ஆய்வு: இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் நகரம்! - வ.ந.கிரிதரன் -
தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில் வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள் புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்கால இலங்கைத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான் இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.
இக்கட்டுரைக்காக ஆராய்ந்த கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி, நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி, நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி.... எனப்பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.