நோர்வே பயணத்தொடர் (6) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி -
- Damstredetஇல் உள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரத்திலான வீடுகள் -
பத்மநாதன் மாணவர்களுக்குத் தனிப்பட்ட ரியூசன் கொடுக்கும் அந்த அறையில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருந்தது. மகாஜனாக் கல்லூரியில் படிக்கும்போது அறிந்திருந்த டொக்டர் லிமல், கவிஞர் இளவாலை விஜேந்திரன் ஆகியோருடன், 9c Osloஒ குறும்திரைப்பட இயக்குநர் மற்றும் அந்தப் படங்களில் நடித்திருந்த சிலரையும், முகநூல் மூலம் அறிந்த சஞ்சயன் செல்வமாணிக்கத்தையும் அங்கு சந்தித்துப் பேசமுடிந்தது. அவர்கள் எவருடனும் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாதபோதிலும் பத்மநாதனுக்காக அவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.
‘நடு’ கோமகன் மூலம் என்னைப் பற்றி அறிந்திருந்ததாகச் சஞ்சயன் குறிப்பிட்டார், சஞ்சயனின் முகநூற் பதிவுகள் சுவாரஸ்யமானவையாக இருப்பதால் நானே அவரை என் முகநூல் நண்பராகச் சேர்த்திருந்தேன். விஜித்தா என்பவரின் புற்றுநோய்க்கூடான வாழ்வு தொடர்பான அனுபவங்களை அவரது எழுத்துக்கூடாகச் சொல்லும் ‘தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு’ என்ற நூலையும், தன் அம்மாவின் மறதி நோய் பற்றிக் கூறும் ‘நினைவு மறந்த கதை’ என்ற நூலையும் அவர் தந்திருந்தார். விஜித்தாவின் முன்னுரை மனதைக் கலங்கவைப்பதாக இருந்தது. அவவின் அனுபவங்களை இலகுவான தமிழில் சஞ்சயன் அழகாக எழுதியுள்ளார். முன்னுரிமை எதற்குக் கொடுப்பது என்ற புரிதல் இல்லாத, நோய் பற்றிய அடிப்படை விளக்கமற்றவர்களுக்கு இந்த நூல் எவ்வளவு அவசியமானது என்பதை என் வாசிப்பு எனக்குப் புரியவைத்தது. (விஜித்தா ரதியின் உறவினராம் என அறிந்தபோது உலகம் சிறியதுதான் எனத் தோன்றியது). மறதிநோய் தொடர்பான யதார்த்தங்களை அம்மாவுடனான பாசத்துடன் கலந்து, ‘நினைவு மறந்த கதை’ என்ற நூலைச் சஞ்சயன் படைத்திருக்கிறார். இவை அவரின் முகநூலிலும் ஏற்கனவே பதியப்பட்டிருந்தன.