தமிழ் இலக்கிய உலகில் வருணனையானது முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இவ்வருணனையானது ஒரு இலக்கியம் வளர்ச்சியடைவதற்கும் அது சிறப்படைவதற்கும் உறுதுணையாக அமைகின்றது. இலக்கியத்தில் வருணனை அமையவில்லையென்றால் அவ்விலக்கியம் சுவையுடையதாக அமையாது. படிக்கும் வாசகர் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டுவிடும். ஆசிரியர், மாணவர்களுக்கு அல்லது வாசகர்களுக்கு மற்றும் அறிவுத்தளத்தில் உள்ளவர்களுக்குத் தான் கூறநினைக்கும் கருத்தினை வருணனையைப் பயன்படுத்தி எடுத்துரைத்தால் வாசகர்கள் மனதில் எளிமையாகப் பதிந்துவிடும். இவ்வாறு, வருணனையைப் பயன்படுத்தி கருத்தினை எடுத்துரைக்கின்றபோது, மரபு மாறாமல் எடுத்துரைக்கவேண்டும். மரபானது இலக்கியத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் முக்கியமானதாகும். மரபுயில்லையேல் மனிதன் இல்லை. மனிதன் இல்லையேல் இலக்கியம் இல்லை. ஆகையால், இவ்வாறு முக்கிய இடத்தை வகிக்கின்ற வருணனை மற்றும் மரபு பற்றிய விரிவான விளக்கங்கள் குறித்து இக்கட்டுரை ஆராய்வதாக அமைகின்றது.
வருணனை - அகராதி தரும் விளக்கம்
‘வர்ணனை’ என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ‘நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பேச்சு அல்லது எழுத்து; description; Commentary’1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வருணனை
வருணனை மனிதர்களையோ அல்லது மிருகங்களையோ அல்லது இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்களையோ விரிவாக நீட்டி அழகுணர்வுடன் அழகுபடுத்தி விவரிப்பதனை மட்டும் தன்னகத்துள் கொண்டதல்ல. வருணனை என்பது அழகுபடக் கூறுவதுதான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பெயர்களுக்குப் பெயரடையாகவும், இவ்வுலகிலுள்ள உயிர்கள் செய்கின்ற வினைகளுக்கு வினையடையாகவும் வருணனை இடம்பெறுவதுண்டு. மேலும், இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்களுக்கு முன்னடையாகவோ அல்லது பின்னடையாகவோ இடம்பெறுவதும் வருணனையாகும்.
வர்ணனை அமையவேண்டிய விதம்
வருணனை அமையவேண்டிய விதம் குறித்து எஸ்.வையாபுரிப்பிள்ளை இலக்கியச்சிந்தனைகள் நூற்களஞ்சியம்: தொகுதி-1 இல் குறிப்பிடுகையில், “யாதேனும் ஒரு பொருளை, அதன் பலதிறப்பட்ட இயல்புகளையும் அறிவு எளிதிற்பற்றுமாறு, அழகும் சுவையும்பட விவரித்துக் கூறுவதுதான் வர்ணனை, வர்ணம் என்றால் நிறம் அல்லவா? இதிலிருந்து விவரிக்கப்படும் பொருள் அழகுற்றுச் சோபிக்கும்படி வர்ணனை அமைதல்வேண்டும்”2 என்கிறார்.
வருணனையின் இன்றியமையாமை
இலக்கியத்தில் வருணனையானது முக்கிய உறுப்பாகச் செயல்படுகின்றது. இவ்வருணனையின் முக்கியத்துவத்தினை விளக்குகையில், “வருணனைகள் இலக்கியங்களுக்குச் சிறப்புச் செய்கின்றன. அந்த வகையில் இலக்கியத்தின் சுவைக்கு ஊன்றுகோலாக அமைவது வருணனையாகும். வருணனை இல்லாத இலக்கியமானது சுவையற்ற உணவினைப் போன்றதாகும்”.3 என்று வருணனையின் இன்றியமையாமை குறித்து க.சிதம்பரம் எடுத்துரைத்துள்ளார்.
