சென்ற ஞாயிற்றுக்கிழமை 23-12-2012 காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனடா பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல் ஸ்காபரோ, சீவெல் வீதியில் உள்ள தேவாலய மண்டபத்தில் மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், கல்லூரிக் கீதம் ஆகியன இடம் பெற்றன. அவற்றைத் தொடர்ந்து எம்மினத்தின் விடுதலைக்காகத் தம்முயிர் தந்தவர்களுக்காக ஒருநிமிட மௌன அஞ்சலி இடம் பெற்றது. அடுத்து சிறுவர் முதல் பெரியோர் வரை பங்குபற்றிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முன்னாள் நடேஸ்வராக் கல்லூரி ஆசிரியை எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், கல்லூரி ஆரம்பமான காலத்து வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு விரிவாக எடுத்துச் சொன்னார்.
அடுத்து பழைய மாணவர் எழுத்தாளர் குரு அரவிந்தன், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நடேஸ்வராக்கல்லூரி அகப்பட்டிருப்பதால் கல்லூரியின் வரலாற்றைக் கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும், அதற்காக கல்லூரி ஆண்டுமலர் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை முன் வைத்தார். அடுத்த தலைமுறையினர் கல்லூரி வரலாற்றை அறிந்து கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அதற்காகத் தனது முழுமையான ஒத்துழைப்பை தருவதாகவும் தெரிவித்தார்.
அடுத்து முன்னாள் பழைய மாணவரும் பட்டினசபை தலைவருமான திரு. கார்த்திகேசு அவர்கள், நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக சாதனையாளரான அமரர் பிருந்தனைக் கௌரவித்து பாராட்டினார். அடுத்து அமரர் பிருந்தனின் சாதனைக்காக மன்றத்தலைவரால் அவரது குடும்பத்தினருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. பழைய மாணவர் அரசியல் ஆய்வாளர் நடராஜா முரளிதரன், பழைய மாணவியான ஆசிரியர் கோதை அமுதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
ஒன்றுகூடலில் கலந்து கொண்ட சிறுவர்களின் தமிழ்மொழி பற்றிய உரை, பாடல்கள், வீணை, வயலின் இசை, நடனம், திரையிசை நடனம், எழுச்சி நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இரவு விருந்து இடம் பெற்றது. தொடர்ந்து சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கமான போட்டிகள் இடம் பெற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மிகவும் கவனம் எடுத்து நிகழ்ச்சிகளைத் தயாரித்திருந்ததால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
மேலும் சில நிகழ்வுக் காட்சிகள் ...
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.