சங்க அக இலக்கியம் என்பது எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்னும் இவ்வைந்து நூற்களும், பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு, குறுஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை (நெடுநல்வாடையைப் பெரும்பாண்மை கருதி அகத்திலும், சிலர் சான்று கூறி புறத்திலும் கூறுகின்றனர். ஆகையால், அகத்தில் இந்நூலைச் சேர்க்கவில்லை.) ஆகிய இம்மூன்று நூற்களும் ஆகும். இவற்றில் ஆய்வு எல்லை கருதி, எட்டுத்தொகையிலுள்ள அகநூற்கள் ஐந்தில் குறிஞ்சித்திணையிலான அறத்தொடு நிற்றல் துறைகளையுடைய தலா ஒரு பாடலும், பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டும் ஆய்வின் மூலமாக அமைகிறது. மேலும், சங்க அகஇலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களில் குறுகியதொடர்கள் மற்றும் நீண்ட தொடர்கள் மூலமாக முதற், கருப்பொருட்களும் வருணனைகளும் எவ்விதத்தில் இடம்பெறுகின்றன என்பதனைக் குறித்து ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.
ஐங்குறுநூற்றில் வருணனை தொடர்கள்
சங்க இலக்கியங்களிலேயே குறைந்த தொடரைப்(அடியளவைப்) பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறாகும். இந்நூலில் குறைந்த தொடரான (அடியளவான) மூன்று அடிகளில் செய்திகளை விரிவாக விளக்குவதற்கு இடமில்லை. ஆகையால், உள்ளுறையின் மூலமாக ஆசிரியன் தான் புலப்படுத்த நினைத்த செய்தியை முழுமையாக நிறைவு செய்கின்றமையை அறியமுடிகின்றது. தொடர்கள் (அடிகள்) குறையுமிடத்து முதற்பொருளும், கருப்பொருளும் மிகமிகக் குறைந்து வருகின்றன. முதற்பொருளில் நிலம் இடம்பெற்றும் பொழுது இடம்பெறாமலும் அல்லது பொழுது இடம்பெற்றும் நிலம் இடம்பெறாமலும் அமைகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. இதனைப்போன்றே கருப்பொருட்களில் தொல்காப்பியர் சுட்டக்கூடிய அனைத்துக் கருப்பொருட்களும் அல்லது பிற இலக்கணிகள் கூறியுள்ள அனைத்துக் கருப்பொருட்களும் தொடர்கள் (அடிகள்) குறையுமிடத்து இடம்பெறாமல் ஒரு சில கருப்பொருட்கள் மட்டும் காணப்படுகின்றன. தொடர்கள் (அடிகள்) குறைந்து வருவதால் முதற்பொருள், கருப்பொருள் வருணனையில் அடைவிரிப்புகள் பெரும்பாலும் இல்லாமலோ அல்லது குறைந்த அளவிலான அடைகளோ பயன்படுத்தப்பட்டுள்ளமை கீழ்க்காணும் ஐங்குறுநூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றன.
“சாந்த மரத்த பூழில் எழுபுகை
கூட்டுவிரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம்அகல்வு அன்னாய்” 1
அதாவது, சந்தனச் சோலையில் எரிக்கப்பட்ட அகிலின் புகை சந்தன மணத்துடன் கலந்து கமழும் நாடன் என்றது மலைச்சாரலில் களிற்றை வென்று வந்தவன் அதைப் பார்த்து அஞ்சிய எம்மைக் காத்தவன் என்கின்ற உள்ளுறையைக் கையாண்டு குறுகிய தொடரின் மூலமாக ஆசிரியர் செய்தியினை விளக்கியுள்ளமை புலனாகின்றது.
குறிஞ்சி நிலத்தை குறிஞ்சி, மலை, பொருப்பு, வரை என்றும், குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுதாக கூதிர், முன்பனி, பனி எதிர் பருவம் (முன்பனி) எனவும், சிறுபொழுதாக யாமம், மலை இருள் என்று க.சுந்தரபாண்டியனின் ‘தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பொருளிலக்கண நூற்கள் குறிப்பிடுகின்றன.