வருணனை உத்தி
வருணனை உத்தி குறித்து செ.வை. சண்முகம் தமது எழுத்திலக்கணக்கோட்பாட்டில், “மொழி அமைப்பில் வேறுபாட்டை விளக்குவதற்காக ஒருவிதப் பாகுபாட்டை அமைத்து, அந்தப் பாகுபாட்டை வருணிப்பதற்காக மற்றொரு பாகுபாட்டைச் செய்தலே வருணனை உத்தி என்று குறிப்பிடுகிறார்.”4 மேலும், வருணனை உத்தி என்பது ஒன்றைச் சிறப்பித்துக் கூறுவதற்கும் இழிவுபடுத்தி இயம்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது, இவ்வருணனை உத்திக்குப் பொருத்தமாக உவமைகளும், உருவகங்களும் கையாளப்படுகின்றன.
கற்பனையின் பயன்பாடு
கற்பனையானது இலக்கியத்திற்கும் இலக்கியம் படைக்கின்றவர்களும் உறுதுணை புரிகின்றது. இக்கற்பனையின் பயன்பாட்டினைத் தமிழ் இலக்கியக் கொள்கைகள் நூலானது, “புலவனுக்கு மிக இன்றியமையாது வேண்டப்படுவது கற்பனையாகும். ‘போலச் செய்தலே’ படைப்புக்கு அடிப்படையாயினும் அதுவெறும் போலியாக முடியாது பொலிவாக அமையுமாறு உதவுவது கற்பனையாகும். கற்பனையென்னும் சொல் சங்கப்பாடல்களுள் காணப்படவில்லை. ‘புனைவு’ என்ற சொல் பெரும்பான்மையும் இப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது. (பரி.6, புறம்.12, அகம்.98, பதிற்.62, பத்துப்.6:485, 7:147) ‘நாவிற் புனைந்த நன்கவிதை’ என்னும் பரிபாடல் தொடர், கவிதை/நல்ல கவிதை அமையும் முறைக்குப் புனை/கற்பனை பயன்படுவதைக் குறிப்பிடுகிறது.”5
கற்பனையும் வருணனையும்
இறந்த காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் முழுவதும் நடந்திராத நிகழ்வுகளைச் சாதாரண மனிதன் அல்லது சொல்லாற்றல் மிக்க கவிஞன் தன் மனத்தில் தோன்றிய என்னத்தை அல்லது கருத்தைக் கூறுவது கற்பனை எனலாம். இக்கற்பனையானது ஒருவேளை எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்வாகக்கூட அமையலாம். கற்பனையானது பலநேரங்களில் உண்மை நிகழ்வு நிகழவும் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு அடித்தளமாகவும் அமைந்துவிடுகின்றது என்பதனை பாரதியாரின் பாடலால் உணர்ந்துகொள்ளலாம். இதனை,
“காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான்
காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்”6 (பாரதியார் பாடல்)
எனும் பாடல் அடிகள் எடுத்தியம்புகின்றன, பாரதியார், கவிதையைக் கற்பனை கலந்த மோனை நயத்தோடு இயற்றியிருந்தாலும், அன்றைய கற்பனையானது இன்றையத் தகவல்தொடர்புக் கருவிகள் கண்டுபிடிப்பிற்கு மூலதனமாக அமைந்துவிட்டது என்றே கூறலாம். சான்றாகக் கூறினால், தொலைபேசியின் கண்டுபிடிப்பால் நாம் காசியில் இருந்து பேசினால் காஞ்சியில் இருப்பவர் நம் பேச்சைக் கேட்க முடியும். இன்று கைபேசிக் கண்டுபிடிப்பால் காசியில் இருந்து பேசினாலும் கடலுக்குள்ளிருந்து பேசினாலும் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் கேட்கின்ற அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்பு வளர்ந்துவிட்டது. இதைப்போன்று பல கண்டுபிடிப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன. இதனையே பாரதியார் அன்றே தம் கவிதையில் பாடியுள்ளார் என்பது புலனாகிறது.
வருணனையானது நிகழ்ந்த நிகழ்வுகளையோ அல்லது நிகழ்கின்ற நிகழ்வுகளையோ அல்லது நிகழக்கூடிய நிகழ்வுகளையோ சிறப்பிக்கும் பொருட்டுச் சற்றுக் கற்பனை கலந்து உயர்வாகக் கூறுவதாகும். இவ்வருணனை நிகழ்ச்சியை மட்டும் உயர்த்திக் கூறக்கூடியது மட்டுமல்ல. உயர்திணைகளையும் அஃறிணை களையும் நடந்த, நடக்கின்ற, நடக்கவிருக்கின்ற உண்மைகளை மரபுகளோடும் மரபுகளை ஒட்டியும் சற்றுக் கற்பனை கலந்து அழகுணர்வோடு வெளிப்படுத்துவதாக அமையக்கூடியதாகும். ஆகையால், கற்பனைக்கும் வருணனைக்கும் உள்ள சிறிய வேறுபாடுகளை நன்கு அறியலாம்.
