யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்படமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, 'ரொறான்ரோ' கனடாவில் வாழ்ந்து வந்தவரும், கட்டடக்கலைஞர், கட்டடப்பொறியியலாளர், பதிப்பாளர் எனப் பல்துறைகளில் தன் பங்களிப்பை நிலைநாட்டியவருமான அண்மையில் மறைந்த 'தமிழர் மத்தியில்' நந்தா (நந்தகுமாரன் இராஜேந்திரம்) அவர்களின் அந்திரட்டி நிகழ்வு ஸ்கார்பரோவில் அமைந்துள்ள "The Queen Palace" விருந்து மணடபத்தில் 14.7.2012 சனிக்கிழமை, பிற்பகல் 12.00 மணியிலிருந்து 3.00 மணிவரை நடைபெற்றது. நிகழ்வில் நீண்ட நாட்களின் பின் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டடக்கலை, பொறியியற்துறைப் பட்டதாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிவகுமார், கலாஈஸ்வரன், கனகவரதா, யசோதரன், ஜோதிகுமார் மற்றும் கடற்றொழிற் பொறியியலாளரான வரதீஸ்வரன் எனப் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு. நந்தகுமார் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கைநூல் மூலம் கனடாத் தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவொருவர் என்பதால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பாக TVI தொலைக்காட்சியின் அரசியல் ஆய்வாளரான சிவதாசன், 'தமிழன் வழிகாட்டி' செந்தி, 'மோட்கேஜ்'துறையில் பணியாற்றும் சுரேந்திரன், 'ரியல் எஸ்டேட்' துறையில் பணிபுரியும் லோறன்ஸ் பிரின்ஸ், 'Monsoon' ஆங்கிலப் பத்திரிகை வெளியீட்டாளர் லோகன் வேலாயுதம் எனப் பலரை அங்கு காணக்கூடியதாகவிருந்தது.
மேற்படி அந்திரட்டி நிகழ்வையொட்டி 'இராஜேந்திரம் நந்தகுமாரன்' என்னும் நினைவுப் பதிவு மலரும் வெளியிடப்பட்டது. ஒரு சில எழுத்துப் பிழைகள் காணப்பட்டாலும், அழகாக வடிவமைக்கப்பட்ட கைக்கு அடக்கமான நினைவுப் பதிவு. முன் அட்டைப் படத்தில் நந்தா பற்றிய கவிஞர் சேரனின் கவிதையொன்றின் 'நீராய் இருப்பதா? காற்றாய் இருப்பதா? நந்தா - நீ - நீயாய் இருந்தாய்' என்னும் கவிதை வரிகள் அவரது புகைப்படத்தின் கீழ பதிவாகியிருந்தன. 'நினைவுப் பதிவின்' முதல் கட்டுரையை 'நந்தகுமாரன் வாழ்வும் பணியும்' என்னும் தலைப்பில் அவரது நண்பர்களான சிவஞானம், சிவகுமார், கலாஈஸ்வரன், கவிஞர் சேரன் ஆகியோர் எழுதியிருந்தனர். மேற்படி கட்டுரை பல விடயங்களைப் புலப்படுத்தியது. இக்கட்டுரை நந்தாவின் குடும்பம், படித்த பாடசாலைகள், பணிபுரிந்த நிறுவனங்கள், அவரது ஆர்வங்கள், கல்வித்திறமை, அவரது புகழ்பெற்ற விளம்பரக் கைநூலான 'தமிழர் மத்தியில்' பற்றியெல்லாம் விபரிக்கின்றது. அத்துடன் நந்தா சென்னையில் நடைபெற்ற தமிழ் இனி - 2000ற்குப் பெரும் உதவி வழங்கியதையும், 'ரொரான்றோ' பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'தமிழியல் ஆய்வு' மாநாட்டின் ஆரம்பகாலத்துப் புரவலர்களில் ஒருவராக இருந்தவரென்பதையும் பதிவு செய்கின்றது. அத்துடன் 'அறிவையும், ஆய்வையும், அழகையும் நேசிப்பவராக அவர் இறுதிவரை வாழ்ந்தார். அந்த வகையில் தமிழ்ச் சமூகம் அவரை எப்போதும் நன்றியுடன் நினைவுகொள்ளும்' என்றும் மேற்படி கட்டுரையில் கட்டுரையாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்தக்கட்டுரையினை அன்றைய நிகழ்வில் முதலாவதாக உரைநிகழ்த்திய தாம்.சிவதாசன் மீள்வாசிப்புச் செய்தார்.
