- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை -
பெண்களுக்கெதிரான,பலதரப்பட்ட வன்முறைகள,பல காரணங்களால்; காலம் காலமாக,அகில உலகின் மூலை முடுக்கெல்லாம்; தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது(17-3-2021) பிரித்தானிய தொலைக்காட்சியில் பிரதமருடனான கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ;திரு.கியர் ஸ்ராமர், 'பாலின வன்முறையால் பாதிக்கப்படும்; பெண்களில் 1;.-5 விகிதமானவர்கள் மட்டுமே சட்டத்தை நாடி உதவி பெறும் நிலை இன்றிருக்கிறது' என்று கூறிக்கொண்டிருக்கிறார். மிகவும் பணக்காரநாடுகளில் ஒன்றான பிரித்தானியாவிலேயே பாலினக் கொடுமையை எதிர்நோக்கும் பெண்களின் நிலை இதுவென்றால், சாதி, சமய, பொருளாதார ஒடுக்குமுறையால் அவதிப்படும் ஏழைநாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் பாலினக்கொடுமைகளைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது.
பெண்களின் துயர்நிலை அவள் பிறந்த வீடு, புகுந்தவீடு, படித்த இடம், பதவி வகிக்குமிடம், அரசியல் காரணங்கள், அகதிநிலை என்பவற்றுடன் மட்டுமல்லாமல், ஒரு பெண் தனது, வாழ்க்கையின் உணவுக்கும் உடைக்கும், அத்துடன் தனது ஏழ்மையான குடும்பத்தின் வாழ்க்கைக்கும் வழிதேடி பணிப் பெண்ணாக முன்பின் தெரியாத அன்னிய இடங்களுக்கு உழைக்கச் செல்லும்போதும் பன்முகத் தன்மையான வன்முறைகளுக்க முகம் கொடுக்கிறாள்.
பணிப் பெண்களுக்கான கொடுமைகள் அவள் வீட்டுவேலை செய்யும் இடத்தில், அவள் வேலை செய்யும் வீட்டாரால் மட்டும் கொடுபடுவதில்லை. அவர்களின் வீட்டுக்கு வருபவர்களாலும் நடக்கிறது. அந்தப் பாலினக் கொடுமையைப்;; பல பெண்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை எனது சொக்கலேட் மாமா என்ற கதையொன்றில் பதிவிட்டிருக்கிறேன். (மனிதன் - ;பத்திரிகை-1992)
இன்றைய கால கட்டத்தில், ஆண்கள்,பெண்கள் என்று கிட்டத்தட்ட 232 கோடி மக்கள் பல்விடங்களுக்கும் சென்று அடிமட்ட ஊதிய வேலைகளான, சாரதி, தோட்டக்காரன், பணிப்பெண்கள் போன்ற பல்விதமான வேலைகளையும் அகில உலக ரீதியாகச் செய்கிறார்கள்.
குறிப்பாக, வெளிநாட்டு பணிப் பெண்களை மட்டுமல்லாமல் மற்ற வேலையாளர்களையும் மனித நேயமின்றி நடத்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில், மூன்றில் ஒருத்தர் பணிப் பெண்களாகத் துன்பப் படுகிறார்கள் (செல்வி.பிலேஸா வீரரத்தினா 2014. ஐ.பி.எஸ் அறிக்கை).