காலத்தால் அழியாத கானங்கள்: "நான் காற்று வாங்கப் போனேன்! ஒரு கவிதை வாங்கி வந்தேன்!" - ஊர்க்குருவி -
இளைஞனொருவன் தன் நெஞ்சுக்கினியவளை நினைத்துப் பாடுவதாக அமைந்துள்ள பாடலின் வரிகள் அனைத்தையுமே நெஞ்சில் நிலைத்து நிற்க வைக்கும் வகையில் எழுதியுள்ளார் கவிஞர் வாலி. முதலிரண்டு வரிகள் போதும் இப்பாடலை நிலைத்து நிற்க வைப்பதற்கு. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்." இவ்வரிகளைக் கேட்கையில் இயற்கையின் அழகில் மெய்ம்மறந்தபடி , காற்று வாங்கப் போகையில் ஏற்படும் அமைதி கலந்த இனிமை எம்மை வருடிச் செல்லும்.
முதன் முதலில் இப்பாடலைக் கேட்ட பால்யப் பருவத்தில் அடுத்து வரும் வரிகளை உணரும் பக்குவமில்லை. ஆனால் இவ்வரிகளைக் கேட்ட உடனேயே பிடித்து விட்டது. அத்துடன் வாத்தியாரின் வசீகரமும், டி.எம்.எஸ்ஸின் இளங்குரலின் இனிமையும் அத்தருணத்திலேயே நெஞ்சின் ஆழத்தில் சென்று குடியேறி விட்டன. இன்று வரையில் அவை நிலைத்து நிற்கின்றன.
பதின்ம வயதுகளில், உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குள்ளாகியிருந்த தருணங்களில் அடுத்து வரும் வரிகளில் பொதிந்து கிடந்த உணர்வுகளை விளங்கி, இரசிக்க முடிந்தது. மானுட வாழ்வின் வளர்ச்சிப்படிகளில் காதல் உணர்வுகள் முக்கியமானவை. மானுட வாழ்வின் வேறொரு பக்கத்தை அவை உணர்த்தி வைப்பவை. சங்கத்தமிழ் இலக்கியங்கள் இவ்விடயத்தில் முதலிடத்திலிருப்பவை. காதலர்களின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியப்படைப்புகள் அவை. அவனோ அவனது காதலுக்குரிவள் பற்றிய நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றான். அவனால் அவளை மறக்க முடியவில்லை.