என்னைப்பொறுத்தவரையில் என் குருமார்கள் நூல்களே! அவற்றை எழுதிய எழுத்தாளர்கள், அறிஞர்களே! அவர்களின் இருப்பிடமான நூலகங்களே என் ஆலயங்கள்.
எனது குருமார்களின் உதவியினால் அறிவியல் , அரசியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப்பல்வேறு துறைகளையும் அறிய முடிந்தது.
ஐனஸ்டைன், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் ஃபிராய்ட், லெனின், மேரி கியூரி, ஸ்டீபன் ஹார்கிங், என் மனதைத்தொட்ட பல புனைகதை எழுத்தாளர்கள் எனப்பலரையும் அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள முடிந்தது. இந்த உலகை, இந்தப்பிரபஞ்சத்தை, உள்ளே விரிந்திருக்கும் உள்ளத்தை, அதன் ஆற்றலை , அண்ட வெளியில் பரந்து கிடக்கும் பிரமிப்பினையூட்டும் புதிர்களை இவற்றையெல்லாம் அறிய வைத்தவர்கள் எனது குருமார்களே!
"உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே" என்று என்னை நெஞ்சு நிமிர்த்தி ஆட வைத்தவர்கள் எனது குருமார்களே!
"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்"
என்று என் சிந்தையைப்புடம் போட்டவர்கள் எனது குருமார்களே!
"மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்"
என்று போதித்தவர்கள் என் குருமார்களே!
'இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்ந்திட' வைத்தவர்கள் என் குருமார்களே!
என் சிந்தனையை விரிவு படுத்திய, எப்பொழுதுமே விரிவு படுத்திக்கொண்டிருக்கும் குருமார்களே, இருப்பினைத் தெளிவுடன், நம்பிக்கையுடன் எதிர்கொண்டிட என்னை உருமாற்றிய குருமார்களே, இருப்பில் இன்பத்தைத்தந்த, தருகின்ற குருமார்களே! உங்களுக்கு என் நன்றி! மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி! நன்றி!