அண்மையில் பிரபல கலை, இலக்கியத்திறனாய்வாளர் தனது முகநூற் பதிவொன்றாகக் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் பற்றியொரு குறிப்பினையிட்டிருந்தார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
"காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனை.சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள்.வலது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார்.துரதிருஷ்டவசமாக மணல் கல்லால் கட்டப்பட்ட இக்கலைக்கோயில் முதலாம் நரசிம்மவர்மனால் ( இராஜசிம்மன்) கி.பி.700- 728 கட்டப்பட்டது.அதிட்டானம் பகுதி மட்டும் கருங்கல்லில். இது சமணக் கோயிலாக இருந்து பின் சிவன் கோயிலாக மாற்றப்பட்டதாக மயிலை சீனி குறிப்பிடுகிறார்.மழையில் கரைந்து வரும் இக்கோயிலை எப்படி காப்பாற்றுவது?"
இதில் கோயிலைக்கட்டிய மன்னனான இராஜசிம்மனைத் தவறுதலாக முதலாம் நரசிம்மவர்மன் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவோர் தற்செயலான தவறு. அவருக்கு நிச்சயம் கட்டியவர் யாரென்று தெரிந்திருக்கும். எழுதும்போது தவறுதலாக இது போன்ற பிழைகளை நாம் அனைவரும் செயவதுண்டு.
அவரது பதிவை வாசித்தபோது இதனைக் கண்ட நான் அவரது பதிவிலேயே எதிர்வினையொன்றினை
"Giritharan Navaratnam //இக்கலைக்கோயில் முதலாம் நரசிம்மவர்மனால் ( இராஜசிம்மன்) கி.பி.700- 728 கட்டப்பட்டது// இரண்டாம் நரசிம்மவர்மன் என்று அழைக்கப்பட்ட ராஜசிம்மனால் கட்டப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மனே மாமல்லர்." என்று இட்டிருந்தேன்.
தற்செயலாக மீண்டும் அப்பதிவு என் கண்களில் பட்டது. வியப்பாகவிருந்தது. அப்பதிவு இன்னும் அத்தவறுடனேயே காணப்பட்டது. அப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய ஏனைய எவருமே இத்தவறினைச் சுட்டிக்காட்டவுமில்லை.
மீண்டும் அவருக்கு உட்பெட்டியில் இதனைச் சுட்டிக்காட்டித் தகவல் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதிலாக இந்திரன் அவர்கள் "தொல்லியல்துறையின் அறிவிப்பைப் பாருங்கள் நண்பரே" என்று பதிலிட்டிருந்ததுடன் , இந்தியத் தொல்லியல் துறையினரின் அறிவிப்புப் பலகையொன்றின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.
நிச்சயமாக நான் இவ்விதமான பதிலொன்றினைக் கலை,இலக்கியத் திறனாய்வாளர் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவர் கூறிய இந்தியத் தொல்லியல்துறையினரின் அறிவிப்புப் பலகையில் காஞ்சி கைலாசகோயிலைக் கட்டியவர் முதலாம் நரசிம்மவர்மன் என்றுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினரின் அறிவிப்புப் பலகையில் அவ்விதம் தமிழில் எழுதப்பட்டிருந்தால் பொய் உண்மையாகி விடுமா? கல்கியின் சிவகாமியின் சபதம் வாசித்த சாதாரண வாசகர் ஒருவருக்கே தெரியும் மாமல்லரும் முதலாம் நரசிம்மவர்மரும் ஒருவரே என்பது. காஞ்சி கைலாசதர் ஆலயத்தைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் முதலாம் நரசிம்மவர்மன் அல்லர் என்பது சாண்டில்யனின் ராஜதிலகம், ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை போன்ற சரித்திர நாவல்களைப்படித்த சாதாரண வாசகர் ஒருவருக்குத் தெரியும். இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறையினரிட்ட தவறினை இதுவரை யாருமே கண்டுகொள்ளாதது வியப்பினைத் தருகின்றது. தவறினைச் சுட்டிக்காட்டியும் அதனை எழுதிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன் அதனை மறுத்தது இன்னும் வியப்பினைத்தருகின்றது. இந்திரன் அவர்கள் இந்தியத்தொல்லியல் துறையின் அறிவிப்புப்பலகையின் ஆங்கில விளக்கத்தைப் படித்திருப்பாரானால் அதில் தொல்லியல்துறை சரியாக இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்மன் என்று எழுதியிருப்பதை அறிந்திருப்பார். தொல்லியல்துறையின் தவறினையும் அறிந்திருப்பார். தமிழுக்கு இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் நிலை ஒன்றுதான்.
இன்னுமொரு விடயம் வியப்பினைத்தந்தது என்னவென்றால் இந்திரன் அவர்களின் பதிவுக்குப் பலர் விருப்பு தெரிவித்துள்ளார்கள். எதிர்வினையுமாற்றியுள்ளார்கள். ஓருவராவது தவறினைச் சுட்டிக்காட்டவுமில்லை. நான் தவறினைச் சுட்டிக்காட்டியும் அதனைப்பொருட்படுத்தவுமில்லை.
இப்பதிவு கண்டு இந்திரன் அவர்கள் பதிலிட்டிருந்தார். அது:
Indran Rajendran : மாற்றி விட்டேன் நண்பரே.....ஒருவர், தான் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கக்கூடியவர்களைத் தனக்குத் துணையாக வைத்திருந்தால், அவரை யாரால் கெடுக்கமுடியும்?
Giritharan Navaratnam இந்தியத்தொல்லியல் துறைக்கும் அறிவித்துத் தமிழிலுள்ள தவறினைத் திருத்தி விடுங்கள். உங்கள் பதிவில் தவறினைச் சுட்டிக்காட்டியிருந்தேன். பின்னர் உங்களுக்கு உட்பெட்டியிலும் தகவல் தந்திருந்தேன். அதன் பின்னரே இப்பதிவினையிட்டிருந்தேன். இப்பதிவு இடித்துரைக்க அல்ல. தவறினைச் சுட்டிக்காட்டவே. மேலும் நீங்கள் விட்ட இத்தவறும் உண்மையில் ஒரு விதத்தில் நன்மையையே ஏற்படுத்தியுள்ளது. இந்தியத்தொல்லியல் துறையினரின் தவறினை அறிந்துகொள்ள வழி வகுத்ததல்லவா?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.