முனைவர்.சி.சங்கீதாமுன்னுரை
பெண்களுக்கெனக் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் சமூகம் காலம் காலமாகத் திணித்துக் கொண்டே வருகின்றன்றது. தாய்வழிச் சமூகமாக இருந்த நிலை மாறி குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துத் பெண்களைப் பின்னுக்குத் தள்ளித் தந்தை வழிச் சமூகமாக மாற்றியமைத்தனர். குறிப்பாகத் தன் விருப்பத்தைச் சொல்லக் கூட உரிமையில்லாத நிலையைத் தொல்காப்பியர் காலத்திலிருந்தே காணலாம். இந்த மரபு முழுதும் கட்டுடைக்கப்பட்டது பக்தி இலக்கியக் காலத்தில் தான். ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியில் உள்ள பாசுரங்களில் காணலாகும் தன்னுறு வேட்கையை எடுத்துரைத்துத் தொல்காப்பிய மரபு கட்டுடைவதை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியமும் பெண்களும்
தொல்காப்பியர் சித்தரிக்கும் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களைக் கொண்டு வாழ்வதைக் காணலாம். இதனைத் தொல்காப்பியர்

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப. (தொல்காப்பியம். களவு. 8)

இந்நூற்பாவை அடியொற்றி இன்றும் இதைப் பெண்களிடம் வலியுறுத்துவதையும் சமூகத்தில் காணலாம். அடிப்படையில் மென்மையானவள் என்பதால் எதிர்த்துப் பேசுகிற குரலாக நற்றாயோ செவிலித்தாயோ தோழியோ தலைவியோ படைக்கப்படவில்லை. தலைவனின் அன்பிற்குக் காத்திருக்கிற, தனிமைத்துயரில் புலம்புகிற, வரைவிற்கு ஏங்குகிறத் தலைவியைத் தான் தொல்காப்பியர் காட்டுகிறார். அதேபோல, தொல்காப்பியர் காலத்தில் பெண்கள் தங்கள் விருப்பத்தைக் கூறுகிற மரபு இல்லை என்பதை,

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலை கிழத்திக்கு இல்லை.
(தொல்காப்பியம். களவு. 8)

என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார். தன் விருப்பத்தை நினைக்கக் கூடத் தகுதியற்ற சூழல் நிலவியிருப்பதை அறியமுடிகிறது. ஆனால் ஆணுக்கான பிரிவுகளைக் பற்றிக் கூறும் போது பரத்தையற் பிரிவைக் கூறியிருப்பது ஆணுக்கான சுதந்திரமாகவும் கடமையாகவும் உரிமையாகவும் மரபாகவும் அமைத்திருக்கிற பாங்கை நுண்ணிதின் அறிய முடிகிறது.

கற்பு என்பது பெண்களுக்கு உயிரினினும் மேலானது என்று வகுத்தவர் அதில் ஒரு சதவிகிதம் ஆணுக்கும் உண்டு என்று ஏன் உரைக்கவில்லை என்பதும் அன்றைய காலத்தில் கடல்கடந்து செல்லும் வழக்கம் பெண்களுக்கு இல்லை என்று கூறியதன் காரணமும் சிந்திப்பிற்குரியது.

தொல்காப்பியக் கட்டுடைப்பும் ஆண்டாளும்
தொல்காப்பியர் கூறிய விருப்பக் கட்டுப்பாடுடைப்பு என்பது முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் (குறுந்தொகை 28.) என்ற சங்கப் பாடலின் வழியாக ஒளவையார் என்ற பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தாலும் பாடலில் இடம்பெறும் தலைவி தோழியிடமே தன் ஆற்றாமையை உரைக்கிறாள். எனவே, பெண் தொல்காப்பியச் சிந்தனை மரபிற்குட்பட்டவளாகவே இருப்பதை அறியமுடிகிறது. இச்சங்க காலத்திற்குப் பின் பல்லவர் காலத்தில் தான் பெண்களின் குரல் மேலெழும்புவதைக் காணலாம். சைவத்தில் காரைக்கால் அம்மையார் சிவபெருமானைச் சரணடைதல் ஒரு புறம் மற்றொரு புறம் ஆண்டாள் அரங்கனை அடைதல். இப்படி இந்த இரண்டு பெண்கள் பக்தி இயக்கக் காலத்தில் பெரும்புரட்சியைச் செய்தவர்கள் எனலாம்.

