"நண்பர் வேந்தனார் இளஞ்சேய் புலனத்தில் யாழ் இந்து நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட இன்னுமொரு கருத்துப் பகிர்வு; பகிர்ந்துகொள்கின்றேன். இளஞ்சேய் என் பால்ய காலத்திலிருந்து நண்பராகவிருக்குமொருவர். அக்காலகட்டத்தில் நாமிருவரும் எம்மிடமுள்ள புனைகதைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி வாசித்து மகிழ்வோம். அவர் சிறந்த பேச்சாளர்; கவிஞர்; எழுத்தாற்றல் மிக்கவர். பயனுள்ள அவரது கருத்துகளுக்காக மீண்டுமொருமுறை நன்றி." - வ.ந.கிரிதரன் -
இளஞ்சேய்:
"அன்பிற்குரிய பள்ளிக்கால நண்பர்களே, எம் பள்ளித்தோழன் கிரிதரனின் "அமெரிக்கா" என்ற குறுநாவல், மற்றும் "குடிவரவாளன்" என்ற நாவல், இவ்விரண்டு நூல்களையும் கடந்த சனி- ஞாயிறு முழுமையாக வாசித்தேன். நான் நூல்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவன். அந்த வகையில் கிரிதரன் என்னை கனடாவில் சந்தித்தபோது, அவரின் பல ஆக்கங்களில்- மேற்கண்ட இரண்டை எனக்குத் தந்திருந்தார். இந்த இரு நாவல்களையும் , இவ்வாறு நாட்டைவிட்டு, செய்த நல்ல வேலைகளை விட்டு , வெளிநாடுகளுக்கு , பெரும் செலவு செய்து , பலவித இன்னல்களுக்குட்பட்டு வந்து, வாழ்க்கையை மிகவும் அடித்தளத்தில் இருந்து தொடங்கி, இன்று தம் கடுமையான முயற்சியினால் உயர்வடைந்துள்ள நம்மவர்கள், எல்லோரும் வாசிக்கவேண்டும் . இந் நாவல்கள் ஆங்கிலத்திலும் வந்துள்ளன. இதனை எமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் இனக்கவரம் ஏற்படுத்திய அழிவுகள், படித்து முடித்து நல்ல உத்தியோகங்களில் இருந்தவர்களும், எல்லாவற்றையும் துறந்து , உயிரைக் காப்பாற்ற , புலம் பெயர் நாடுகளிற்கு சென்று, புலத்தில் இனக்கலவரத்தால் அலையுண்டு திரிந்த தம் உறவுகளுக்கு பணம் அனுப்ப அவர்கள் பட்ட பாடு, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, இவை எல்லாம் ஆவணப்படுத்தப் படல் வேண்டும். ஒவ்வொரு ஈழத் தமிழனின் இன்றைய புலம்பெயர் வாழ்வும், அவன் காலத்திய பிரச்சனைகளை, உறவுகளை விட்டு, ஊரை, உத்தியோகத்தைத் துறந்து , பனியிலும்- குளிரிலும்- கடும் வெய்யிலிலும் , அவன் உழைத்த உழைப்பை, தனிமையில் அவன் தவித்த தவிப்பை எல்லாம், நம் வருங்கால சமுதாயம் உணர்தல் வேண்டும்.
இதை அவர்கள் உணரும் போதுதான், தம் தாய் தந்தையரின், கடும் உழைப்பை , அவர்கள் பட்ட இடர்களை , எம் இனத்தின் துயர்களை அவர்கள் உள்வாங்கி, அந்த உள்வாங்கல் தந்த உணர்வுகளை உரமாகக் கொண்டு , தம் உள்ளத்தை உறுதியாக்கி, தம் வாழ்க்கையில் போராடக் கூடிய உளத் திண்மையைப் பெறுவார்கள். நண்பர்களே இந்த இரு நாவல்களையாவது நீங்கள் வாசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். கிரியின் எழுத்துக்களில் உள்ள உயிரோட்டம், மனிதாபிமான உணர்வு, சமூக நோக்குப் பார்வை , மிகவும் பாராட்டுதலுக்குரியது.
அன்று...... ஒன்றாக மாறி -மாறி, பல நாவல்களை , ஒருவருக்கொருவர் பரிமாறி வாசித்தோம்.
இன்று..... என் சிறுவயது நண்பனின் உயிரோட்டமிக்க நாவல்களை வாசித்து , வியந்து , மகிழ்ந்து, அவனை பாராட்டுகின்றேன்.
நன்றி.
அன்புடன்
இளஞ்சேய்"
19.08.2019