குறுகிய தொடராக ஐங்குறுநூற்றுப்பாடல் விளங்குவதால் இலக்கண நூற்கள் குறிப்பிடுகின்ற குறிஞ்சிக்குரிய முதற்பொருளான நிலமும் பொழுதும் இடம்பெறவில்லை. கருப்பெருளில் - மரத்தில் சந்தனமரமும் அகில் மரமும் மக்கள் பெயரில் தலைவன் - நாடன், அறவன் என்றும் செவிலி - அன்னாய் என்றும் பிற கருப்பொருள் வகைகள் இடம்பெறவில்லை என்பனையும் அறியமுடிகின்றது. தொடர்கள் குறைந்து காணப்படுவதால் தலைவன் வருணனை மட்டும் இரண்டு அடிகளில் இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகின்றது.
குறுந்தொகையில் வருணனை தொடர்கள்
எட்டுத்தொகையிலுள்ள அகநூட்களில் தொடர்கள் (அடிகள்) சற்றுக்கூடும்போது முதற், கருப்பொருள்களும் வருணனைகளும் அதிகரிக்கின்றன. இதனை,
“அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரில் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான்தீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவது அன்றே,
தேக்கொக்கு அருந்தும் முள்எயிற்றுத் துவர்வாய்
வரைஆடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே” 2
என்னும் இக்குறுந்தொகைப்பாடல் விளக்குகின்றது. ஐங்குறுநூற்றுப் பாடலை விட, இப்பாடலில் தொடர்கள் அதிகமாக இடம்பெற்றிருப்பதால் குறிஞ்சி நிலமானது வரை என்னும் பெயரில் இரண்டு அடிகளில் வருணனை பெற்றமைகின்றன. ஆனால், பொழுது இடம்பெறவில்லை. விலங்கில் குறங்குக்குட்டி (பறழ்), ஆண் குரங்கு இவ்விரண்டும் இரண்டு அடிகளில் வருணனையுடன் காணப்படுகின்றன. வேங்கை மரமும் இரண்டடிகளில் வருணனை பெற்றுக் காணப்படுகின்றன. மாமரம் ஒரு அடியில் வருணிக்கப்பெற்றுள்ளது. வேங்கைப் பூ ஒரு அடியில் வருணனையுடன் அமைந்துள்ளது. ஆண் மயிலானது மூன்றடிகளில் வருணனை பெற்றமைந்துள்ளன. தலைவன் - நாடன் என்ற பெயரில் மூன்றடிகளில் வருணிக்கப்பெற்றுள்ளதனை அறியமுடிகின்றன. பூக்கொய்யும் மகளிர் மயிலுக்கு உவமை கூறுவதன்பொருட்டு இம்மகளிர் வருணனையும் மூன்றடிகளில் இடம்பெறுகின்றன. குறிசொல்லும் கட்டுவிச்சி எட்டு அடிகளில் கூற்று நிகழ்த்துவதாகக் காணப்படுகின்றதே தவிர, கட்டுவிச்சி குறித்த வருணனை இடம்பெறவில்லை. ஆதலால், தொடர்கள் அதிகரிக்கும்போது நிலம், விலங்கு, மரம், பறவை, பூ, மக்கள் என்பதாக முதற் கருப்பெருட்களின் எண்ணிக்கையும் வருணனையில் அடியும் நீண்டு செல்கின்ற பாங்கினைக் காணமுடிகின்றன. எட்டு அடிகளைக் கொண்டிருப்பதால் ஆசிரியர் கூற நினைக்கும் அனைத்துக்கருத்துகளையும் எடுத்துரைக்க முடியாது. அதனால் இப்பாடலிலும் உள்ளுறையானது இடம்பெற்றுள்ளது. அவை, மயில்கள் மலரைக்கொய்து மரத்தின் அழகைக் கெடுப்பது போலத் தோன்றினாலும் அம்மரத்திற்கு அக்காட்சி அழகு தருவதாகவே உள்ளது. அதுபோலத் தலைமகன் இப்பொழுது இவள் நலனழியச் செய்வான் போலக் காணப்படினும் இவளை மணந்து இவளுடைய நலத்தை வளரச் செய்வான் என்பதாகும்.
