வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ தொடங்கி இன்றோடு (23-11-2011) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2008 ஆம் வருடம் தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ தமிழில் மாற்று ஊடகத்திற்கான களமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது மாற்று ஊடகங்களாக குறும்படங்கள் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அனைத்து தொலைக்காட்சிகளும் குறும்படங்களை தொடர்ந்து ஒளிப்பரப்புகிறது. உலகம் முழுவதும் குறும்படங்களுக்கான களம் விரிவடைந்துள்ளது. ஆனால் தமிழில் இன்னும் கவனிக்கத்தக்க அளவில், அதிக அளவில் குறும்படங்கள் வெளிவரவில்லை. எல்லாரும் தங்களின் இருத்தலுக்கான நியாயம் தேடவே குறும்படம் நோக்கி ஓடி வருகின்றனர். அல்லது திரைப்படத் துறையில் நுழைவதற்கான நுழைவு சீட்டாகவே குறும்படங்களை கருதுகின்றனர். இதில் எது சரி? எது தவறு என்கிற விவாதம் தேவையற்றது. பொதுவாக இவ்வுலகில் எல்லாவற்றிற்கும், எப்போதும் இரண்டு பக்கங்கள் இருந்தே தீரும். இதில் சரி தவறுகளை ஆராய்ந்து தீர்ப்பு சொல்லும் நாட்டாண்மை வேலையை செய்வதற்கு யாருக்கும் இங்கே அருகதை இல்லை.
குறும்படங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இவ்வேளையில் அவைகளை மேலும் செழுமைப்படுத்தி, குறும்பட ஆர்வலர்களுக்கு மேலும் ஊக்கமளிக்க வேண்டியதே தற்போது நமது கடமை.
மேலும் தமிழ் ஸ்டுடியோ முழுக்க முழுக்க மாற்று ஊடங்களுக்கான களம் மட்டுமே. இங்கே வெகுஜன திரைப்படங்களுக்கு இடமில்லை. ஆனால் வெகுஜன திரைப்படங்களின் ரசனைக் கூட்டும் விமர்சனம் தேவையென்று கருதுகிறேன். எனவேதான் ஏழாம் அறிவு போன்ற படங்களுக்கு இங்கே விமர்சனங்கள் எழுதப்பட்டன. அதைத் தாண்டி தமிழ் ஸ்டுடியோ ஒருபோதும் வெகுஜன திரைப்படங்களுக்கான களம் அல்ல. எனவே உதவி இயக்குனர்கள், திரைப்படத் துறையில் நுழைய முயற்சி செய்பவர்கள், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் யாரும் குறும்படமெடுத்து தங்களை நிரூபிக்க தமிழ் ஸ்டுடியோவின் ஆதரவை நாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ் ஸ்டுடியோ குறும்படங்களை, ஆவணப்படங்களை, இணைப் படங்களை, மாற்று ஊடகமாக முன்னெடுத்து செல்லும் வேலையை மட்டுமே தொடர்ந்து செய்யும். தமிழ் ஸ்டுடியோவின் "படிமை" அமைப்பு மட்டுமே திரைப்படத்திற்கான களம். இங்கே திரைப்படக் கலையும், தொழில்நுட்பமும், இலக்கியம் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. திரைப்படத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் படிமையில் சேர விண்ணப்பிக்கலாம்.
மேலும், பெரும்பாலான வாசக நண்பர்கள் ஏன் தமிழ் ஸ்டுடியோவில் இந்த எழுத்தாளரைப் பற்றி செய்தி வெளியிடுகிறீர்கள்? ஏன் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறீர்கள் என்று கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரே விடை தமிழ் ஸ்டுடியோ ஒரு பொது வெளி. இங்கே விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. உங்களுக்கு தவறென பட்டால் அதனையும் தமிழ் ஸ்டுடியோவிற்கு எழுதி அனுப்புங்கள். உண்மையாக இருந்தால் அதுவும் தமிழ் ஸ்டுடியோவில் வெளியிடப்படும். கருத்து ரீதியான விவாதங்கள் மட்டுமே இங்கே தேவை. தவிர்த்து தேவையற்ற சச்சரவுகளை தமிழ் ஸ்டுடியோ ஒருபோதும் விரும்புவதில்லை. எங்களுக்கு எல்லாரும் தேவை. எல்லாமும் தேவை. எங்களை எதிர்க்கும் நண்பர்கள் உட்பட.
இந்நேரத்தில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றிகள். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்குகிறோம்.
என்றும் அன்புடன்,
அருண் மோ.
நிறுவனர்.
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.