எழுத்தாளர்களின் கவனத்துக்கு.... - வ.ந.கிரிதரன் -
அவ்வப்போது இலக்கிய உலகில் ஆதங்கங்கள் சில எழுவதுண்டு. யாராவது பிரபலமான தமிழக எழுத்தாளர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு ஏன் அவரது பட்டியலில் நம்மவர் பெயர் இல்லை என்று கேள்வி கேட்டு ஆதங்கப்படுவதைத்தான் குறிப்பிடுகின்றேன்.
தமிழக வெகுசனப் பத்திரிகைகளில் இடம் பெறுவதால் அல்லது பிரபல இலக்கிய ஆளுமைகளின் பட்டியல்களில் இடம் பெறுவதால் வேண்டுமானால் ஓரளவு அறிமுகம் மக்கள் மத்தியில் கிடைக்கலாம். ஆனால் வரலாற்றில் உங்களை நிலை நிறுத்தப்போவது இவ்வகையான அறிமுகங்கள் அல்ல. உங்களை வரலாற்றில் நிலைநிறுத்தப்போவது உங்கள் எழுத்துகளே. கணியன் பூங்குன்றனாரின் வரிகள்தாம் இன்று அவரை எமக்கு அறியத்தருகின்றன. சிலப்பதிகாரம்தான் இளங்கோவடிகளை எமக்கு அறியத்தருகின்றது. அவர்கள்தம் எழுத்துகளே நிலைத்து நிற்கின்றன. அவர்களைப்பற்றிய ஏனையோர் புகழுரைகள் அல்ல. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.