தொடர் நாவல்: கலிங்கு! (2006 -9) - தேவகாந்தன் -
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் 9
அவனது பாட்டன் பெருவளவுக்காரராயும், பெரிய உபகாரியாயும் இருந்தார். அதனால் கிராமத்திலும், அயல் கிராமங்களிலும்கூட, பெருமதிப்புப் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் அவர்களது குலத்தொழில் துணி துவைப்பதாகவிருந்தது. நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு முந்திய காலத்திலிருந்து வெள்ளைக்காரச் சேவகத்தில் பரம்பரைத் தொழில் கைவிடப்பட்டு, பெருநிலவுடைமைக் குடும்பமாக அது ஆகியிருந்தது. பெருநிலங்களில் ரப்பர் பணமாய் வழிந்துகொட்டியது. சீமைச் சாராய குடியும் கூத்தியாள்களுமாய் பெருவளவுக் குடும்பத்துக்கு கிராமத்திலிருந்த அவப்பெயரை அவனது பாட்டன்தான் ஓரளவேனும் மாற்றிவைத்தார். அப்பொழுதும் அந்த மதிப்பை அவருக்கு மட்டுமாகவே கிராமம் ஒதுக்கிக்கொடுத்தது.
கும்பிடுகளையும் முகமன்களையும் முன்னால் கண்ட மற்றைய பெருவளவுக்காரர், முதுகில் அவை சிரிப்பாய் ஒலிக்கக் கேட்டு குறண்டிப் போகிறவர்களாகவே இருந்துவந்தார்கள். அதைத் தடுக்கவோ தவிர்க்கவோ அவர்களால் முடியாதிருந்தது. அவர்கள் முன்புறத்தில் கிடைத்த முகமன்களில்மட்டும் அமைதி காணவேண்டியதாயிற்று.
பாட்டன் காலத்திலேயே பெருவளவில் மூன்று குடும்பங்கள் முளைத்திருந்தன. பாட்டனின் பின் அவரது நான்கு பிள்ளைகளில் மூத்தவராகவிருந்த அவனது தந்தை ஜெயசேகர மல்வான குடும்பத்தின் தலைமையேற்றார். அவர் பெரிய வேட்டைக்காரரும். அவரது தந்தையின் காலத்திலிருந்து சுவரில் மாட்டப்பட்டிருந்த துப்பாக்கியை அவர் மட்டுமே கையாளக்கூடியவராய் இருந்தார். அவரால் சுடப்பட்ட புலி, மான் ஆகியவற்றின் தோல்களும் தலைகளும் சுவர்களில் மேலும் மேலும் மாட்டப்படலாயின. யானைத் தந்தந்தங்கள் அலங்காரப் பொருட்களாய் வீட்டை நிறைத்தன. அதனால் ஜெயசேகர மல்வானவுக்கு கிராம மக்களிடத்திலான மதிப்பை தக்கவைக்க முடிந்ததோடு, பெருவளவு வீட்டின் அதிகாரத்தை முழுவதுமாய் பெற்றுக்கொள்ளவும் ஏலுமானது.