செய்யுள் வடிவமும் வருணனையும்
தமிழ் இலக்கியங்களில் செய்யுள் கட்டமைப்பிற்கு உதவுகின்ற வடிவத்தினைத் தொல்காப்பியர் செய்யுளியலில் முதல் நூற்பாவிலேயே குறிப்பிடுகின்றார். இதனை,
“மாத்திரை யெழுத்தியல் அசைவகை எனாஅ,
யாத்த சீரே அடியாப் பெனாஅ,
மரபே தூக்கே தொடைவகை எனாஅ,
நோக்கே பாவே அளவியல் எனாஅத்
திணையே கைகோள் பொருள்வகை எனாஅக்
கேட்போர் களனே காலவகை எனாஅப்
பயனே மெய்ப்பா எச்சவகை எனாஅ,
முன்னம் பொருளே துறை வகை எனாஅ
மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின்
ஆறுதலையிட்ட அந்நால் ஐந்தும்
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே”7
என்னும் நூற்பாவில் விளக்குகின்றார். செய்யுள் உறுப்பானது 6+ 20+ 8 = 34 உறுப்புக்கள் என்பது இதனால் தெளிவுபடுத்தப்படுகின்றது. செய்யுள் வடிவமானது வருணனையைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகத் திகழ்கின்றது எனலாம். அந்த அளவிற்குச் செய்யுள் வடிவமானது வருணனையில் முக்கியப் பங்கினை வகிக்கின்றது. சங்கத்தொகை நூற்களில் இடம்பெறுகின்ற செய்யுட்களில் அடியளவு குறைந்து வருகின்றபோது வருணனைக் கூறுகளின் எண்ணிக்கைக் குறைந்தும் அடியளவு நீண்டு இடம்பெறும்போது வருணனைக் கூறுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இடம்பெறும். இந்தநிலையைச் சங்க எட்டுத்தொகை நூற்களிலேயே குறைந்த அடியளவைக்கொண்டு ஏறுவரிசையில் தொடங்குகின்ற ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய ஐந்து அகநூற்களில் இடம்பெறுகின்ற வருணனைகளையும், நீண்ட அடிகளால் அமையப்பெற்ற பத்துப்பாட்டிலுள்ள அகநூற்களில் இடம்பெறுகின்ற வருணனைகளையும் ஒப்பிடும்போது தெளிவாக அறியமுடியும்.
வருணனைக் குறைவிற்கான காரணம்
பெருங்காப்பியத்தில் அமைகின்ற மிகநீண்ட வருணனைகள் போன்று அதன்பிறகு வந்த இலக்கியங்களில் பெரும்பாலும் நீண்ட வருணனைகள் இடம்பெறாமல் போனதற்குக் காரணம் மனிதனின் சமூகச் சூழ்நிலையும், மனிதன் அடைந்த மாற்றங்களுமேயாகும். இக்கருத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக ‘இலக்கிய மரபு’ என்னும் நூலில், “சென்ற நூற்றாண்டு வரையில் கதைகளில் வாழ்க்கை முறைகள், உடை வகைகள், பழக்கவழக்கங்கள் முதலியவற்றை விரிவாக வருணிக்கும் வழக்கம் இருந்தது. பக்கம் பக்கமாக இவற்றை வருணித்தல், கதையாசிரியர்களின் திறமையைக் காட்டுவதாகவும் இருந்தது. ஆயின், இப்போது உலகம் ஒரு குடும்பம் போல் நெருங்கிவரும் போக்கு மிகுந்துவருகிறது. போக்குவரத்தால் பயணங்கள் பெருகுதல், கல்வியால் மனப்பான்மை ஒன்றுபடல், சமுதாய உறவால் பழக்கவழக்கங்கள் ஒரே வகையாதல், நாகரிகக் கலப்பால் உடை முதலியன ஒத்துவருதல் ஆகியவற்றால், வாழ்க்கையில் உள்ள வேறுபாடுகள் குறைந்து வருகின்றன. ஆகவே, உடை முதலியவற்றையும் பழக்கவழக்கங்களையும் எல்லோரும் அறிந்திருப்பதால், அவற்றைப் பற்றிய வருணனை வீணானதாக உள்ளது. ஆதலின், இக்காலத்துக் கதைகளில் அவற்றை வருணித்தல் குறைந்துவிட்டது எனலாம்.”8 என்று மு.வரதராசன் குறிப்பிடுகின்றார்.
