யுவனின் நீள் கவிதை "இருத்தலும் இலமே"
காலச்சுவடு ஏப்ரல் 2016 இதழில் யுவனின் நீள்கவிதைக்கான இணைப்பு இது. தமிழ்ச் சூழலில் கவிதை வாசிப்பு, விமர்சனம், கவிதை பற்றிய புரிதல் இவை படைப்பாளிகளுக்கே பிடித்தமான ஒன்று இல்லை. தனக்குக் கவிதை பற்றியும் கொஞ்சம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு பார்வையைப் பதிவு செய்பவர்களே விரல் விட்டு எண்ணக் கூடிய மூத்த படைப்பாளிகளில் வெகு சிலர். பிறர் நேர்மையாளர்கள். கவிதை என்ற ஒன்று இலக்கியத்தில் இருக்கிறது என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாத நிம்மதி உடையவர்கள்.
கவிதை வெளிப்படுவது புனைகதை படைப்பாக்கத்தை விட அடிப்படையில் கற்பனை, காட்சிப்படுத்துதல் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்று புள்ளிகளில் வேறுபடுவது. ஒரு குழந்தையின் பார்வையுன் உலகைப் பார்ப்பவன் கவிஞன். அவனுக்கு காட்சிகளில் இருந்து சாதாரண விழிகளுக்கு அன்னியமான, மிகவும் புதுமையான, கொப்பளிக்கும் கற்பனை விளம் மிகுந்த தரிசனங்கள் கிடைக்கின்றன. அந்தப் புள்ளியிலிருந்து அவன் நகர்ந்து அந்த மனவெளி அனுபத்தை கவிதையாகப் படைக்கும் போது சொற்களின் இயலாமையைக் கடக்க முயல்கிறான். இப்படிக் கடக்கும் முயற்சி புதிய சொல்லாடல்களுக்கு, மொழிக்கு அசலான வளம் சேர்க்கும் பயன்படுத்துதலுக்கு அவனை இட்டுச் செல்கிறது. புனைகதை வாசகன் பழகிய சொற்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு நகர்வது. கவிதை சொற்களை, மொழியைப் பயன்படுத்துவதில் வாசிப்பதில் கற்பனையும் புதுமையுமான தளத்துக்கு வாசகரை இட்டுச் செல்வதாகும். ஆன்மீகத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையான ஒற்றுமை இரண்டுமே வாழ்க்கையின் புதிர்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை முன் வைப்பதே. வாழ்க்கையின் விடை தெரியாத கேள்விகளை, வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளை ஆன்மீகமும் கவிதையும் எப்போதும் தொடுகின்றன. குறிப்பாக நவீன கவிதை இந்த இயங்குதலினாலேயே முக்கியத்துவம் பெறுவது.
யுவனின் நீள் கவிதை பற்றிய மனத்தடை ஒன்றே. அதை நான் கடக்கவில்லை. ஆனாலும் இன்னும் மீள் வாசிப்பில் எனக்குள் விவாதித்தபடி இருக்கிறேன். கவிதையின் மிகப்பெரிய பலம் அது சொற்களை விரயம் என்னுமளவு வாரி இறைக்கும் புனைவு எழுத்தை - கதை அல்லது கட்டுரை - தனது சொற்சிக்கனத்தில் எள்ளுவது. குறிப்பாக யுவன் புனைகதை, கவிதை இரண்டுமே கைவரும் அபூர்வ உயிரினமானவர். காவியமாயில்லாத ஆன்மீகப் பொறியின் அடிப்படையிலான கவிதை எழுதியவர் ஏன் நீள் கவிதை எழுதினார்? இந்தக் கேள்வி என்னுள் இன்னும் நெருடியபடி தான் இருக்கிறது.
ஆறு பகுதிகளாலான இந்தக் கவிதை சமகாலத்தில் வந்த செறிவின் சிறப்பில் வெற்றி பெற்ற நவீனப் படைப்பு. 1,2 என்று மட்டுமே அடையாளமாய் உபதலைப்பில்லாமல் ஆறு பகுதிகள் அல்லது ஆறு கவிதைகளாலானது இந்த நீள் கவிதை.
இந்தக் கவிதைகளின் பெரிய பலம் வாசித்து முடித்தும் நம்மை கவிதையின் உள்ளடக்கத்தைத் தாண்டி மேலே விரிந்து செல்லும் அதன் மீறல்தன்மையில் லயிக்க வைப்பது. விமர்சனக் கண்ணோட்டத்துக்காக மட்டுமே ஐந்து பதிவுகளை அவற்றின் மையப் பொறியை வைத்து அணுக முயலலாம். அந்த வரிசைப்படுத்துதலில் பின்வரும் மையக் கருக்களை நாம் கவிதை வரிகளுடன் பொருத்திப் பார்க்கலாம்.
