- யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் வருடாந்த நிகழ்வான 'கலையரசி 2016' விழா மலருக்காக, எழுத்தாளர் சொக்கனைப்பற்றிச் சுருக்கமாக எழுதிய கட்டுரையிது. -
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர், ஆசிரியர்கள் பலர் காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர். அவர்களில் சொக்கன் என்றழைக்கப்படும் கலாநிதி கந்தசாமி சொக்கலிங்கம் அவர்களுமொருவர். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் , நல்லூரை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்தவர் சொக்கன். யாழ் ஸ்ரான்லி கல்லுரியில் இடைநிலைக்கல்வியைக்கற்ற இவர் பின்னர் தமிழ் வித்துவான், இளநிலை, முதுகலை ஆகிய பட்டங்களுடன் கெளரவக் கலாநிதி பட்டங்களையும் பெற்றவர். யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப்பணியாற்றியவரிவர்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதை, நாவல், நாடகம் , இலக்கிய ஆய்வு என சொக்கனின் பங்களிப்பு பரந்து பட்டது. தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், சைவ மதத்துக்கும் மிகுந்த பங்களிப்பு செய்திருக்கின்றார் சொக்கன். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் 'தமிழ்மாமணி', இந்துக் கலாச்சார அமைச்சின் 'இலக்கியச்செம்மல்' , அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் 'மூதறிஞர்' பட்டத்தினையும், விடுதலைபுலிகள் அமைப்பு வழங்கிய மாமனிதர் பட்டத்தையும் பெற்றவர்..
இவரது 'கடல்' சிறுகதைத்தொகுப்பு 1972ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசினைப்பெற்றுக்கொண்டது. 'வீரத்தாய்', 'நசிகேதன்', 'நல்லூர் நான் மணிமாலை', 'நெடும்பா' ஆகிய கவிதைத்தொகுதிகள், 'சிலம்பு பிறந்தது', 'சிங்ககிரிக் காவலன்' ஆகிய நாடகங்கள், 'சீதா', 'செல்லும் வழி இருட்டு' ஆகிய நாவல்கள் மற்றும் 'ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' (முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக எழுதப்பட்ட ஆய்வு நூல்) ஆகியவவை அவரது இலக்கிய வரலாற்றைச்சிறப்பிப்பவை.
இவரது எழுத்துச்சிறப்பை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது 'கலைச்செல்வி' சஞ்சிகையில் இவர் எழுதிய சிறுகதையொன்றின் மூலம்தான்.,பெயர் மறந்துவிட்டது. கதையின் சுருக்கம் இதுதான்: தமிழாசிரியர் ஒருவரின் மகளுக்கு அவரது மாணவர்களிலொருவன் காதல் கடிதம் எழுதி விடுகின்றான். ஆனால் அதை எழுதியவன் தன் மாணவனே என்பதை அந்த ஆசிரியர் கண்டறிந்துவிடுகின்றார். எப்படி? வழக்கமாக அவன் விடும் இலக்கணப்பிழையினை அந்தக் கடிதத்திலும் விட்டிருந்தான். அதன் மூலம் ஆசிரியர் தன் மகளுக்குக் காதல் கடிதம் எழுதிய அந்த மாணவனை கண்டுபிடித்து விடுகின்றார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அவரது நாவல்களுக்கு முக்கியத்துவமுண்டு. முதன் முதலில் சாதிப்பிரச்சினையக் வைத்து எழுதப்பட்ட நாவல் 'சீதா' என்று கூறுவர். முனைவர் நா.சுப்பிரமணியன் அந்நாவல் பற்றி "சாதிப் பிரச்சினையை மேலெழுந்தவாரியான சமரச உணர்வினாலோ அல்லது உணர்ச்சி வசப்பட்ட எழுத்தினாலோ தீர்க்கமுடியாது என்றும், அது உண்மையான, பகிரங்கமான, சுயநலமற்ற தியாகத்தின் மூலமே தீர்க்கப்படவேண்டும் என்றும் சீதா நாவலின் மூலம் வற்புறுத்தப்படுகின்றது. சாதி ஏற்றத்தாழ்வை உயர் சாதியினரின் கண்ணோட்டத்தில் நோக்கும் இந்த நாவலிலே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படவில்லை. உயர் சாதியினரிடத்தில் அப்பிரச்சினை எழுப்பும் அலைகளையே சொக்கன் காட்டுகிறார்." என்று விமர்சித்திருப்பார்.
