எழுத்தாளர் நா. சோமகாந்தனின் (ஈழத்துச் சோமு) அறியப்படாத நாவல் 'களனி நதி தீரத்திலே' - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் சோமகாந்தன் வெளியிட்ட நூல்களிலோ அல்லது அவர் பற்றிய கட்டுரைகளிலோ அவரது 'களனி நதி தீரத்திலே' என்னும் இந்த நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததாக எனக்கு நினைவிலில்லை. ஒரு வேளை நான் தவற விட்டிருக்கலாம். நான் அறிந்த வரையில் இந்நாவல் நிச்சயம் இதுவரை நூலாக வெளியாகவில்லையென்றே கருதுகின்றேன். ஆனால் அவரது நாவல்களில் இதுவொரு முக்கியமான நாவலாகவே எனக்குப் படுகிறது. 20.8.1961 தொடக்கம் 29.101.961 வரை மொத்தம் 11 அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன. 1- 4 வரையிலான அத்தியாயங்களுக்குத் தலைப்புகள் இடப்பட்டிருக்கவில்லை.
கதைச்சுருக்கம்: கதை சொல்லியும் அவன் நண்பன் நடராஜனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். இருவரும் எஸ்.எஸ்.சி சித்தியடைந்து கொழும்பில் வேலை கிடைத்துச் செல்கின்றார்கள். ஒன்றாகத் தங்கியிருக்கின்றார்கள். இருவரும் களனி கங்கை நதிக்கரையில் றோசலின் என்னும் அழகியொருத்தியைச் சந்திக்கின்றார்கள். அதன் பின் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் வழக்கமாகச் செல்லும் ட்ரொலி வருவதற்கு நேரமெடுக்கவே 'ராக்சி' பிடித்துச் செல்லத்தீர்மானிக்கிறார்கள். றோசலின் அன்று புதிய வேலை கிடைத்துச் செல்வதற்காக 'ட்ரொலி'யை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். அவளுக்கும் நேரமாகிவிடவே இவர்களிடம் தனக்கும் 'ராக்சி'யில் இடம் தர முடியுமா என்று கேட்கின்றாள். இவர்களும் சம்மதித்து அவளுக்கு உதவுகின்றார்கள். அன்று முதல் மூவரும் நண்பர்களாகின்றார்கள்.
அவர்களுக்கிடையில் நட்பு வளர்கிறது. அவள் இருவருடனும் சகஜமாகப் பழகி வருகின்றாள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவள் பேச்சு, செயல்களை வைத்து அவள் மீது காதல் கொள்கின்றார்கள். ஒரு சமயம் கதை சொல்லி உடல் நலம் கெட்டு ஊருக்குச் சென்று திரும்புகையில் நண்பன் நடராஜன் றோசி மேல் காதல் கொண்டிருப்பதை அறிந்து அவன் மேல் ஆத்திரமடைகின்றான். றோசியும் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதி அவள் மீதும் கோபமடைகின்றான்.
றோசி காரணமாக நண்பர்களுக்கிடையில் மோதல் முற்றி கதை சொல்லி நண்பன் நடராஜனைத் தாக்கவே , நடராஜனும் ஆத்திரமடைந்து அவனைவிட்டு விலகி, றோசியின் வீட்டுக்கே சென்று விடுகின்றான். உண்மையில் அதுவரை றோசி அவர்களுடன் சாதாரணமாகவே பழகி வந்திருக்கின்றாள். நடராஜன் அவளிருப்பிடத்துக் சென்ற பின்பே அவனது தன்மீதான தீவிர காதலை உணர்ந்து அவனைக் காதலிக்கத்தொடங்குகின்றாள்.