பதாகை இணைய இதழில் 'எதற்காக எழுதுகிறேன்?' தொடர்
'காசுக்குப் பிரயோஜனமில்லாத காரியம்' என்று நிச்சயமாக எந்த ஒருவருமே ஒப்புக் கொள்வார்கள் என்றால் அது கட்டாயமாக பேனா பிடித்து எழுதுவது தான். தமிழ்ச் சூழலில் இது மிகவும் கேவலமான போக்கத்த தனமான கிறுக்கு வேலை என்றே கருதப்படுகிறது. குடும்பத்தினரால் காயப்படுத்தப் படாத எழுத்தாளர் ஆணாயிருந்தால் ஆயிரத்தில் ஒருவர். பெண்ணாயிருந்தால் யாருமே இல்லை. பதிப்பாசிரியர்களால் விமர்சகர்களின் புறக்கணிப்பால் மனச்சோர்வடையாத எழுத்தாளரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இத்தனையையும் மீறி சமகாலத்தில் எழுதுபவர்கள் எதற்காக எழுதுகிறார்கள்? அவர்களின் தரப்பை ஒரு தொடராக பதாகை இணைய தளம் வெளியிடத் துவங்கி இருக்கிறார்கள். இந்தத் தொடரைத் தொடங்கத் தூண்டுதலாயிருந்த ஒரு சிறு நூலின் பகுதிகளை மேற்கோள் இடுகிறார் நரோபா. அது கீழே:
அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.
“எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..
ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-
“எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புக்களற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அனுபவித்துக்கொண்டு தனக்குதானே, தன் மன அரிப்புக்காக வாழும் மனமைதுனக்காரன் அல்ல.
அரசியல்வாதியும், விஞ்ஞானியும், கலைஞனும் இந்த உலகத்தை நிர்ணயிக்கிறார்கள். இதன் தன்மையை மாற்றியமைத்து வளர்க்கிறார்கள்.
அவர்களது இந்த போராட்டத்தில் நான் எனது கடமையைச் செய்கிறேன். இதை மறுத்தால் நான் வாழும் காலத்திற்கும், எனது உடன் பிறந்தோர்க்கும் நான் துரோகம் செய்தவனானேன்.”
ஆர்விக்கு வேறு கவலைகள் இருக்கின்றன. “எழுத்தைக்கொண்டு என்னவும் செய்யலாம். “இன்னும் நேரில் திட்ட முடியாத ஆட்களை, எஜமானர்களை, எதிரிகளை பெயரை மாற்றிபோட்டு இஷ்டப்படி தீர்த்து கட்டுகிறபோது ஏற்படுகிற இன்பத்துக்குப் பெயர் எதாவது இருந்தாள் அது என்ன? அதிலும் ஆத்மதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாதோ?”
அழகிரிசாமி, க.நா.சு, பிச்சமூர்த்தி ஆகிய மூவரின் கருத்துக்களும் ஆன்மீக தளத்தில் விரிகின்றன.
“ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன் ..எழுத்துப் பணியின் உச்ச நிலையில், நான் மற்றச் சகல உயிர் வர்க்கங்களுனுடனும் ஒன்று கலந்து ஐக்கியமாகிவிடுவதால் நான் எனக்கு செய்யும் மனித சேவை, மண்ணுயிர் சேவையாகவும் இருக்கிறது. நான் உயர்ந்தால், உலகமும் உயர முடிகிறது. இப்படிப்பட்ட காரியத்தை கலைகளினாலேயே சாதிக்க முடியும். நான் பயின்ற கலை எழுத்து, அதனால் எழுதுகிறேன்,” அழகிரிசாமி எழுத்தின் வழியாக தான் அடையும் இரண்டற்ற நிலையை பேசுகிறார்
“ஈடுபாடில்லாமல் கண்டு, கண்டதைத் திரும்பச் சொல்லி, பிறரையும் அதேபோல காண செய்வதுதான் கலையின் லட்சியம். காண்பதிலும், கண்டதை திரும்ப சொல்வதிலும் ஆனந்தம் காண்பதே இலக்கிய ஆசிரியர்களின் லட்சியம். இந்த ஆனந்தத்துக்காகத்தான் நான் எழுதுகிறேன்,” என்று க.நா.சுவும் ஏறத்தாழ இதே போன்ற ஆன்மீக தளத்தில் நின்று தான் தன் எழுத்தை பற்றி மதிப்பிடுகிறார்.
“இப்போது எதற்காக எழுதுகிறேன்? சுத்தமாக பணத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கம் கொள்ளவில்லை!..ஆம் வீடுகட்டும் என்ஜினீயர் மாதிரி பணம் கொடுத்தால் – நாவலோ, சரித்திரமோ – தயார் செய்து கொடுக்க வேண்டியதுதானே? …வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிகொள்வதில் என்ன பிரயோஜனம்?” என்று ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதும் போது மனம் கனக்கிறது.
ஆனால் பிச்சமூர்த்தி அதை உறுதியாக மறுக்கிறார். “உண்மையில் கலைஞனும் விதையைபோல. பணமும் புகழும் பிரச்சாரமும் கலைக்கு நேரடியாக காரணங்கள் அல்ல. புஷ்பத்தை சந்தையில் விற்கலாம், ஆனால் வியாபாரம் நடத்துவதற்காக மல்லிகை மலர்வதாக நினைத்துவிட முடியாது… சிருஷ்டி இயற்கையின் லீலை. ஆன்மீக விளையாட்டு.”
