கலாநிதி அகிலன் கதிர்காமரின் உரையும், அண்மித்த இலங்கை நெருக்கடிகளும்! - ஜோதிகுமார் -
இன்றைய, இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, தற்போதைய எதிர்ப்பலைகளுக்கு எதிராக அவசர கால சட்டத்தை அமுல்படுத்தும் மாபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு இட்டு சென்றுள்ளது. எதிர்ப்பலைகள், அவசரகால சட்டம், ராணுவமயம், சுடுவதற்கான உத்தரவு – என தொடர்ந்த அரசியல் சுவாத்தியம் - இப்போது ரணிலின் பதவியேற்புடன் தன் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இம்முதற்கட்டம் எவ்வழியில் தன் இரண்டாம் கட்டத்தை எய்தும் என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது. இந்நெருக்கடியானது, கடந்த காலத்தின் 1953 இன் பொருளாதார நெருக்கடியுடனும் அதையொட்டி எழுந்த 1953 இன் ஹர்த்தாலுடனும் ஒப்பிட்டு கதைக்கப்பட்டாலும், சாராம்சத்தில் இவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டே காணக்கிட்டுகின்றன – (இவை இரண்டிடை, பல ஒற்றுமைகள் காணப்படினும்). 1953 இல் டட்லி சேனாநாயக்காவின் அரசு, அரிசியின் விலையை மூன்று மடங்கால் அதிகரித்தது. – 25 சதத்தில் இருந்து 70 சதம் வரை. இன்றும் ஏறக்குறைய நிலைமை அப்படியே. இதற்கான காரணங்கள், இன்றை போலவே, அன்றும் சர்வதேச அளவில், வெவ்வேறு விதமாய், வெவ்வேறு விகிதாசாரங்களில் எழுந்திருந்தன. இருந்தும், இன்றைய நெருக்கடிக்கான காரணங்களாய் கொரோனாவை அல்லது உக்ரைன்-ரசியப் போரால் விளைந்த சர்வதேச எண்ணெய் நெருக்கடியை அல்லது ஒரு சுற்றுலா நெருக்கடியை காரணமாக தூக்கிப்பிடிப்பது அரச அல்லது அரச நிர்வாகிகளுக்கு சகஜமாகி விட்டது. உதாரணமாக, அண்மித்த ஓரு நேர்காணலில் கூட எமது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் கப்ரால் திட்டவட்டமாக பின்வருமாறு கூறியிருந்தார்:
“தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்று பிரதான காரணியாக அமைந்தது. கொரோனா தொற்றுக்காக பல மில்லியன்கள் நிதியை மத்திய வங்கி செலவிட்டுள்ளது”. (வீரகேசரி நேர்காணல் : 01.05.2022) (இவர் புரியாமல் பேசுகின்றாரா, அல்லது அனைத்தையும் தெரிந்து கொண்டு “விடயங்களை காப்பாற்ற” இன்றைய ஏனைய ‘ஆளுமைகள்’ போல நடிக்க வருகின்றாரா என்பது வேறு விடயம்). இருந்தும், இப்படியாக பட்டியலிடப்படும் இந்நெருக்கடிகள் அனைத்தும் ஏதோ ஒரு வழியில் ஏனைய நாடுகளையும் பாதிக்கவே செய்தன என்பதும், அவை அவற்றிலிருந்து ஏதோ ஒரு வழியில் மீளவே செய்தன என்பதும் குறிக்கத்தக்கது. (அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது இத்தாலியாக இருக்கட்டும்).