நற்றிணையில் வருணனைத் தொடர்கள்
எட்டு அடிகளில் காணப்படுகின்ற வருணனையைவிட, பதினோரு அடிகளில் காணப்படுகின்ற நற்றிணை 34 – ஆவது பாடலில் முதற்பொருளில் நிலம், பொழுது வருணனைகள் காணப்படுகின்றன. கருப்பொருளில் தெய்வம், மரம், பூ, மக்கள், அருவி, சுனை ஆகிய வருணனையும் அதிகமான தொடர்களில் இடம்பெற்றமைந்துள்ளன. இத்தன்மையினை,
“கடவுள் கல்சுனை அடைஇறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடு நாடன்
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே.” 3
என்னும் தொடர்களின் வழியாக அறியமுடிகின்றன. தொடர்கள் அதிகரிக்கும்போது முதற்பொருளில் நிலமானது கல், பெருவரை, அடுக்கம் என்னும் மூன்று பெயர்களில் ஐந்து அடிகளில் வருணனை செய்யப்பட்டுள்ளன. பொழுதில் கார்காலம் ஒரு அடியில் வருணனை பெற்றமைந்துள்ளது. கருப்பொருளில் முருகன் கடவுள், முருகு என்னும் பெயர்களில் நான்கு அடிகளில் கருத்துக்கள் அமைந்துள்ளன. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகக் குறிப்பிடப்படும் சூரரமகளிர் இரண்டடிகளில் வருணிக்கப்பட்டுள்ளாள். கடம்பமரம் ஒரு அடியில் வருணனை பெற்றுக் காணப்டுகின்றது. குவளை, காந்தள், கடம்பமலர் என்னும் மூன்று பூக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்கள் அதிகரிக்க தலைவனைக் குறித்த வருணனையானது ஐந்து அடிகளில் அமைவுறுகின்றன. வேடமேற்று வெறியாடுபவனாகிய வேலன் இரண்டடிகளில் வருணிக்கப்பெற்றுள்ளான். சுனை வருணனையானது மூன்றடிகளில் காணப்படுகின்றன. அருவியானது ஒரு அடியில் வருணனை பெற்றமைந்துள்ளது. மனை (வீடு) குறித்த செய்தியும் ஒரு அடியில் அமைந்துள்ளது.
அகநானூற்றில் வருணனைத் தொடர்கள்
அகநானூறு 82ஆவது பாடலில் பதினெட்டு அடிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதற் பொருளான நிலம் மலைப்பூஞ்சாரல், அடுக்கம் என்றும், பொழுது - கங்குல் (இரவு) என்றும் இடம்பெற்றமைந்துள்ளது. கருப்பொருளில் உணவு – தினை, விலங்கு – மந்தி (குரங்கு), கணக்கலை (மான்), யானை, பறவை – வண்டு, மயில், யாழ், பறை – குழல், முழவு, பெருவங்கிய் (தூம்பு), புற்கள் – அமை, கழை (மூங்கில்), அருவி, மக்கள், கருவி – வில், அம்பு ஆகியவை பற்றிய வருணனைக் கூறுகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதனை,
“ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆகப்
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்இசைத்
தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரற் தூம்பொடு,
மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக,
இன்பல் இமிழ்இசை கேட்டுக் கலிசிறந்து,
மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலிஆ டும்மயில்
நனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன்
உருவ வல்வில் பற்றி, அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி வினாஅய்,
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி தோழி அவருள்,
ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே?” 4
என்னும் தொடர்கள் விளக்குகின்றன.
கலித்தொகையில் வருணனைத் தொடர்கள்
குறிஞ்சிக்கலியில் 3ஆவது பாடல் 51 அடிகளைப்பெற்றுக் காணப் படுகின்றது. தொடர்கள் நீண்டு காணப்படுவதால் முதல்பொருளில் நிலமானது காடு, வரை, சிலம்பு, மலை என்பதாகப் பல பெயர்களில் வருணனை பெற்றிருக்கின்றன. பொழுதானது நல்நாள், ஒருபகல், செறிகுறி என்று காணப்படுகின்றது. கருப்பொருளில் தெய்வம், புற்கள் வகையில் - தினை (ஏனல்), மூங்கில் (அமை,வேய்), பூவில் தாமரை, காந்தள், வேங்கை, நெய்தல் சுரபுன்னை போன்ற மலர்களும், மக்கள், நீர், கருவி ஆகியவையும் வருணனையுடன் அமைந்துள்ளன.
குறிஞ்சிப்பாட்டில் வருணனைத் தொடர்கள்
பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாட்டில் தொடர்கள் (அடிகள்.261) நீண்டிருப்பதால் தொல்காப்பியர் சுட்டக்கூடிய அனைத்து முதற், கருப்பொருள்களும் முடிமுதல் அடிவரையிலான வருணனைகளும் காணப்படுகின்றன.