மரபு
மரபிற்கான பொருத்தமான விளக்கத்தினைக் க. காந்தி அவர்கள், “மரபு என்பது எழுதப்படாத சட்டம். இதனைச் சமூகம் உள ஒருமைப்பாட்டால் உருவாக்குகின்றது. இம்மரபுகள் சமுதாய நலன்கருதி ஏற்பட்டவை”9 என்றும், “மரபு என்பது வழக்கமாகத் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படுவது எனப்பொருள்படும்”72 என்றும் தமது தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் எனும் நூலில் சுட்டியுள்ளமை அறியத்தக்கது.
எது மரபு?
எது மரபு என்னும் கருத்தினை அல்லது விளக்கத்தினை இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும் என்னும் நூலில், “‘மரபு’ என்னும் சொல் எதையும் குறிக்கலாம். சுருக்கமாகக் கூறினால் இறந்த காலம் தற்காலப் பயன்பாட்டிற்கு வழங்கும் எதுவும் மரபேயாகும். கொஞ்சம் விரிவாகக் கூறினால், மரபு முந்தைய தலைமுறையினர் இன்றைய தலைமுறையினருக்கு விட்டுச்செல்லும் ஒரு கருத்தாகவோ படைப்பாகவோ நம்பிக்கையாகவோ இருக்கலாம். கருத்தானல், அது முந்தைய தலைமுறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். படைப்பானால், அது முந்தைய தலைமுறையினரலலேயே படைக்கப்பட்டிருக்க வேண்டும். நம்பிக்கையானால், முந்தைய தலைமுறையினரால் முழுவதுமாக நம்பப்பட்டிருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் நடைமுறைகளால் உருவாகிக் கருத்தும் கற்பனையும் கலந்து கட்டமைக்கப்பட்டுப் பிற்காலத் தலைமுறையினர்க்கு வந்து சேரும் எதுவும் மரபே.”10 என்று சீனிவசன் குறிப்பிடுவதாக, சு.இராசாராம் எடுத்துஉரைக்கின்றார்.
மரபின் நிலைக்களன்
மரபின் நிலைக்களனானது எவ்விதத்தில் அமையப்பெற்றிருக்கின்றது என்பதனை, “மரபுக்குள் பண்பாடும் அனுபவமும் இழைந்திருக்க, மரபின் வழியான கலை இலக்கியமும் அதன் பல கட்டமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றன என்று பா.செல்வகுமார் தமது தமிழ்ப்புதுக்கவிதைகளில் பின்னை நவீனத்துவக் கூறுகள் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்”11 (பக்.70). மேலும், தாம் எடுத்தாண்ட மேற்கோளில், “மரபு, மரபுக்கவிதையைப் பற்றி சிற்பி குறிப்பிடுகையில், வழிவழியாக வந்த நீண்ட பாரம்பரியத்தையும் அந்தப் பாரம்பரியம் சேமித்து வைத்த அனுபவங்களையும் அனுபவங்களின் வெளிப்பாட்டு ஊடகங்களான கலை, இலக்கியம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் அடையாளச் சொல் மரபு…கவிதையைப் பொறுத்தமட்டில் யாப்பு, வரையறுக்கப்பட்ட வடிவம், தீர்மானிக்கப்பட்ட உள்ளடக்கம், புதுமைகளை ஏற்கமறுக்கும் போக்கு ஆகியவற்றுக்கு ஒரு குறியீடாக மரபு என்ற சொல் கையாளப்பட்டு வருகிறது”12 என்று குறிப்பிடுகின்றார்.
மரபின் இலக்கணம்
மரபு என்பது எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எவ்வழியில் அறிவுடையோர் சொன்னார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வழியில் சொல்லுதல் ஆகும். இதனை,
“எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர்
செப்பின ரப்படிச் செப்புதன் மரபே”13
எனும் நூற்பாவின் மூலம் பவணந்தி முனிவர் எடுத்தியம்பியுள்ளார்.
தொல்காப்பியத்தில் மரபு
பறவை மற்றும் விளங்குகளின் இளமைப் பெயரைக் குறிப்பிடுவதற்கும் மரபு இருக்கின்றது என்பதனை,
“மாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்
பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும்
கன்றும், பிள்ளையும், மகவும், மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே.”14(தொல்.மர.1.)