அடுததாக இடம்பெற்றுள்ள கட்டுரை 'என் தந்தையும் நானும்' (My Father & I) என்னும் தலைப்பிலான அவரது மகள் துளசி நந்தகுமாரனின் கடிதக்கட்டுரை. அதில் அவர் தனக்கும் தனது தந்தைக்குமிடையிலான உறவு பற்றி விரிவாக நினைவு கூர்ந்திருக்கின்றார். 'அப்பா என்னை ஒருபோதுமே மதிப்பீடு செய்ததில்லை. ஒரு மகனுக்குப் பதிலாக நான் ஒரு மகளாக இருந்தபோதும் நான் ஒரேவிதமாகவே வளர்க்கப்பட்டேன்' என்று மகிழ்ச்சியுடன் தந்தையை நினைவு கூரும் அவர் தந்தையுடனான பல்வேறு நிகழ்வுகளையும் நினைவு கூருகின்றார். அத்துடன் நந்தாவின் இறுதிக் கணங்களும் மேற்படி கட்டுரையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நந்தாவின் குறுகிய கால வாழ்வில் அவர் அடைந்த திறமைகள், சாதனைகள் பற்றியெல்லாம் வியந்து பெருமையுறும் மகள் இறுதியில் 'அப்பா, நீ இப்பொழுது இங்கேயிருந்து இந்தக் கட்டுரையினை வாசிப்பாயானால், நான் எவ்வளவுக்கு உன்மேல் அன்பும், பெருமையும் வைத்திருக்கின்றேன் என்பதைக் கூற விரும்புகின்றேன். இந்தக் கடிதத்தை எழுதுவதென்பது மிகவும் கடினமானதொன்று. ஏனெனில் உன்னுடன் ஒன்றாகக் கழித்த எல்லா இன்பமான காலத்தையும் நினைத்துக்கொண்டு எழுதும்போது, தொடர்ச்சியாக, கண்ணீருடன் அடிக்கடி நிறுததவேண்டியதாகவிருக்கிறது. நீ பலருக்கு குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்திற்கு முன்மாதிரியாகவிருந்தாய். மங்கிக் கொண்டிருக்கும் எமது கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்கு நீ செய்ததைப்போல், நாங்கள் எங்களது காலகட்டத்திற்குள் எவ்வளவு அடைய முடியுமோ அத்தனையையும் அடைய வேண்டும்' என்று முடித்திருக்கின்றார். தவிர, மேற்படி நிகழ்விலும் துளசி நந்தகுமாரன் தந்தைபற்றிய உரையொன்றினைக் கண்ணீருடன் நிகழ்த்தினார்.
'கட்டடக்கலை வடிவமைப்பாளர் நந்தகுமாரன் (குமார்) இராஜேந்திரம்' ('Architectural Designer Nandakumaran (Kumar) Rajendram') என்னும் நினைவுப் பதிவினை Page + Steele நிறுவனத்தைச் சேர்ந்த கட்டடக்கலைஞரான Paul Starin எழுதியிருக்கின்றார். அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: 'Kumar performed multi- disciplinary responsibilities on many major urban mixed-use high-rise residential condominium projects located in Toron area., Las Vegas and Moscow. He was directly involved on over 35 projects including many award winning, high profile and luxury condominium buildings constructed in Toronto. ... Kumar has left his lasting design imprint on the practice of architecture and on the Toronto skyline'.
