- புகைப்படத்தில்: கலாநிதி நா. சுப்பிரமணியன், வைத்திய கலாநிதி லம்போதரன், விசேட பிரதியைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன், மற்றும் எழுத்தாளர் அகில் - |
சர்வதேச எழுத்தாளர்களை மட்டுமல்ல, குழுசார் நிலையில் இயங்கிவந்த கனடிய தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை அறிந்தோ அறியாமலோ ஈழத்துப் புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழ் மூலம் ஒன்று சேர்த்த பெருமை தாய்மண்ணில் இருந்து வெளிவந்த இந்த ஞானம் மலருக்கே உண்டு. கனடிய சிறுகதை எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் இந்த இதழில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக அ. முத்துலிங்கம், யோகா பாலச்சந்திரன், தேவகாந்தன், குமார் மூர்த்தி, க.நவம், சக்கரவர்த்தி, திருமாவளவன், குரு அரவிந்தன், வ.ந. கிரிதரன், அகில், சுமதி ரூபன், வீரகேசரி மூர்த்தி, மனுவல் ஜேசுதாசன், ஸ்ரீ ரஞ்சனி, துறையூரான், கடல் புத்திரன், மெலிஞ்சிமுத்தன், இளங்கோ, வசந்திராஜா ஆகியோரது சிறுகதைகள் இடம் பெற்றிருப்பது பாராட்டத் தக்கது. இந்த மலரில் தற்போது கனடாவில் வசிக்கும் மூத்த பெண் எழுத்தாளர், அன்று வீரகேசரியில் எஸ்.பொ.வுடன் சேர்ந்து ‘மத்தாப்பு’ எழுதிய குறமகளின் (வள்ளிநாயகி இராமலிங்கம்) சிறுகதை தவறவிடப்பட்டிருப்பதை முக்கியமாக அவதானிக்க முடிந்தது. மிகவும் கவனமாகவும் சிறப்பாகவும் தயாரிக்கப்பட்ட இந்த மலரில் சில கட்டுரைகள் அரைத்த மாவையே அரைப்பது போல ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்கின்றன. பழைய பல்லவியையே பாடுகிறார்கள் என்பதும், விரிந்து பரந்த இந்த இலக்கிய உலகில் அவர்களிடம் புதியதேடுதல் இல்லை என்பதும் மிகவும் தெளிவாகப் புரிகின்றது. பயமா அல்லது பக்தியா தெரியவில்லை. இதைப்பற்றிய தனது கருத்தை இணையப் பத்திரிகையான பதிவுகள் ஆசிரியர் வ.ந. கிரிதரன் அவர்கள் குறிப்பிடும் போது, ‘ஆவணப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயம். எந்தவித ஆவணப்படுத்தல்களுமின்றி, ஆய்வுக்கட்டுரைகள் படைக்கும் பலர் தமக்குக்கிடைக்கும் படைப்புகளை மட்டும் படித்துவிட்டு, பல படைப்புகளைப் படித்துவிட்டு எழுதுவது போன்றதொரு தன்மை தெரியும் வகையில் எழுதிவருகின்றார்கள். இவர்கள் இவ்விதம் எழுதுவதன் மூலம் உண்மைகளைக் குழி தோண்டிப்புதைக்கின்றார்கள்.’ என்று பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.
புதிய தலைமுறையினரான சுதாகர், அகில் போன்ற படைப்பாளிகளிடம் பாரபட்சமற்ற தேடல் இருப்பதை அவதானிக்க முடிந்தது. இந்த மலரில் அருமையான ஆக்கங்களைத் தந்தவர்களின் விருப்பத்தை அறிந்து அவர்களின் மின்னஞ்சல் முகவரியையும் தந்திருந்தால் உறவுப் பாலத்தை இன்னும் வலுப்படுத்த உதவியாக இருந்திருக்கும் என்ற யோசனையை இனிவரும் காலங்களில் நடைமுறைப் படுத்தலாம் என்பதையும் முன்வைக்க விரும்புகின்றேன். குழுநிலை சாராது பாரபட்சமற்ற முறையில் ஒரு சஞ்சிகையால் நடக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கும் ஞானம் நிர்வாகத்தினருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். புலம்பெயர்ந்த மண்ணில் எங்கள் தமிழ் மொழி வளரவேண்டுமானால் சிறுவர் தமிழ் இலக்கியம் சம்பந்தமாக வெளிவந்த ஆவணங்கள் பற்றிய தொகுப்பு ஒன்றையும் 200 வது சிறப்பு மலராக வெளியிட்டால் வெளிநாடுகளில் உள்ள பல தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும், பெற்றோரும் பிள்ளைகளும் இதனால் பலனடைவார்கள் என்பது மட்டுமல்ல எங்கள் தாய்மொழி காலத்தால் அழியாது புலம்பெயர்ந்த மண்ணில் நிலைத்து நிற்கும் என்பதையும் எதிர்பார்க்கின்றோம். ஞானம் சஞ்சிகையால்தான் இப்படியானதொரு சாதனையைச் செய்ய முடியும் எனவும் நம்புகின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.