1. தலைமுறைகள்
நான் என் அப்பாபோல இருக்கிறேன்
அப்பா அவரது அம்மாபோல
அவர் அவரது அப்பாபோல. முத்தாத்தா
தற்போது கடவுள்போல இருக்கிறார்.
திதிநாள் தவறாமல் வந்து வந்து
பருக்கை கொறித்துப் போகிறார் - அச்சமயம்
காக்காய்போல இருக்கிறார்.
என் பெண் சிசுவாக இருந்தாள்
அம்மணமாய்த் திரிந்தாள் - மெல்ல மெல்ல
இறுக்கி மூடிய உடைக்குள்
புகுந்தாள் - திடீரென்று ஒருநாள்
பயந்த முகத்துடன் ஓடிவந்து
தாயின் காதில் ரகசியம் சொன்னாள் - இன்று
என் தெருவின்
தேவதையாக இருக்கிறாள்.
இந்தப் பகுதியில் தலைமுறைகளின் தொடர்ச்சியும் ஒரு குழந்தையின் வளர்ச்சி, தகப்பனுக்கு ஒன்றாகவும் வெளி உலகுக்கு முற்றிலும் வேறாகவும் இருக்கும் எளிய புதிர் காலத்தின் பயணம் இயல்பானதாகவும், தனி மனிதனால் அதனுடன் பொருத்திக் கொள்ள முடியாமற் போவது அவனது மனவெளியின் மாயத் தோற்றமாகவும் இருப்பதைச் சுட்டுகிறது.
2. நிலையாமை
நிலையாமை என்பது பிறப்பு மரணம் பற்றியது மட்டும் தானா? மனித உறவுகள், ஒவ்வொருவர் ஸ்வீகரித்த அல்லது கைப்பற்றிய அதிகாரம் பட்டங்கள் பெற்ற முக்கியத்துவம், பயன்பட்டது - பயமுறுத்தியது எதுவுமே நிலைக்காமற் தான் போகிறது.
நண்பர்கள்போல வருகிறார்கள்
ஒரு சொல் தடுக்கி
விரோதி ஆகிறார்கள்
நாயகனாய் இருக்கிறார்கள்
உள்நோக்கம் வெளிப்பட்டு
துரோகி ஆகிறார்கள்
தீரனாய் இருக்கிறார்கள்
வழுக்கி விழுந்து
கோமாளி ஆகிறார்கள்
இருக்கிறார்கள் இருக்கிறார்கள்
இருந்துகொண்டே இருக்கிறார்கள்
ரத்தத்தின் ஆணைப்படி
மாறியவாறிருக்கிறார்கள்.
ஞாபகத்தில் இருப்பவர்
தாண்டிப் போகிறார்.
ஞாபகத்தின் வெளியிலுள்ளோர்
எங்கே உள்ளார்? சிலவேளை
நினைவின் பரப்பில் நுழைந்து
வெளியேறிப் போகிறார்கள்
சாணைக் கல்லின் தீப்பொறிபோல.
குகை மனிதன் வடிவெடுத்து
அரணிக் கட்டையில் தீ
வளர்க்கிறேன். குதித்துப் பாயும்
சுடரின் துளியில் பொசுங்குகிறது
மறதியின் கசடு.
3. இருமை - என் நிலைப்பாட்டில் அல்லது பிம்பத்தில் ஒரு இருமை இருந்து கொண்டே இருக்கிறது. அது தற்காப்புக்காகவா, மேலதிக லாபங்களை நோக்கியா இரண்டுமேயா முடிவற்ற கேள்வி. ஆனால் நான் இருமையை வாழ்க்கையின் நிதர்சனமாகவும் காண்கிறேன்.
இரவின் செய்தியாய்
இருள் இருக்கிறது -
வெளியேயும் உள்ளேயும்.
உள்ளே என்றுரைத்ததில்
இரு பொருள் இருக்கிறது - மூடிய
ஓட்டினுள் இருநிறக்
கருக்கள் போல. நன்மைபல
தருவதாய் உறுதி சொல்லும்
தலைவரின் வார்த்தைக்குள்
பல பொருள் இருக்கிறது -
ஆலகால சர்ப்பத்தின்
ஆயிரம் நாவுகள் போல்.
சமுத்திரமாய் விரிந்திருக்கிறது வானம்
வான்போலப் பரந்திருக்கிறது கடல்
இதன் சாயலில் அது
அதன் சாயையில் இது
சாயல் இல்லை நிஜம்
என்று நம்பும் ஒரு கணத்தில்
மீன்கள் பறக்கின்றன
வல்லூறுகள் நீருள் துழைகின்றன
ஆகாயத்தின் நிலைப் பரப்பில்
வெள்ளலைகள் புரண்டு மறிகின்றன.
4.மாயை
என் மாயை உங்கள் மாயை என்று இரண்டு உண்டா? கண்டிப்பாக இல்லை. மாயை என்பது ஒன்றே.