என்னும் நூற்பாவின் வாயிலாகத் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார். இம்மரபினைப் பின்பற்றியே சங்க இலக்கியப் பாடல்கள் அமைந்திருக்கின்றன எனலாம்.
தொல்காப்பியர் பறவை மற்றும் விளங்குகளின் ஆண்பால் பெயரைக் குறிப்பிடுவதற்கு மரபு இருக்கின்றது என்கிறார். இதனை,
“ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும்
சேவும், சேவலும், இரலையும், கலையும்
மோத்தையும், தகரும், உதளும், அப்பரும்,
போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும்
யாத்த ஆண்பால் பெயரென மொழிப.”15 (தொல்.மர.2.)
என்னும் நூற்பா எடுத்துரைக்கின்றது. இம்மரபினைப் பின்பற்றியே சங்க இலக்கியப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், ஆட்டின் ஆண்பால் பெயரை அப்பர் என்றும் மோத்தை என்றும் வழங்கும் மரபு சங்கத்தொகை நூற்களில் இடம்பெறவில்லை என்று கு.மோகனராசு திருக்குறளில் மரபுகள் என்னும் நூலின் முகவுரையில் குறிப்பிட்டிருப்பதனால் தொல்காப்பியத்தின் தொன்மையை இதனால் உணரமுடிகின்றது.
பறவை மற்றும் விலங்குகளின் பெண்பால் பெயரைக் குறிப்பிடுவதற்கு மரபு இருக்கின்றது என்பதனைத் தொல்காப்பியர்,
“பேடையும், பெடையும், பெட்டையும் பெண்ணும்
மூடும், நாகும், கடமையும், அளகும்,
மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும்,
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.”16 (தொல்.மர.3.)
என்னும் நூற்பாவின் மூலம் எடுத்துரைக்கின்றார். சங்கத்தொகை நூற்களில் இவ்வழக்காறுகளைப் பின்பற்றியே பாடல்கள் அமைந்துள்ளது என்று கூறினாலும்,
ஆட்டின் பெண்பால் பெயரை மூடு என வழங்கும் மரபு, நரி, நாய், பன்றி ஆகியவற்றின் பெண்பால் பெயரைப் பாட்டி என வழங்கும் மரபு முதலாய வழக்காறுகள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெறவில்லை என்பதனை கு.மோகனராசு திருக்குறளில் மரபுகள் என்னும் நுலின் முகவுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குறியதாகவும் தொல்காப்பியத்தின் பழமையை அறியத்தக்கதாகவும் அமைந்துள்ளது.
அறிவில் மரபு மாறாமை
தொல்காப்பியர் பன்னெடுங் காலத்திற்கு முன்பே ஒரு மருத்துவர் போன்று உயிர்களின் அறிவைப் பாகுபாடு செய்து வைத்துளார். இப்பாகுபாடானது இன்றளவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது. இம்மரபில் எந்தவித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இக்கருத்தினை,
“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.”17(தொல்.மர.27.)
எனும் நூற்பாவின் வழி அறியலாம். இந்நூற்பாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்களின் வருணனைகள் சங்கத்தொகை நூற்களில் இடம்பெற்றுள்ளன.
தொல்காப்பியத்தில் மரபும் நெகிழ்ச்சியும்
மரபின் நெகிழ்ச்சியானது “தொல்காப்பியர் காலத்திலேயே (அல்லது அவர் காலத்திற்கு முன்பாகவே) மரபில் ஓரளவு நெகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது.
“குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
முடியவந்த அவ்வழக் குண்மையின்
கடிய லாகா கடனறிந் தோர்க்கே”18 (தொல்.1568)
எனவரும் மரபியல் நூற்பா மரபின் நெகிழ்ச்சி நிலையையே குறிப்பிடுகின்றது. முடிய வந்த வழக்காயினும் கடிதல் கூடாது என்பதே தொல்காப்பியம்.