நந்தாவின் பால்யகாலத்திலிருந்து நண்பர்களாகவிருக்கும் கனடாவில் வசிக்கும் கலாமோகனின் 'நான் அறிந்த நந்தா..' என்னும் கட்டுரையும் , ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ஜீவாவின் 'நந்தாவும், நானும்' ('Nanda & Me') என்னும் ஆங்கிலக் கட்டுரையும் மேற்படி நினைவுப் பதிவில் காணப்படுகின்றன. அவற்றில் அவர்கள் நந்தாவுடனான அவர்களது அனுபவங்களை, அவர்கள் அறிந்த நந்தாவின் குணநலன்கள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். மேற்படி நிகழ்வில் உரைநிகழ்த்திய கலாமோகன் தனது மேற்படி கட்டுரையினையே மீள்வாசிப்பு செய்தார்.
மேற்படி 'நினைவுப் பதிவு' மலரில் இடம்பெற்றுள்ள இன்னுமொரு கட்டுரை எழுத்தாளரும், 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரனின் 'தமிழர் மத்தியில் நந்தா!' என்னும் கட்டுரையாகும். அதிலவர் தனக்கும் நந்தாவுக்குமிடையிலான அறிமுகம், நட்பு மற்றும் அவருடனான இறுதிக்கால நினைவுகள் பற்றி விபரித்திருக்கின்றார். அத்துடன் 'தமிழர் மத்தியில்' பற்றியும், பதிவுகள் நடாத்திய சர்வதேசச் சிறுகதைப் போட்டிக்குப் பரிசுத் தொகையினை வழங்கிய புரவலராக நந்தா இருந்த விபரம் பற்றியும் தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அத்துடன் 'பதிவுகள் எப்பொழுதும் நந்தாவை நன்றியுடன் நினைவு கூரும். பதிவுகளின் ஆவணப்படுத்தலினூடு நந்தாவின் பங்களிப்பும் தமிழ் இலக்கிய வரலாற்றில், குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்படும்.' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
மேலும் 'Monsoon Journal'' ஆங்கிலப் பத்திரிகை வெளியீட்டாளரான லோகன் வேலும்மயிலும் அவர்களின் 'Nanda made a significant contribution to the Tamil Business Sector..' என்னும் கட்டுரையும், கந்தசாமி குருக்களின் 'மனதில் என்றும் உள்ளவர் தெய்வமானார்' என்னும் பதிவும், சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரியின் 'Nandakumaran wasa a very accomplished Architect , etrepreneur and artist' என்னும் பதிவும், ஈழநாடு (கனடா) ஆசிரியர் T.K..பரமேஸ்வரனின் நந்தா பற்றிய கருத்துகளும் மேற்படி நந்தா பற்றிய 'நினைவுப் பதி'வில் இடம்பெற்றுள்ளன.
மலரின் இறுதியில் நந்தாவின் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் 'நந்தாவின் சில புகைப்படக் கணங்கள்' என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் நந்தா தனது மனைவி வசந்தகெளரி நந்தகுமாரன், மகள் துளசி நந்தகுமாரன் ஆகியோருடனுள்ள புகைப்படமும், அவரது தாயும், தந்தையுமுள்ள புகைப்படமும் மற்றும் நந்தாவின் பங்களிப்பில் உருவான பல்வேறு கட்டடங்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பொன்றும் இடம்பெற்றுள்ளன.
இறுதியாகக் கவிஞர் சேரனின் 'நந்த குமாரன்' என்னும் கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளது. அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
" உன்னோடு உல்லாசங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள்
முகமூடிகளோடு திரிகிறபோது
இயல்பிழக்காத உன் முகத்தை
வலிமையோடு தாங்கின உன் தோள்கள்.
நதி அலைக்குப் பெருங்காற்றைத் தெரியாது.
நீராய் இருப்பதா, நதியாய் இருப்பதா
கடலா இருப்பதா? காற்றாய் இருப்பதா?
சாம்பலைக் கேள்."
மேற்படி கவிதையுடன் நந்தாவின் குடும்பத்தவருடனான கியூபாப் பயணமொன்றின்போது அங்குள்ள ஓவியரொருவரால வரையப்பட்ட கோட்டோவியமொன்றும் பிரசுரமாகியுள்ளது. மேற்படி ஓவியம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நந்தாவின் புகைப்படத்துடன் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் அளவில் சிறியதானாலும் நந்தா பற்றிய மேற்படி 'நினைவுப் பதிவானது' நந்தாவை முறையாக நினைவு கூர்வதில் கனம் மிக்கதாக அமைந்துள்ளது பாராட்டுதற்குரியது.