ஆண்டாள் அறிமுகம்
திருவில்லிபுத்தூரில், பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் என்ற பெருமாளுக்குப் அனுதினமும் நந்தவனத்திலிருந்து மலர்கள் பறித்துத் தொடுத்து மாலையாக்கித் இறைவனுக்குச் சூட்டி வழிபட்டு வந்தார். ஒருநாள் நந்தவனத்திலிருந்த துளசிமாடத்தின் அருகே ஆண்டாளைக் கண்டெடுத்துக் கோதை எனப் பெயர் சூட்டிக் கண்ணனைப் பற்றிய கதைகளையும் பெருமைகளையும் சொல்லி வளர்த்து வந்தார். கோதை பருவமெய்தியபின், தினமும் மாலை தொடுத்து அதனை முதலில் தான் சூடி அழகு பார்த்துவிட்டு பெரியாழ்வாரின் ஒப்படைப்பாள். இதைப் பெரியாழ்வார் இறைவனுக்குச் சூட்டுவார். ஒருநாள் கோதை தொடுத்த மாலையில் முடி இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.

கோதை தொடுத்த மாலையைச் சூடி மகிழ்வதைப் பார்த்த, பெரியாழ்வார் கோதையைக் கண்டித்து வேறு ஒரு மாலையைத் தொடுத்துத் தரும்படிச் சொல்லி, பின் அம்மாலையை பெருமாளுக்குச் சூட்டினார். அன்றிரவே பெரியாழ்வா கனவில் இறைவன் தோன்றி உம் மகள் சூடிய மாலையையே விரும்புகிறேன் இனி அம்மாலையையே சூட்டுக என்று சொல்லிப் பின், திருவரங்கத்திற்குக் கோதையை மணமுடிக்க அழைத்து வாருங்கள் என்று கூறினார். அதன் பிறகு பெரியாழ்வார் திருவரங்கத்திற்கு ஆண்டாளை அழைத்துச் சென்ற போது, திருவரங்கப் பெருமானின் கருவறைக்குள் திருவரங்கப் பெருமானோடு இரண்டரக் கலந்துவிட்டார்.

எனவே, ஆண்டவனையே ஆட்கொண்டதால் ஆண்டாள் என்றும் சூடிக் கொடுத்த சுடர் கொடி என்றும் அழைக்கின்றார். மேலும், கிருஷ்ணனைப் பற்றியும் பெருமாளைப் பற்றியும் கதைகள் கேட்டுக் கேட்டு அரங்கன் மீது தீராக் காதல் கொண்டாள். அதனுடைய வெளிப்பாடு தான் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகும்.

திருப்பாவையிலும் ஆண்டாள் தன்வயதொத்த தோழியர்களைத் துயிலெழுப்பி இறைவனை வழிபட அழைக்கிறாள். தலைவி தோழியிடம் உரைப்பதாக சங்கப்பாடல்களில் உள்ளதைப்போல இங்கு ஆண்டாள், தன் தோழியரோடு நப்பின்னையின் மார்பில் துயில் கொள்ளும் கண்ணனை எழுப்புகிறாள். கண்ணன் துயில் எழாததால், நப்பின்னையையும் துயில் எழுப்புகின்றனர். குறிஞ்சியின் உரிப்பொருளான புணர்ச்சியின் காரணமாக இருவரும் துயில் எழவில்லை. கண்ணணின் அருள் கிடைக்கப்பெறவில்லை என்று தன்னுணர்ச்சி மேலீட்டை ஆண்டாள் விளிப்பதை,

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
……………………………………….
தத்துவ மன்று தகவேலோர் எம்பாவாய்
(திருப்பாவை. 19)

இங்கு, ஆண்டாள், தன் குரலைத் தோழியர் குரலாகப் பதிவு செய்திருந்தாலும் தோழிகள் கண்ணனிடம் கூற்று நிகழ்த்துவதாகவே அமைகின்றது.

