'விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் விடுதலை!
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்து கல்வி ஞான மெய்தி
வாழ்வ மிந்த நாட்டிலே!' என்று பாரதி பாடி ஆண்டுகள் பல கடந்தோடி விட்டன. ஆனால் இன்னும் பாரதம் மானுட நாகரிகமே தலை குனியும் வண்ணம் தீண்டாமைப் பேயின் நச்சுக் கரங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றது. அண்மையில் நடிகர் அமீர்கானின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்ய மேவ ஜெயதே' என்னும் 'உண்மைக் காட்சி' (Reality Show) தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 'தீண்டாமை - அனைவருக்கும் மதிப்பு!'(Untouchability - Dignity for All)' என்னும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி அது. பார்த்தோர் அனைவரையும் நெஞ்சு குலுங்க வைக்கும் நிகழ்வாக அந்நிகழ்சி இருந்தது. 'இந்தியர்' என்று பெருமையுறும் அனைவரையும் நாணிக்குனிய வைப்பதாகவிருந்தது அந்த நிகழ்வு.
'திறமை கொண்ட தீமையற்ற, தொழில் புரிந்து யாவரும், தேர்ந்து கல்வி ஞான மெய்தி, வாழ்வ மிந்த நாட்டிலே!' என்று பாரதி பாடினான். ஆனால் தலித் சமுதாயத்தில் பிறந்து, சிறு வயதிலிருந்தே தீண்டாமைக்கொடுமையின் வெம்மையினால் வாடிய சிறுமியொருத்தி, படித்துப் பட்டங்கள் பல பெற்று, தில்லிப் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரியும் போதும் அவரால்,முனைவர் 'கெளசல் பன்வரா'ல், தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. இருந்தாலும் அனைத்து அக்கிரமங்களையும் எதிர்த்து, துணிச்சலுடன் வாழ்வை எதிர்த்து நடைபோடுகிறார் அந்தப் பெண். இன்றைய பாரதத்திற்குத் தேவையான 'புதுமைப்பெண்'.
இன்னுமொரிடத்தில் தலித் குடும்பமொன்று தாம் பட்ட கஷ்ட்டங்களைத் தமது குழந்தைகள் படக்கூடாதென்று, பாடசாலை அனுப்புகின்றது. ஆனால் பாடசாலை நிர்வாகமோ அந்தப் பச்சிளங் குழந்தைகளை, விளையாட வேண்டிய ஓய்வு நேரங்களில், பாடசாலையின் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்ய வைக்கிறது.
நன்கு படித்த ஒரு தலித்தினத்தைச் சேர்ந்த பெண் தாயாருடன் வாடகை வீட்டில் இருக்கிறார். அவரது தாயாரை அந்த வீட்டுச் சொந்தக்காரி வீடு சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்யப் பணிக்கிறார். காரணம்: அது தலித் மக்களின் பணி.
இவற்றையெல்லாம் அமீர்கானின் அண்மைய 'சத்ய மேவ ஜெயதே' நிகழ்ச்சி அக்கு வேறு ஆணி வேறாகப் 'புட்டுப் புட்டு' வைக்கிறது. பார்ப்பவர் அனைவரின் இதயங்களையும் அதிர வைக்கிறது. நாடறிந்த நடிகரென்பதால் அமீர்கானின் இந்நிகழ்ச்சி பலரைச் சென்றடைகிறது. தீண்டாமைப் பேயின் கொடுங்கரங்களை பாரத மக்களுக்குச் சக்தி வாய்ந்த ஊடகமொன்றின் மூலம் புரிய வைக்கிறது. அதற்காக அமீர்கானைப் பாராட்ட வேண்டும்.
உலக வல்லரசுகளில் ஒன்றாக வரத்த்துடித்துக் கொண்டிருக்கிற இந்தியாவின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க தொகையினருக்கு கழிப்பிட வசதிகளில்லை. வெட்கக் கேடு. முதலில் இந்தியா தனது மக்களுக்குப் போதுமான கழிப்பிட வசதிகளைச் செய்து தரட்டும். அவ்விதம் செய்து தருமானால் மனிதர்களே கழிவுகளை அள்ளுவதன் தேவை இல்லாமலாகிவிடும். சின்னஞ்சிறிய இலங்கையில்கூட இன்று யாரும் வாளிகளை வைத்து மனிதக் கழிவுகளை அள்ளும் வழக்கமில்லை. ஆனால் தகவல் தொழில் நுட்பத்தில் புரட்சி செய்யும் இந்தியாவில், பிராந்திய வல்லரசான இந்தியாவில் இன்னும் இலட்சக்கணக்கான மனிதக் கழிவுகளை அள்ளும் மனிதத் தொழிலாளிகள் இருக்கிறார்கள். குழந்தைகளை வேலை வாங்குதல் குற்றமென்று சட்டமுள்ள இந்தியாவில், தீண்டாமை குற்றமென்று சட்டமுள்ள இந்தியாவில் மனிதர்களே மனிதக் கழிவுகளை இன்னும் அள்ளும் நிலைமை. இனியாவது இந்திய அரசு, மாநில அரசுகளாகியவை இந்த விடயத்தில் மிகவும் கடுமையாக இச்சட்டங்களை அமுல்படுத்த வேண்டும். அதுவரையில் இந்தியா தனது வல்லரசுக் கனவு பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.
மேற்படி அமீர்கானின் 'உண்மைக்காட்சி' தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்ய மேவ ஜெயதே' நிகழ்ச்சியின் தீண்டாமை பற்றிய காணொளியினைப் பின்வரும் இணையத்தொடுப்பில் காணலாம். காணொளியினைக் காண்பதற்கு இங்கு அழுத்துக!