இதில் எது சரி? எது தவறு? எனக்கு எல்லாமே சரி என்று தான் தோன்றியது. .
அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் இசை ‘ஏன் எழுதுகிறேன்’ என்றொரு கட்டுரையை அந்திமழை இதழில் எழுதி இருக்கிறார். ஆர்வெல், ஹெமிங்க்வே, புக்கோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை பற்றியும் ஏன் எழுதுகிறேன் என்பதை பற்றியும் விளம்பி இருக்கிறார்கள்.
இந்த கேள்வி எனக்கு முக்கியமானதாக பட்டது. காலந்தோறும் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகவும் பட்டது. எழுதுபவரே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பதில்களை கண்டடையும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றைய இணைய யுகத்தில் கவனம் சிதையாமல் எழுதுவது ஒரு சவாலாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது, பணம் இன்று எழுத அத்தனை முக்கிய காரணி இல்லை என்றே தோன்றுகிறது. இணையத்தின் எழுச்சி வேறுவகையில் அதிகம் எழுதி குவிக்கவும் சாத்தியம் உள்ள காலகட்டமும் இதுவே.
எழுதும் அந்த நேரத்தில் வேறு எதை எதையோ செய்திருக்கலாம். உண்மையில் ஒருவன் ஏன் எழுத வேண்டும்? நம்முள் எழுத்தாக வெளிப்படத் துடித்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அது என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை இருக்கலாம். எல்லா சமயங்களிலும், எல்லோருக்கும் எழுத்து ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. பெரும் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், எழுத துவங்கியவர்கள் என எல்லோரையும் நோக்கி இக்கேள்வியை கேட்க வேண்டும் என தோன்றியது. அந்தரங்கமாக ஒரு சின்ன கடைதலை இக்கேள்வி நிகழ்த்தி தனக்கான விடையை அவர்கள் கண்டுகொண்டு நமக்களிக்கும்போது அது நமது விடையாகவும் இருக்க கூடும். திஜாவின், பிச்சமூர்த்தியின், அழகிரிசாமியின் விடை என்னுடையதும்தான். புனைவாளர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பட்டவர்களை நோக்கி இக்கேள்வியை கேட்க விரும்பினேன். தமிழில் வெகு அரிதாக வாசிக்கப்படும் அறிவியல் கட்டுரையை இத்தனை மெனக்கெட்டு ஏன் எழுத வேண்டும்?
பதாகை சார்பாக நாங்கள் அறிந்த பலரிடமும் இக்கேள்வியை வைத்தோம். பெரும்பாலும் எவரும் மறுக்கவில்லை. மேலும் பலரையும் கேட்பதாக இருக்கிறோம். இதை வாசிக்கும் வாசகர்கள் எழுத்தாளர்கள் அவசியம் எழுத வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம். இந்த இதழ் துவங்கி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து, எழுத்தாளரின் சிறிய அறிமுகத்துடன் இனைந்து, பல்வேறு எழுத்தாளர்களின் பார்வை வெளிவரும் என நம்புகிறேன்.
ஜாம்பவான்களின் பதிவுகளை மேலே பார்த்தோம். சமகால எழுத்தாளர்களில் துவக்கத்தில் பதாகையில் தனது உந்துதலைப் பதிவு செய்தவர்கள் கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே:
1.ரவி நடராஜன் https://padhaakai.com/2016/05/02/ww-ravi-natarajan
2.மு.கோபி சரபோஜி https://padhaakai.com/2016/05/02/ww-gobi-saraboji/
3.சத்யராஜ்குமார் https://padhaakai.com/2016/05/02/ww-satyarajkumar/
4.சரவணன் அபி https://padhaakai.com/2016/05/02/ww-saravanan-abhi/
5.சத்யானந்தன் https://padhaakai.com/2016/05/02/ww-satyanandan/
எழுத்தாளர்கள் எல்லோரிடமுமே பொதுவான ஒரு ஆர்வம் வாசிப்பு. தீவிர வாசிப்பு என்பதே சரியானது. வாசிப்பு எழுத்து என இலக்கியத்தின் மீது மட்டற்ற ஈடுபாட்டுடன் இயங்குபவர்கள் எழுத்தாளர்கள். விமர்சனமும் சேர்ந்து இயங்குவோர் குறைவு. ஆனால் விமர்சகர்களே ஒரு நல்ல பதிவை கவனம் பெறச் செய்பவர்கள். இலக்கியம் தொடர்பான விவாதங்களால் சமகால இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதில் முதல் அடி எடுத்து வைப்பவர்கள்.
இலக்கியம் என்பது ஒரு பயன்படு பண்டமல்ல. அது சுயமுன்னேற்ற ஏணி அல்ல. வாழ்க்கையின் விடை தெரியாத கேள்விகளுக்கும் புதிர்களும் விடை வைத்திருக்கும் அனுபந்தமுமல்ல. அது வாழ்க்கை பற்றிய புரிதலை நோக்கிய நகர்வில் படைப்பாளி வாசகனுடன் கைகோர்க்கும் தோழமை மிகுந்த பயணம். இதில் எழுத்தாளன் பீடத்திலும் வாசகன் சீடனாகவுமில்லை. இருவரும் ஒரு பகிர்தலில் இணைந்து பயணத்தில் ஒன்றாயோ தனியாகவோ மேற்செல்கிறார்கள்.
மானுடத்தின் ஆகச்சிறந்த பண்பாட்டு வெளிப்பாடு இலக்கியத்தில் தான் நிகழ்கிறது.
http://sathyanandhan.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.