அடுத்து தலைவன் தலைவியின் புணர்ச்சி நிலையைப் பெண் எடுத்துரைத்தல் என்பதும் புலப்படுகிறது. இது ஒரு வகையில் புலம்பலாக இருந்தாலும் தலைவனிடம் தன் விருப்பத்தைக் கேட்பதாக அமைந்திருக்கின்றது.

அடுத்து, கண்ணன் துயில் எழாத காரணத்தால், கண்ணனின் வீரத்தையும், போர்த்திறத்தையும் கூறுகின்றார்கள். எனினும் அழகிய மார்பினையும் செக்கச் சிவந்த வாயினையும் நுண் இடையினையும் உடைய நப்பிண்னையே முதலில் நீ விழித்துக் கொண்டு, பாவை நோன்பிற்குத் தேவையான கண்ணாடியையும் விசிறியையும் கொடுத்து அனுப்பி அருளவேண்டுகிறோம் என்று கேட்கின்றார்கள். கண்ணனை மார்கழி நீராட எழுப்பி அருள் புரிவாயாக என்று கேட்கின்றனர்.

கண்ணனுடைய வீரத்தைப் பற்றிப் புகழ்ந்தும் அவன் துயில் எழவில்லை. காரணம் நப்பின்னையின் மார்பில் துயில் கொண்டிருக்கிறான். அதோடு, கண்ணனின் பேரன்பிற்கு உரிய நப்பின்னையை எழுப்பி அவளையே கண்ணனை அனுப்பி வைக்கச் சொல்லுதல் என்பதே மிகப்பெரிய கட்டுடைப்பாகும். தன்னோடடு நீராட அழைத்தல் என்பதும் அசாத்தியமான செயலாகும். இதனை,

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
…………………………………..
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
(திருப்பாவை. 20)

என்ற பாடலில் விளக்குகிறாள் ஆண்டாள்.

நாச்சியார் திருமொழியில்,

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே

(நாச்சியார் திருமொழி. 64.)

என்ற பாடலில் ஆண்டாள், கடலில் பிறந்த வெண்சங்கிடம் கண்ணனின் திருப்பளவாயின் சுவை எப்படியிருக்கும் என்பதை வினவுகிறாள். கற்பூரத்தின் வாசனையை ஒத்ததா அல்லது தாமரை மலரின் வாசனையை ஒத்ததா என்றும் கண்ணனுடைய செவ்வாயின் சுவை இனிப்பாக இருக்குமா என்று என்று விருப்புற்றுக் கேட்கின்றேன் என்று விளிக்கிறாள்.

இங்கு வெளிப்படையாக தன்விருப்பத்தைச் சங்கிடம் கேட்பதன் காரணம் தலைவன் இங்கு சூட்சமமாக இருக்கிறார். கண்ணனைக் கண்டிருந்தால் ஆண்டாள் இன்னும் தெளிவாகவே கேட்டிருப்பாள் என்பது திண்ணம். இதழின் வாசனை பற்றியும் இதழின் சுவை பற்றியும் அறிய முற்படும் ஆண்டாள் மரபிலிருந்து உடைபட்டுக் காணப்படுவதை அறிய முடிகிறது. வெண்சங்கிடம் கேட்டு இதழ்முத்தத்தைப் பெறவும் விரும்பிருக்கிறாள் என்றே எண்ண முடிகிறது. இங்கே தலைவன் இல்லையென்றாலும் தன் விருப்பத்தை அக்காலச் சூழலில் எடுத்துரைத்திருப்பது என்பது பெண்ணுக்கான உரிமையாகக் காணலாம். மேலும்,

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி,
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே
(நாச்சியார் திருமொழி. 5.)

