அண்மையில் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் 'மனஓசை' பதிப்பக வெளியீடுகளாக வெளியான மூன்று நூல்கள் கிடைத்தன. இதற்காக அவருக்கு என் நன்றி. இவற்றில் இரு நூல்கள் அவர் எழுதியவை. அடுத்தது அவரது கணவரும் எழுத்தாளரும், ஓவியருமான மூனா (ஆழ்வாப்பிள்ளை தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்) எழுதியது. இவற்றில் சந்திரவதனாவின் 'நாளைய பெண்கள் சுயமாக வாழ' அவரது பதினைந்து கட்டுரைகளையும், 'அலையும் மனமும் வதியும் புலமும்' பத்தொன்பது சிறுகதைகளையும் , மூனாவின் 'நெஞ்சில் நின்றவை' இருபத்தியிரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கியவை. அழகாக வடிவமைக்கப்பட்ட வன் அட்டைகள் நூலுக்கு மேலும் சிறப்பைத்தருகின்றன. இவற்றுக்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் இவரது கணவரான ஓவியர் மூனா. மேலும் அட்டைகளை வடிவமைத்திருப்பதும் அவரே. புகலிடத்தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன். அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் கட்டுரைகள், சிறுகதைகளை உள்ளடக்கிய இந்நூல்கள் அண்மையில் வெளியான முக்கிய வரவுகள்.
'நாளைய பெண்கள் சுயமாக வாழ' நூலிலுள்ள கட்டுரைகள் புகலிடப் பெண்கள், பெண்கள் சுயமுடன் , சமூகத்தில் அவர்களை அடக்கி வைத்திருக்கும் எழுதப்படாத சட்டங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தும் கட்டுரைகள். பெண்களுக்கு பெண் விடுதலை விடயத்தில் சிந்தனைத்தெளிவை ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டும் சேவையினை ஆற்றும் கட்டுரைகளிவை. 'பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலை. மானுடத்தின் விடுதலை' என்று நூலுக்கான தன்னுரையில் அறை கூவல் விடுக்கும் சந்திரவதனா நூலின் தாரக மந்திரங்களாக ' நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய இளம் பெண்களே வழி கோலுங்கள்' என்ற கூற்றினையும், 'பெண்ணே நெருப்பாயும் வேண்டாம். செருப்பாயும் வேண்டாம். உனது இருப்பு , உனது விருப்போடு, உனதாய் இருக்கட்டும்' என்னும் கூற்றினையும் முன் வைக்கின்றார். பெண்ணுரிமையினை வலியுறுத்தும் தன் எண்ணங்களை இக்கட்டுரைகளில் வலியுறுத்தும் சந்திரவதனா , அவை ஆண்களுக்கு எதிரானவை அல்லவென்றும் குறிப்பிடுகின்றார்.
'அலையும் மனமும் வதியும் புலமும்' சிறுகதைத்தொகுப்பு. இருந்தாலும் நூலின் முதற் பக்கத்தில் பத்திகள் என்று குறிப்பிடுகின்றார். பல்வேறு சஞ்சிகைகள், இணைய இதழ்கள் ஆகியவற்றில் வெளியான சிறுகதைகள் புகலிடச் சூழலில் காலநிலை, மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் இழந்த மண் மீதான நினைவுகள் எனப் பல்வேறு தளங்களில் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. அகதிகளாகப் புகலிடம் நாடிச் செல்கையில் குடிவரவு விடயத்தில் எதிர்கொள்ளும் பல்வகைப்பிரச்சினைகளையும் (குறிப்பாக இருப்பிடம், நிறவெறி ) எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையில் இக்கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் புகலிடச் சூழல் புகலிடம் நாடிய மக்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்களையும் சில கதைகள் விபரிக்கின்றன. குறிப்பாக புகலிடத்திலிருந்து பிறந்த மண்ணுக்குப் பயணிக்கும் குடும்பமொன்று பிறந்த மண்ணில் அடையும் அனுபவங்களைக் கதையொன்று விபரிக்கும். மறக்காமல் படைப்புகள் வெளியான சஞ்சிகைகள், இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளையும் குறிப்பிடுகின்றார்.
ஓவியர் மூனாவின் 'நெஞ்சில் நின்றவை' அவரது பிறந்த மண் மீதான நனவிடை தோய்தல்களே. அக்காலகட்டத்தில் ஊரில் நிகழ்ந்த பல்வகைச் சம்பவங்களையும், வழக்குகளையும் ,பற்றி விபரிக்கும் கட்டுரைகளில் ஆளுமைகள் பலர் பற்றியும் அறிந்துகொள்கின்றோம். ஓவியரான மூனா கட்டுரைகளுக்கும் ஓவ்வொன்றுடனும் தன் ஓவியங்களையும் இணைத்திருக்கலாம்?
இவை இந்நூல்கள் பற்றிய சுருக்கமான குறிப்புகளே தவிர விரிவான விமர்சனங்கள் அல்ல. முதற் கட்ட மேலோட்ட வாசிப்பின் னிளைவான கருத்துகள் இவை. விரைவில் இந்நூல்கள் பற்றிய விரிவாக என் கருத்துகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.
ngiri2704rogers.com