முதற்பொருளில் நிலவருணனையானது குன்று என்னும் பெயரில் 13 (187-198) அடிகளில் வருணிக்கப்பெற்றுள்ளன. தலைவன் வருணனையில் இதே 13 அடிகளில் இடம்பெற்றுள்ளன. அவை,
“பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழுமுதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தெனப்
புள்எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்துஉகு நறும்பழம் விளைந்த தேறல்
நீர்செத்து அயின்ற தோகை வியலூர்ச்
சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறுஊர் பாணியின் தளரும் சாரல்
வரைஅர மகளிரின் சாஅய் விழைதக
விண்பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண்கமழ் அலரி தாஅய் நன்பல
வம்புவிரி களத்தின் கவின்பெறப் பொலிந்த
குன்றுகெழு நாடன்” 5
நிலமானது குழுமலை விடரகம் என்னும் பெயரில் 10 (252-261) அடிகளில் வருணனை செய்யப்பெற்றுள்ளன. அவை,
“அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும்
புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும், சூரும், இரைதேர் அரவமும்,
ஒடுங்குஇருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடுத்தாள் முதலையும் இடங்கரும், கராமும்
நூழிலும், இழுக்கும், ஊழ்அடி முட்டமும்
பழுவும், பாந்தளும் உளப்படப் பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழுமலை விடரகம்” 6
தொடர்கள் அதிக அளவில் இடம்பெறுகின்றபோது மாலை வருணனையானது 16 (215-230) அடிகளில் இடம்பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. இதனை,
“எல்லை செல்ல ஏழ்ஊர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கல்சேர்பு மறைய
மான்கணம் மரமுதல் தெவிட்ட ஆன்கணம்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்குஇரும் பெண்ணை அகமடல் அகவப்
பாம்புமணி உமிழப் பல்வயின் கோவலர்
ஆம்பல்அம் தீம்குழல் தெள்விளி பயிற்ற
ஆம்பல் ஆய்இதழ் கூம்புவிட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயரக் கானவர்
விண்தோய் பணவைமிசைஞெகிழி பொத்த,
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல்சமம் கடுப்பத்
துனைஇய மாலை” 7
என்னும் தொடர்கள் விளக்குகின்றன.
தொடர்கள் குறைந்திருக்கும் பாடல்களில் ஒரு சொல் அல்லது வாக்கியங்களில் அல்லது ஒன்றிரண்டு அடிகளில் வருணனைகள் முடிந்துவிடுகின்றன. ஆனால், தொடர்கள் அதிகமாகக் காணப்படும் நிலையில் தலைவன் பற்றிய வருணனைகளும் தெடர்ச்சியான முடி முதல் அடி வரையிலான வருணனைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை,
“எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல்உளர்ப்பு அவிழா
காழகில் அம்புகை கொளீஇ யாழிசை
அணிமிகு வரிமிஞிறு ஆர்ப்பத் தேங்கலந்து
மணிநிறம் கொண்ட மாஇருங் குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர்ஆய்பு விரைஇய
தண்ணறுந் தொடையல் வெண்போழ்க் கண்ணி
நலம்பெறு சென்னி நாம்உற மிலைச்சி,
பைங்கால் பித்திகத்து ஆய்இதழ் அலரி
அம்தொடை ஒருகாழ் வளைஇச் செந்தீ
ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ
அம்தளிர்க் குவவுமொய்ம்பு அலைப்பச் சாந்தருத்தி
மைந்துஇறை கொண்ட மலர்ந்துஏந்து அகலத்து
தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலிய
செம்பொறிக்கு ஏற்ற வீங்குஇறைத் தடக்கையின்
வண்ண வரிவில் ஏந்தி அம்புதெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்குஅறக் கட்டி
இயல்அணிப் பொலிந்த ஈகை வான்கழல்
துயல்வருந் தோறும் திருந்தடிக் கலாவ, ” 8
என்று தலைவனின் தலைமுடி முதல் காலடி வரை 21 (107-127) அடிகளில் வருணிக்கப்பெற்றுள்ளன.