என்ற பாடலில், வானுலகில் வாழும் தேவர்களுக்கு செய்யப்படும் யாகத்தில் இடப்பட்ட பொருள்களை காட்டில் வாழும் நரி அதை நுகர்வதும் உண்பதும் தகாதசெயல் ஆகும். அதைப்போல, என் உடம்பும் சங்கும் சக்கரமும் கொண்ட கண்ணுக்குத் தான். தனது பருத்த மார்பகங்கள் சாதாரண மானிடவருக்கென்று பேச்சு எழுந்தால் கூட இறந்துவிடுவேன் என்கிறாள். இதனை நோக்கும் போது, ஆண்டாள் தன் உடல், உயிர் அனைத்தையும் கண்ணனுக்கே சமர்ப்பிக்கிறாள். இது விருப்பத்தினுடைய உச்சம். அதனால் தான் என்னவோ பெரியாழ்வார் ஆண்டாளின் விருப்பத்தை ஏற்றுத் திருமணம் முடிக்கத் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம்.

தொல்காப்பியத்தில் தலைவன் தலைவி உடன்போக்கு பற்றி எடுத்துரைத்திருப்பார். . ஆனால் எந்தத் தலைவியும் தன் தந்தையோடு தலைவன் இல்லத்திற்குச் சென்று மணமுடித்ததாக இல்லை. காரணம் இங்கு தலைவன் இறைவன். இருப்பினும் அந்த அகமரபு என்பது மாறியிருப்பதைக் காணலாம். மேலும் கண்ணனை சிறுவயது முதல் கணவனாக அடைய வேண்டுமென்ற விருப்பத்தால் தன்விருப்பத்தைப் பாடலில் புலப்படுத்தியுள்ளார். தலைவன் இறைவனாக இருந்தாலும் தன் விருப்பத்தை, உணர்வை வெளிப்படுத்துகிறது. ஆண்டாளுக்கு உண்மையில் தலைவன் உயிர்மெய்யாக இருந்திருந்தால் அவள் தன் காதலை நேரடியாக எடுத்துரைத்திருப்பாள் என்பதில் ஐயமில்லை.

அதே போல, தலைவன் இல்லையேல் வாழமாட்டேன், மரணத்தைத் தழுவுவேன் என்பதும் மடலேறல் என்ற முறையை மீறுபவையாக இருப்பதைக் காணமுடிகிறது. ஆண்டாள் தன் பாடல்களில், தான் கொண்ட காதலை, அன்பை, விருப்பத்தை கண்ணனிடம் சொல்லியிருப்பதால் தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் கிளத்திக்கு இல்லை என்ற மரபு உடைந்து உண்டு என்பதற்கு வழிவகுக்கிறது.

முடிவுரை
தொல்காப்பியம் இலக்கண மரபு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் சில மரபுகளை கட்டமைத்திருந்தது. ஆனால் அதன் பின் ஒருசில சங்கப்பாடல்கள் பெண்களின் விருப்பத்தை எடுத்துரைப்பதாக காணப்படுகிறது. பக்தி இயக்கக் காலத்தில் ஆண்டாள் தன் காதலை, காமத்தைக் கண்ணனிடம் எடுத்துச் சொல்லும் பாவையாய் தொல்காப்பிய மரபையுடைத்து வெளிவரும் புரட்சிப்பாவையாய் திகழ்வதைக் காணமுடிகிறது. தனக்கான காதலைத் தேர்ந்தெடுத்தல், காதலைச் சொல்லுதல், பின் திருமணம் நிகழ்த்தல் என்ற எல்லா காரியங்களிலும் அவளுடைய விருப்பம் மட்டுமே இருந்திருப்பதைக் காணமுடிகிறது. எனவே தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் கிழத்திக்கும் உண்டு என்பதை இக்கட்டுரையின் வழியாக அறிய முடிகிறது.

துணைநூற்பட்டியல்

தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை - 600 018 . ஒன்பதாம் பதிப்பு 2000
சி.பாலசுப்பிரமணியம், திருப்பாவை, பாரி நிலையம், 184, பிரகாசம் சாலை, சென்னை-600 018, முதல் பதிப்பு 1995.
சி.டி.சங்கர நாராயணன், நாச்சியார் திருமொழி,184, பிரகாசம் சாலை, சென்னை-600 018.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - முனைவர் சி.சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில், விருதுநகர் மாவட்டம் -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R