மேற்படி நிகழ்வில் அவரது பல்கலைக்கழக நணபரும் கட்டடக்கலைஞரும், கட்டடப்பொறியியலாளருமான ஜோதிகுமார் நீண்டதொரு உரையினை ஆங்கிலத்தில் நிகழ்த்தி நந்தா பற்றி நினைவு கூர்ந்தார்.
மேற்படி அந்திரட்டி நிகழ்வினை அனைவரையும் அழைத்து நந்தா பற்றி நினைவு கூர வைத்ததற்காக அவரது மனைவி வசந்தகெளரி நந்தகுமாரனுக்கும், மகள் துளசி நந்தகுமாரனுக்கும் நன்று கூறவேண்டும். நந்தாவின் இறுதிக்கிரியைகள் அவரது வேண்டுகோளுக்கேற்ப குடும்பத்தவர்கள் மட்டுமே கலந்துகொண்ட தனிப்பட்ட நிகழ்வாக அமைந்திருந்ததால் , அனைவரும் கலந்துகொண்ட அந்திரட்டி நிகழ்வானது நந்தா பற்றிய அனைவரினதும் நினைவுகூரலாக அமைந்திருந்தது.
'நினைவுப் பதிவி'ல் இடம்பெற்ற, சேரனின் கவிதை கீழே.
நந்தகுமாரன்
- கவிஞர் சேரன் -
நந்தகுமாரன் என் வீட்டுப் படலையைத் திறக்கிறபோது
நள்ளிரவு சாய்கிறது
ஏரிக்கரையில்.
ஏரிக்குக் கனவுகள் இல்லை
அதனைச் சுற்றிக் கட்டிடங்களை
எழுப்பி விட்டார்கள்
அந்தக் கட்டிடங்களை வடிவமைத்தவர்களின் தலைக்குள்
களிமண்
காற்றில் உப்பு
அந்த வெற்றுப் பக்கத்தை
நீ திருப்புகிறாய்
கட்டிடத்தின் அழகு
கடலின் அழகு என்கிறாய்
சில வேளைகளில் காதலிகளை விடக்
கட்டிடங்கள் அழகாக மிளிரும்
மந்திரம் தெரிகிறது.
நந்தா,
இதயத்தைப் பற்றிச் சிந்திப்பவர்களின் கவனம்
ஈரலில் இருப்பதில்லை
ஈரலைத் தொலைத்தவர்க்கு
ஒரு கைப்பிடியளவு ஈரலை
நான் வழங்குகிறேன்
பெறுவாரில்லை
அதியமானின் நெல்லிக்கனி இருக்க
உள்ளங்கை இல்லை
உன்னோடு உல்லாசங்களைப் பகிரிந்து கொண்டவர்கள்
முகமூடிகளோடு திரிகிறபோது
இயல்பிழக்காத உன் முகத்தை
வலிமையோடு தாங்கின உன் தோள்கள்.
174 A பிறண்ஸ்விக் தெருவில்
என் மாடி அறையில்
உன்னுடைய கனவைப் பற்றியும்
என்னுடைய கவிதையைப் பற்றியும்
பின்னிரவிரவாய்ப் பேசிய நாட்கள்
இனியவை இனி வரா.
அடுத்த வசந்தம் இனி வராது.
எமது உடல்நலம் குறித்த பொறுப்பின்மை
தருகிற பெருந்துயர் எமக்கன்று
மற்றவர்க்குத்தான் என்று
உனக்குத் தெரியாமல் போனதில்
எனக்கு ஆச்சரியமில்லை.
உனது நினைவை எழுதுகிறபோது
எனக்கும் அது தெரியும்.
நதி அலைக்குப் பெருங்காற்றைத் தெரியாது.
நீராய் இருப்பதா, நதியாய் இருப்பதா
கடலா இருப்பதா? காற்றாய் இருப்பதா?
சாம்பலைக் கேள்.