மலையகத்தின் சதுரங்க ஆட்டத்தில் ஒரு புதிய திருப்பு முனை (பகுதி இரண்டு) ! - ஜோதிகுமார் -
பகுதி 2
ஹைலன்ஸ் கல்லூரி தனது 131வது வருடாந்தத்தை, கடந்த மாத இறுதியில் கொண்டாடிய போது, அதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த கலாநிதி சரவணகுமார், ‘ஹைலன்ஸ் மலையகத்தின் ஒரு முதுசம்’ என்ற அடைமொழியை அதற்கு சூட்டி ப10ரித்து நின்றார்.
உண்மையாக இருக்கலாம். கடந்த சில வருடங்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும், பீடங்களுக்கும் அனுப்பி வைத்த பெருமையை அது போற்றி வருகின்றது. இருந்தும், சென்ற கட்டுரை தொடரில் மிக தெளிவுற சுட்டிக்காட்டப்பட்டதை போன்று, 29 குற்றச்சாட்டுக்களை தன்னகத்தே சுமந்த, மலையக பணிப்பாளர் ஒருவராலேயே, அக்கல்லூரி இன்று அடியோடு சிதைக்கப்பட்டதாய் உள்ளது. (தற்சமயம், கணபதி கனகராஜ் அவர்கள் எடுத்த பெரு முயற்சியின் பலனாய், மேல்நீதிமன்றம் இப்போது தந்துள்ள இடைக்கால உத்தரவின் மூலம், அன்னாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் பிறிதொரு விடயமாகும் - Writ/7/2023)
இருந்தும், கடந்த மாதத்தில் மாத்திரம் 500-600 ஆசிரியர்களை ஒரே தருணத்தில், இடமாற்றம் செய்து முடித்து, இன்னும் நான்கே நான்கு மாதங்களில் தமது இறுதி பரீட்சைக்கு முகங்கொடுக்க இருக்கும் நூற்றுக்கணக்கான மாணவ மணிகளை, விழிப்பிதுங்க பரிதவிக்கும் நிலைக்கு தள்ளியுள்ள பெருமை இவ் அதிகாரியையே சாரும் - (இன்னும் இப்பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கின்றது. ஹைலன்ஸ் அதிபர் நிலைமையை சீர்ப்படுத்த தன்னால் இயன்றதை முயன்று பார்த்தாலும் கூட).