நான் எதிராளியில்லை
எதிர்வரும் ஆளைக் காட்டும்
கண்ணாடியாகிறேன். எதிரில்
வருபவர் எனக்குக் கண்ணாடி.
எதிரெதிர் நிற்கும் ஆடிகள் என
முடிவற்றுப் பெருகும்
பிம்பங்களைப் பிறப்பிக்கிறோம்.
தற்போதைய வாக்கியங்களை
பரஸ்பரம் பரிசளிக்கிறோம்.
ஒளியென்றால் பிம்பம்
இருளில் அமிழ்ந்தால் நிழல்
என்று உரத்துக் கூவுகிறது
ஊர்க்குருவி.
5.ஆண் பெண் என்னும் புள்ளிகள்
ஒரு ஆக்கிரமிப்பு அல்லது அதிகாரம் இது ஆண்மை என்றும் ஒரு அரவணைப்பு மற்றும் சகிப்புத் தன்மை என்று அடையாளப்படுத்தினால் உடலமைப்பால் அன்றி வேவ்வேறு தருணங்களில் எடுத்துக் கொள்ளும் முனைப்பின் அடிப்படையில் ஒரு ஆண் பெண்ணாகவும் ஒரு பெண் ஆணாகவும் செயல் புரிவதைக் காண முடியும்.
ஆதிமனிதனிடம் மொழி இல்லை
ஆனாலும்
பேச்சுத்துணை வேண்டியிருந்தது.
ஆதி மனுஷிக்கும்தான்.
கானகமெங்கும் தேடி
மற்றவரைக் கண்டனர்.
உடம்பின் ரகசிய மொழியில்
உரையாடல் தொடங்கியது.
நபர்கள் இடங்கள்
பிராந்தியங்கள் தாண்டி
வெளிச்சம் போலப் பரவிய
உரையாடலின் நீட்சியாய்
இதோ நாமிருவர்
கதைக்கிறோம். தழுதழுப்பு
மண்டிய இக் கணத்தில்
நான் ஆணா பெண்ணா
தெளிவில்லை. என் பாலினத்தை
நீ நிர்ணயிக்கிறாய்.
எல்லா நாட்டிலும் எல்லா நாளிலும்
ஆண்கள் ஆண்களாக இருக்கிறார்கள்
பெண்கள் பெண்களாக.
காதல் முற்றிக் கிறுகிறுக்கும் வேளையில்
ஆண்கள் பெண்களாகிறார்கள்
பெண்கள் ஆண்களாக
6. பருவங்கள் (மனித வாழ்க்கையில் )
இளமை, நடுவயது, முதுமை இவை மூன்றிலுமே சவால்களுக்கு இணையாக சாதகங்கள், துய்ப்புக்கு இணையாகத் துன்பங்கள், கையறு நிலைக்கு இணையாக சுமையிலிருந்து விடுதலை இவை சமமாயிருப்பதை அவதானிக்க முடியும்.
யாரும் சொல்லாமல் விடிகிறது
யாரும் சொல்லாமல் இருள்கிறது
தானாய் மாறும் பருவங்களில்
தசை தளர்கிறது நரம்பு சுருள்கிறது
நரை வெளுக்கிறது ரத்தம் சுண்டுகிறது
தானாக நடக்கிறது எல்லாம். துரிதமாய்
நகரும் சாலைக்கு எதிர்த் திக்கில்
விரைவதாய்க் காணும் என் வண்டி
இருந்த இடத்தில்
இருக்கிறது. சாலை ஓயும் கணங்களில்
தானும் ஓய்கிறது. அந்நேரம்
குழந்தையாய் இருக்கிறேன். அன்பும்
பரிவும் வேண்டிக் குமைகிறேன்.
காதலோ வன்மமோ
பீதியோ மண்டுகையில்
இரவு பகலாகிறது. என்றும்
இரவும் பகலும் முயங்கும் அந்தி
சாம்பல் நிறமாய் இருக்கிறது -
முதுமையின் சாந்தமும்
கையறு நிலையும் கொண்டு.
படைப்பாளியின் தரிசனம் இருக்கும் ஆனால் நிலைப்பாடு இருக்காது ; படைப்பின் தாக்கம் படித்த பின் தொடர் சிந்தனையாய் விரியும்; பொதுமைப்படுத்துதல் அல்லது நிறுவுதல் இருக்காது; வாழ்க்கையின் முரண்களின் புதிர்களின் நிதர்சனம் மட்டும் இருக்கும் - இவை யாவும் நவீனத்துவத்தின் வெளிப்பாடாய் ஒரு படைப்பில் நாம் காணக் கிடைக்கும். யுவனின் இந்த நவீன கவிதை கவித்துவ காட்சிப்படுத்துதலிருந்து ஆன்மீகமாய் விரியும் வீச்சுக் கொண்டது.
http://sathyanandhan.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.