிப்பாளரான வீர சாவர்காரிடமும் காணப்படுவதாய் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். வீர சாவர்கார் தாம் கொடுத்த உறுதி மொழிகளின் அடிப்படையில் விடுதலையான பின்பு அவ் உறுதி மொழிகளுக்கு இறுதிவரை பாதகமற்ற முறையில் முரணற்ற வகையில் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருந்தார் என்பது பதிவு. அதாவது தமது விடுதலையின் பின்னால் அவர் சுயராஜ்ய போரில் என்றுமே பங்கேற்றியதாக சரித்திரம் இல்லை என வரலாற்றாசிரியர்கள் பதிவிட்டுள்ளனர். சுருக்கமாய் சொன்னால் இங்கே காணக்கிட்டும் ஆங்கிலேய வாஞ்சை என்பது ஜெயமோகனின் பாத்திரமான காத்தவராயனில் மடடுமல்ல வீர சாவர்காரில் மட்டுமல்ல ஜெயமோகனிடத்தில் கூட காணவேபடுகின்றது. நுணுகி பார்க்குமிடத்து. (ஏனெனில் அவர் ஒரு சிப்பாய் கலகத்தையோ அல்லது ஒரு ராம்பா கலகத்தையோ தன் நாவலுக்கான கருப்பொருளாக தேர்வு செய்யவில்லை என்பதும் அவதானிக்கத்தக்கதே. அவரது இந்தக் கலைச் சுதந்திரத்தில் யார்தான் தலையிட முடியும் என்பது வேறு கேள்வி).
ஏனெனில் அத்தகைய ஓர் தேர்வில் சாதீயத்தைத் தட்டிக் கொடுப்பது, சற்று சங்கடமான செயலாகவே இருந்து போகும். ஏனெனில், அவர் சார்ந்த அவர் சார்ந்த எழுத்துக்களின் நடைமுறை இரண்டு. ஒன்று தட்டிக் கொடுப்பது. மற்றது காறி உமிழ்வது. இரண்டுமே பல விளைவுகளை பல்வேறு தளங்களில் ஏற்படுத்தக் கூடியது. விளைவுகள் பன்முக தன்மை கொண்டது. உழைப்போர் அணியைச் சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டு, ஜெயமோகன் வகையறாக்களுக்கு இயைபான முரண்பாடுகளை முன்னோக்கி நகர்த்துவன. இது நுண் அரசியல். அவரே குறிப்பிடும் இது ஓர் ஆங்கிலேயரின் ரகசிய சிரிப்பு. ஜெயமோகனின் இம்முத்திரைகளுடனேயே வெள்ளை யானையும் பஞ்சமற்று திரிவதாய் உள்ளது. இத்தகைய ஓர் பின்னணியிலேயே, இந்திய வரலாற்றின், எந்தெந்தச் சம்பவத் தொடரைத் தேர்வு செய்வது – எத்தகைய முழுமைமிக்க படைப்பை – முன்னிறுத்துவது – எத்தகைய பாத்திரங்கள் - எத்தகைய தத்துவங்கள் - என்பனவற்றை உழைக்கும் மக்கள் சார்பாய் நிறுத்துவது - இவற்றைத் தேர்வது எவ்விதம் - இவை போன்ற கேள்விகளுடன், உழைக்கும் மக்களை சார்ந்த உண்மை மானுடம் பாடும் எழுத்தாளர்கள், பதில்கூற கோரப்படுவர். இது ஒரு சவால் என்பதில் ஐயமில்லை. ஆனால் வரலாறு – முக்கியமாக, எமது இன்றைய வரலாறு - இச்சவால்களை எம் இளம் எழுத்தாளர்கள் முகத்தில் விட்டெறியக்கூடும். அவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று அல்லது நாளை.
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.