நண்பர் முருகபூபதி! - நோயல் நடேசன் -
மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரம் பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தியு பின்பாக கையை பிடித்து வேதநூலை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தியுவிற்கு எவ்வளவு எழுத தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களை வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதங்கமே.
88 களில் முருகபூபதி கேட்தற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. தற்போதைய இந்தியாவை இணைப்பது மதமோ கலாச்சாரமோ அல்ல தேசிய முதலாளித்துமே என்ற கருத்தில் எழுதியிருந்தேன். அதன்பின் உதயத்திற்கக்காக நான் எழுதிய முதல்க் கட்டுரை “நடுகாட்டில் ஒரு பிரேத பரிசோதனை”. அந்தக் கட்டுரையை நண்பர் மாவை நித்தியானந்தனிடம் காட்டியபோது முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுதும்படி சொன்னார். அப்படியே திருத்தப்பட்ட கட்டுரை இரண்டாவது உதயத்தில்( 1987 வைகாசியில்) வந்தது . அதன்பின்பு எனது பல கட்டுரைகள் , சிறுகதைகள், நாவல்கள் அவரே சீர் பாத்திருப்பார். கடைசியாக வந்த தாத்தாவின் வீடு நாவலைத் தவிர, நான் எழுத்தாளராக இப்பொழுது அடைந்த இடத்திற்கு நண்பர் முருகபூபதியே காரணம் .