அதே சமயம் சொக்கன் அவர்களை மரபுகளைப்பேணும் பழமைவாதியாகவே கணித்திருந்த என்னை தெணியான் அவர்களின் 'பார்க்கப்படாத பக்கங்கள்' நூலிலுள்ள 'பார்க்கப்பட வேண்டிய பக்கம்' என்னும் கட்டுரை இன்னுமொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது. அவரை ஒரு முற்போக்கிலக்கியவாதியாக அக்கட்டுரை சித்திரித்திருந்தது.
"சொக்கன் அவர்களும் அக்காலகட்டத்தில் முற்போக்கு அணி சார்ந்த ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். அவர் தனது இறுதிக்காலம் வரை மிகக் கண்ணியமும் நிதானமுமுடைய ஓர் எழுத்தாளராக வாழ்ந்தார் என்பதற்கு ஞானம்; ஏப்பிரல் 2004 சஞ்சிகையின் அக்காலகட்டம் பற்றி எழுதியிருப்பது சான்றாதாரமாகின்றது. அதனை அவரது பின்வரும் கூற்றுகள் உறுதிப்படுத்துகின்றன..
:"அறுபதுகளில் தினகரன்வாயிலாக நடந்த மரபுப் போராட்ட விவாதக் கட்டுரைகளில் மரபுக்கெதிரான கட்டுரைகளிலே கணிசமான அளவு கட்டுரைகள் என்னால் எழுதப்பட்டன.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் யாழ் மாநகரசபை மண்டபத்தில் எடுத்த விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கவிதைச்சமர் என்பது. தீர்ப்பு வழங்கும் நடுவராக நான் என் தீர்ப்பைக் கவிதையில் எடுத்துரைத்தேன். இந்நிகழ் மிகவும் பாராட்டப்பட்டது." ....(பக்கம் 127' 'பார்க்கப்படாத பக்கங்கள் - தெணியான்)
"மரபுப்போராட்டத்தில் ஒரு நிகழ்வாகக் கருத்தரங்கு ஒன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் 1961 இல் நிகழ்ந்தது.... மரபை எதிர்த்து வாதிட்டவன் நான்."
(பக்கம் 127' 'பார்க்கப்படாத பக்கங்கள் - தெணியான்)
"நான் அன்று மரபுநெறி நின்ற பேரறிஞர்களும் வசனப்பிழை விட்டுள்ளனர் என்று அடித்துரைத்து என் கூற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகப் பரிமேழகர் உரையிலிருந்தும், ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் கட்டுரையிலிருந்தும் உதாரணங்கள் காட்டினேன்." (பக்கம் 127' 'பார்க்கப்படாத பக்கங்கள் - தெணியான்)
இவ்விதமாகச் சொக்கனைப்பற்றிக்கூறும் தெணியான் 'பழைமையைப்பேணுவது, சமயத்தைப்பேணி வாழ்வது என்பன சொக்கன் அவர்களின் வாழ்வின் அடியாதாரமாக அமைந்தபோதும் புதுமையை வரவேற்கும் நவீன சிந்தனையாளன் அவர். உதட்டளவில் அல்லாது உள்ளத்தினால் பழமையிற் புதுமை காண விழைந்த பரந்த மனப்பாங்கு கொண்டவர்" என்றும் , "சொக்கன் அவர்கள் முற்போக்கு அணிசார்ந்த ஒருவராக வாழ்ந்தார் என்பது இன்று கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்" என்றும் கூறுவார்.
மேலும் மேற்படி தெணியானின் கட்டுரை 1963இல் யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற சாகித்தியவிழா பற்றியும் குறிப்பிடுகின்றது. ஒரு காலத்தில் யாழ் இந்துக்கல்லூயில் ஈழத்தமிழ் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அதன் மூலம் அறிய முடிகின்றது.
சொக்கனின் இலக்கியத்துக்கான பன்முகப்பங்களிப்பு பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம். . அத்துடன் ஈழத்தமிழ் இலக்கியத்துக்கான யாழ் இந்துக்கல்லூரியின் காத்திரமான பங்களிப்பு பற்றிய ஆய்வுகளும் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டும். அதற்கு இதுபோன்ற கட்டுரைகள் அடிகோலுமென்ற நம்பிக்கை எனக்குண்டு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.