மாயாறு : நெடுங்கவிதைகள் சுப்ரபாரதிமணியன்! - கவிஞர் மதுராந்தகன் -
- 11/10/24 திருப்பூர் நற்பவி வாசகர் வட்டம் நடத்திய நூல்கள் அறிமுகக் கூட்டத்தில் கவிஞர் மதுராந்தகன் படித்த கட்டுரை -
நெடுங்கவிதைகள் கூறிய இலக்கணத்தை உடைத்து புதிய இலக்கணத்தை அமைத்துவிட்டார் சுப்ரபாரதிமணியன். நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா . ஒரே பொருள் குறித்த குறுஞ்கவிதைகளாகக் கூட இருக்கலாமே என்கிறார் ..
இதில் ஆதிவாசிக் கவிதைகள் என்று பெயரிட்டவர் ஆதிவாசி ஆகவே மாறிவிட்டார். ஆதிவாசிகள் குரலில் அவர்களின் பிரச்சினையைப் பற்றிப்பேசுகிறார். 92 கவிதைகளில் 92 பிரச்சனைகளின் உருவங்களைச் சொல்கிறார். இயற்கையோடு இணைந்து ஆனந்தமாக வாழும் ஆதிவாசிகளை அழிப்பதற்காகவே சிலர் சந்தன மரங்களை வெட்டுவதும் மிருகங்களை வேட்டையாடுவது ஆதிவாசிகளை அச்சம் அடைய வைக்கின்றன .சிங்கம் புலி பூனை எனும் விலங்குகளில் கார்ப்பரேட்டுகள் எந்த இனம் என்பதில் இவருடைய உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துகிறார் .யானை மிதித்து செத்தாலும் எங்களுக்கு சந்தோஷம் என்பது ஆதிவாசிகளின் ஒட்டுமொத்த உணர்வுகளும் வெள்ளையர்களும் , கொள்ளையர்களும் வேட்டையாடிவிட்டு மிருகங்களை மட்டுமல்ல பொம்மக்கா மாதிரி பெண்களைச் சீரழித்தது எத்தனை எத்தனையோ பேரை .கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்கமும் போலீஸ் முதலான பாதுகாப்பு உள்ளதால் அவர்கள் மரங்களை வெட்டி வளங்களை அழித்து கட்டிடம் கட்டவும் புதிய தொழில் தொடங்கவும் ஆதரவு கிடைத்தது .ஆகவே ஆதிவாசிகள் அவர்களை எதிர்க்கும் சக்தி அற்றவர்களாக வாழ்கிறார்கள் .