குறைந்த தொடர்களையுடைய சங்க அகநூல்களில் முதற், கருப்பொருள்கள் குறைந்தும் முதற்பொருளில் நிலம், பொழுது இல்லாமலும் கருப்பொருளில் சில மட்டும் இடம்பெறுகின்றதனை அறியமுடிகின்றது. எட்டுத்தொகை அகநூல்களுக்கிடையே தொடர்கள் சற்றுக் கூடுகின்றபோது முதற், கருப்பொருட்களும் கூடுகின்றன. ஆனால், பத்துப்பாட்டில் இடம்பெற்றிருக்கின்ற குறிஞ்சிப்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்குகையில் தொடர்கள் அதிக அளவில் இருக்கும்போது வருணனையில் மிக நீண்டு காணப்படுகின்றன. ஐங்குறுநூற்றில் 2 அடிகளில் இடம்பெற்றுள்ள தலைவன் வருணனையானது, குறுந்தொகையில் 3 அடிகளிலும், நற்றிணையில் 5 அடிகளிலும், அகநானூற்றில் 14 அடிகளிலும், கலித்தொகையில் மொத்தம் 14 அடிகளிலும் காணப்படுகின்றன. நீண்ட தொடர்களைக் கொண்ட குறிஞ்சிப்பாட்டில் தலைவனின் முடிமுதல் அடிவரையிலான வருணனை மட்டும் 21 அடிகளிலும், பிறதொரு இடத்தில் தலைவனைக் குறித்து 13 (187-198) அடிகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. பொழுது வருணனையில் எட்டுத்தொகை நூற்களைவிட குறிஞ்சிப்பாட்டில் மிக நீண்ட வருணையாக மாலை வருணனை இடம்பெற்றுள்ளமை அறியப்படுகின்றது. இதன்மூலம் சங்க அக இலக்கியங்களில் தொடரானது வருணனையில் மிக இன்றியமையாத கூறாக இடம்பெறுகின்றதனை இக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.
குறிப்புக்கள்:
ஐங். குறி.212:1-3
குறு.குறி.26:1-8
நற்.34:1-11
அக.குறி.82:1-18
குறி.பாட்டு.187-199
குறி.பாட்டு.252-261
குறி.பாட்டு 215-230
குறி.பாட்டு.107-127
துணைநூற்பட்டியல்:
1. சுதர்சன்.மு, குறிஞ்சிப்பாட்டு மீள் பார்வைகள், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001, முதற்பதிப்பு: அக்டோபர், 2006.
2. சோமசுந்தரனார், பொ.வே. ஐங்குறுநூறு மூலமும் உரையும், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், 1/140, பிரகாசம் சாலை, சென்னை -1, முதற்பதிப்பு: 1972.
3. தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு – இலக்கியக் கொள்கைகள், மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 001, திருத்திய பதிப்பு: திசம்பர், 2003.
4. துரைசாமிப்பிள்ளை, ஓளைவை.சு.ஐங்குறுநூறு மூலமும் உரையும், முதல்தொகுதி: மருதம் & நெய்தல்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு: 1957.
5. துரைசாமிப்பிள்ளை, ஓளைவை.சு.ஐங்குறுநூறு மூலமும் உரையும், இரண்டாவது தொகுதி: குறிஞ்சி & பாலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு: 1957.
6. துரைசாமிப்பிள்ளை, ஓளைவை.சு.ஐங்குறுநூறு மூலமும் உரையும், மூன்றாவது தொகுதி: முல்லை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு: 1958.
7. பதிப்பு ஆசிரியர் குழுவினர், பாட்டும் தொகையும், நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லமிடெட், சென்னை – 600 098, இரண்டாம் பதிப்பு:1981.
8. மாணிக்கணார், அ. ஐங்குறுநூறு மூலமும் உரையும், முதல் பகுதி, இரண்டாம் பகுதி, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்ப்ளெக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை – 600 017, மறுபதிப்பு:2001.
9. மாணிக்கனார்.அ.(உ.ஆ) கலித்தொகை – மூலமும் உரையும், பாகம்-1, 2, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர், காம்பௌக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17, முதற்பதிப்பு:1999.
10. மாணிக்கனார்.அ.(உ.ஆ) அகநானூறு – மூலமும் உரையும், பாகம்-1, 2, 3 வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர், காம்பௌக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17, முதற்பதிப்பு:2000.
11. மாணிக்கனார்.அ.(உ.ஆ) சங்க இலக்கியம் பத்துப்பாட்டு – மூலமும் உரையும், பாகம்-1, 2, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர், காம்பௌக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17, முதற்பதிப்பு:2000.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் : -முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –