இந்த அஞ்சலிக்குறிப்பினை குற்றவுணர்வுடனேயே பதிவுசெய்கின்றேன். கடந்த ஆண்டு ( 2020 ) ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிதான் எமது மதிப்பிற்குரிய திருமதி மகேஸ்வரி சொக்கநாதன் அம்மையாரின் நூறாவது பிறந்த தினத்தை அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், மற்றும் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் மானசீகமாக வாழ்த்திக்கொண்டாடியதை அறிந்திருந்தேன். எலிஸபெத் மகாராணியாரும் அம்மையாரை வாழ்த்தி சான்றிதழ் வழங்கியிருந்தார். அவுஸ்திரேலியப்பிரதமர், ஆளுநர் தம்பதியர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினரும் வாழ்த்தியிருந்தார். சமூகத்திற்கு பயன்மிக்க பணிகளை மேற்கொண்டவர்கள் பற்றி, முடிந்தவரையில் அவ்வப்போது அவர்கள் வாழும் காலப்பகுதியிலேயே எனது அவதானக்குறிப்புகளை எழுதிவந்திருக்கின்றேன். எனினும், எனது கணினியில் நேர்ந்த வைரஸ் தாக்கத்தினால், அம்மையாரின் படங்கள், தேடிச்சேமித்துவைத்திருந்த சில குறிப்புகள் மறைந்துவிட்டன. பின்னர் எழுதலாம் என்று காலம் கடந்தது. சமகாலத்தின் கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இடைவெளி பேணும் கலாசாரத்திற்கு கட்டுப்பட்டு, வீடடங்கியிருந்து இணையவெளி அரங்குகளில் நேரத்தையும் காலத்தையும் செலவிட்டதனால், உடனடியாக அம்மையார் பற்றி எழுதமுடியாமல் போனதையிட்டு, இதனைப்படிக்கும் அன்னாரின் குடும்ப உறவுகளிடமும், வாசகர்களிடத்திலும் மன்னிப்பு கேட்டவாறே இந்த அஞ்சலிப்பதிவுக்குள் வருகின்றேன்.
மக்களுக்காக, குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றுபவர்கள், வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் மறைந்த பின்னர் பாராட்டுவதும், விருது வழங்கி கௌரவிப்பதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுயவிருப்ப இயல்புதான். எனினும், மறைந்தவர்களின் ஆன்மா எங்கிருந்தாலும், பார்த்துக்கொண்டிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையுடனயே மறைந்தவர்கள் பற்றிப்பேசி கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொருவரது பிறந்த தினம் வரும்போதும், அவர்களது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள், “ நூறாண்டு காலம் வாழ்க… நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க “ என்று மானசீகமாக வாழ்த்துவார்கள். ஆனால், அந்த வாழ்த்துக்கேற்ப நூறாண்டுகள் வாழ்ந்து சாதனை புரிபவர்கள் சொற்பம்தான்.