'டொக்டர்' எஸ்.சிவதாஸ் மருத்துவ உலகிலும், இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்டவர். ஆரவாரமின்றி அமைதியாக மனநலத் துறையில் தன்னலற்ற அளப்பரிய பணிசெய்பவர். ஆழமான இரசனையுணர்வு கொண்டவர், கவித்துவமிக்க படைப்பாற்றலும் கைவரப் பெற்றவர். சிறந்த புகைப்பட நிபுணருமாவார். 'நலமுடன்' என்ற இவரது நூலின் வெளியீட்டு விழா ஞாயிறு 15.07.2012 மாலை 5 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந் நிகழ்வின் சிறப்பு அம்சமாக இடம்பெற இருப்பது மனநலம் சம்பந்தமான ஒரு சிறப்புரையாகும். 'மனநலம் மன் உயிர்க்கு ஆக்கம்' என்ற தலைப்பில் உளநல மருத்துவத்துறைப் பேராசிரியர் மு.திருநாவுக்கரசு உரையாற்ற இருக்கிறார். SRM பல்கலைக் கழகத்தில் உளநல மருத்துவத்துறைத் தலைவரான இவர் இந்திய உளமருத்துவ சங்கத்தின் அண்மைக் காலத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக உளமருத்துவ சங்கத்தின் தென்னாசிய வலயத்தில் பிரதிநிதியாகவும் இருக்கிறார். எமது சூழலில் நிறைந்திருக்கும் மனநலப் பிரச்சனைகள் பற்றிய எமது அறிவை வளர்ப்பதற்கும் அத்தகையவர்களுடன் புரிந்துணர்வுடன் நடப்பதற்குமாக அவசியம் கேட்க வேண்டிய உரையாக இது இருக்கும் என நம்பலாம்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்குண்டு உளநலம் பாதிப்புற்ற மக்களிடையே சேவை வழங்கிப் பெற்ற அனுபவத்திலிருந்து பிறந்ததுதான் மருத்துவர் சிவதாஸின' 'நலமுடன்' என்ற இந்த நூல். 2005 ல் முதலில் வெளியான இந்நூல் ஒரு வருட காலத்திற்குள் மீள் பதிப்புக் கண்ட சிறப்புடையது.
மீண்டும் ஒரு மானிட அவலம் இங்கு அரங்கேறியது. இது இயற்கையின் சீற்றத்தால் வந்த அவலமல்ல. போட்டியும் பொறாமையும், இன ஆதிக்க மற்றும் அதிகார வெறியும், கொண்ட மனிதர்களால் கட்டவிழ்த்துவிட்ட அநாகரீக அவலம். விட்டுக்கொடுப்பு, சமரசம் ஆகியவை புரியாதவர்களால் விளைந்த அவலம். ஆனால் போரில் சிக்குண்டு அங்கமிழந்து, உயிரிழந்து, உறவுகளைத் தொலைத்து அவதிப்பட்டது அப்பாவிப் பொதுமக்களே.
இறுதிப்போரில் சிக்குண்டு நிர்க்கதியாகி அவலமான மக்களிடையே பணி புரிந்தார் சிவதாஸ். அந்த அனுபவங்களையும் உள்ளடக்கிய இந் நூலின் புதுக்கிய பதிப்பு 2009ல் வெளியானது. இப்பொழுது மற்றொரு பதிப்பு 4வது பதிப்பாக வருக்கின்றது. 5000 பிரதிகள் ஏற்கனவே மக்கள் கரங்களை எட்டியிருக்கிறது. அதனால் பல்லாயிரம் மக்களுக்கு மனஅமைதியும் நலவுணர்வும் வழங்கிய பெருமை கொண்டது.
இப் புதிய பதிப்பின் வெளியீட்டு விழாதான் இப்பொழுது நடைபெற இருக்கிறது. விழாவிற்கு தலைமை தாங்குகிறார் பிரபல தொழில் அதிபரும் தமிழ் அபிமானியுமான திரு.தெ.ஈஸ்வரன் அவர்கள்.
வரவேற்புரை ஆற்ற இருப்பவர் மருத்துவர்.தா.உமாகரன் அவர்களாகும். அதைத் தொடர்ந்து தலைமையுரையை விழாத் தலைவர் திரு.தெ.ஈஸ்வரன் ஆற்றுவார்.
நூல் வெளியீட்டுரையை ஆற்ற இருப்பது மருத்துவர்.எம்.கே.முருகானந்தன் ஆகும்.
இதைத் தொடர்ந்து முற் கூறிய 'மனநலம் மன் உயிர்க்கு ஆக்கம்'என்ற சிறப்புரையை பேராசிரியர் மு.திருநாவுக்கரசு ஆற்றுவார்.
இலண்டன் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரான கந்தையா சிவகுமார் அவர்கள், டொக்டர்.சிவதாஸ் தனது மருத்துவ அறிவை சுவாரசியமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாற்றல் பற்றிக் குறிப்பிடுவது நூலின் பின் அட்டையை இவ்வாறு அலங்கரிக்கிறது.
நூலாசிரியர் மருத்துவர்.எஸ்.சிவதாஸ் அவர்களின் ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவுறும்.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருப்பரில் ஒருவர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் ஆவார். அவர் இந்நூல் பற்றிக் கூறிய குறிப்பு முக்கியமானது.
(இந்நூல்) "......காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. உளசமூகப் பணிகளில் ஈடுபடப் போகும் சுகாதார மற்றும் வேறுதுறைகள் சார்ந்த தொண்டர்கள் இந்நூலை முழுதாகப் படித்து தமது உதவிகளை சீராக மேற்கொள்வது உகந்தது"
அவர்களுக்கு மட்டுமின்றி, சமூகத்திலும் தன்னைச் சுற்றி வாழும் உறவுகளிலும் நண்பர்களிலும் ஏனையவர்களிலும் அக்கறை கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை என்பேன்.
வவுனியா மனநலச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கும் இக் கூட்டத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.