'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (14 - 17) - ஜோதிகுமார் -
14
சமூகம் தொடர்பிலான தமது கராரான ஆய்வு முறையை அவர் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படைகளில் இருந்தே தொடங்குகின்றார். ஆனால் அவர்களோ (மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்) தமது கராரான ஆய்வு முறையை – தமக்கு மிக நெருக்கமான அயர்லாந்து கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கின்றனர். அயர்லாந்தின் கேள்வியை, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் அணுகிய விதம் கவனத்துடன் நுணித்து நோக்கத்தக்கது. “ஓர் இரண்டு லட்சம் இளைஞர்களை தாருங்கள்–இங்கிலாந்தின் ஆதிக்க சக்திகளை தூக்கி எறிய” என ஏங்கெல்ஸ் ஆற்றிய கூற்று பிரபல்யமானது –அது அயர்லாந்தின் சூள் கொண்ட தீயின் வெம்மையை, சமரசமற்ற புரட்சியின் நாக்குகளை விபரிப்பது, என்றாகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில், அயர்லாந்தின் வரலாற்றை வடிக்க முற்பட்ட ஏங்கெல்ஸ், அயர்லாந்து பொறுத்து தன் பார்வையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து – அதாவது, கிட்டத்தட்ட டீஊ 258 க்கு முன்பிருந்து – அகல செலுத்த முற்பட்டிருப்பது, ஆழ்ந்து அவதானிக்கத்தக்கது. இம் மிக நீண்ட நெடுநாளைய வரலாற்று அவதானிப்பு, அல்லது வரலாற்று கற்கை, அவருக்கு தனது பிற்பட்ட நூலான, “குடும்பம், தனிசொத்து, அரசு” என்ற நூலினை எழுதவும் வடிவமைக்கவும் கைக்கொடுத்தது என கருதுவோரும் உண்டு.
பண்டைய சமூகங்கள், பண்டைய சட்டங்கள், 16, 17ம் நூற்றாண்டின் சட்ட- வரலாற்று ஆவணங்கள், பயணிகளின் குறிப்பேடுகள், பவ்வேறு வகைப்பட்ட நூல்கள், முக்கியமாக பண்டை காலம் தொட்டு 1860 வரையிலான பதிவாக்கப்பட்ட வரலாற்று பதிவுகள் - இது பொருத்து அவர் வந்து சேர்ந்த முடிவுகள் - புள்ளி விபரங்கள் இத்தியாதி என மிகப் பரந்;த ஆய்வு அணுகுமுறையை அவர் அயர்லாந்தின் வரலாற்று தொடர்பில் கொண்டிருந்தார். மறுபுறத்தில், 1840லேயே, ஆரம்பமாகும், மார்க்ஸின் அயர்லாந்து தொடர்பிலான கரிசனை, அவருக்கு தன் பின்னைய பிரதானமான நூலான, “மூலதனத்தை” எழுத அடிப்படையாயிற்று எனக் கருதுவோர் உண்டு. வேறு வார்த்தையில் கூறுவதானால், அயர்லாந்து பொருத்து ஆழ்ந்த ஒரு 40 வருட அவதானம் இருவரிடையேயும் மிக ஆரம்பத்திலேயே, குவியத் தொடங்கியது எனலாம்.