மரபில் நிலைத்த தன்மை வேண்டும் என வரையறுக்கப் பட்டிருப்பினும், காலப்போக்கில் நெகிழ்ச்சிகள் ஏற்படுவதுண்டு என்பதற்குத் தொல்காப்பியத்தில் கூறப்படும் பல மரபுச் சொற்கள் சங்கத்தொகை நூல்களிலேயே வழக்கிழந்தமையைக் காட்டலாம். ஆட்டின் ஆண்பால் பெயரை அப்பர் என்றும் மோத்தை என்றும் வழங்கும் மரபு, ஆட்டின் பெண்பால் பெயரை மூடு என வழங்கும் மரபு, நரி, நாய், பன்றி ஆகியவற்றின் பெண்பால் பெயரைப் பாட்டி என வழங்கும் மரபு முதலாய வழக்காறுகள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெறவில்லை.”19 என்று கு.மோகனராசு திருக்குறளில் மரபுகள் என்னும் நுலின் முகவுரையில் தொல்காப்பிய நூற்பாவைச் சுட்டிக்காட்டி மரபின் நெகிழ்ச்சி குறித்து விளக்குகின்றார்.
மரபும் மாற்றமும்
உலகில் எதுவும் நிலையானது இல்லை. மாற்றம் ஒன்றே நிலையானது. அம்மாற்றமானது மரபில் உடனடியாகவும் முற்றிலும் வேறுபட்டும் நிகழ்ந்துவிடாது என்னும் கருத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக, “மரபு என்பது உடனே மாறக்கூடியது அன்று; நெடுநாள் நிலைத்து நிற்பது எனலாம். மரபிலிருந்து மாற்றம் ஏற்படுமானால், அது மெல்ல மெல்லவே நிகழும்; மரபை ஒட்டியே நிகழும்”20 என்று கு. மோகனராசு திருக்குறளில் மரபுகள் என்னும் நூலில் விளக்கியுள்ளதனைக் காணமுடிகின்றது.
வருணனை என்பதற்கு அகராதிகள் தரும் விளக்கங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. வருணனை எவ்வாறெல்லாம் இடம்பெறும் என்பதும், வருணனைக்கான சொற்பொருள் விளக்கமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வருணனையானது அமையவேண்டிய விதம் குறித்து விரிவாக அறியமுடிகின்றது. கற்பனையின் பயன்பாடானது அறிவியல் கண்டுபிடிப்பிற்கு அடித்தளமாக அமைந்திருப்பதனை அறியமுடிகின்றது. கற்பனைக்கும் வருணனைக்குமுள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்து கொள்ள இவ்வாய்வு ஏதுவாக அமைகின்றது.
தொல்காப்பியத்தில் வருணனையின் அடிப்படைக் கூறுகள் அமைந்துள்ளதைத் தொல்காப்பிய நூற்பாக்களின் வாயிலாக அறியமுடிகின்றது. இக்காலகட்டத்தில் வருணனை குறைந்து வருவதற்கான மிக முக்கியமான நடப்பியல் காரணங்கள் சுட்டப்பட்டுள்ளன. மரபிற்கான இலக்கணத்தினை நன்னூல் நூற்பாவின் வாயிலாக இங்கு அறியமுடிகின்றது. தொல்காப்பியத்தில் மரபு மற்றும் அறிவில் மரபு மாறாமை குறித்துத் தொல்காப்பியர் உயிரினங்களின் வாயிலாக விளக்கிச் செல்கின்றதனை அறியலாம். மரபின் இன்றியமையாமையையும் மரபில் மாற்றம் ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளையும் தொல்காப்பியர் தெளிவுபடுத்திச் செல்வதனைக் காணமுடிகின்றது. தொல்காப்பியத்தில் மரபும் நெகிழ்ச்சியும் மரபையொட்டியே அமையவேண்டும் என்பது புலப்படுத்தப்படுகின்றது. மரபானது மாற்றம் அடைந்தால் அம்மாற்றமும் மரபையொட்டிய நிகழும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்புகள்
க்ரியா, தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்- ஆங்கிலம்), ப.900.
எஸ். வையாபுரிப்பிள்ளை - இலக்கியச்சிந்தனைகள் நூற்களஞ்சியம்: தொகுதி-1, ப.80.
க. சிதம்பரம், பெரியபுராணத்தில் வருணனைகள் – ஓர் ஆய்வு, ப.87.
செ.வை. சண்முகம், எழுத்திலக்கணக்கோட்பாடு, ப.302.
ச.வே. சுப்பிரமணியன், (ப.ஆ), வீராசாமி, (ப.ஆ), - தமிழ் இலக்கியக்கொள்கைகள், ப.36.
பாரதியார் பாடல்கள்.பக்.21.
ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, தொல்.செய்.நூற்.1.
மு.வரதராசன், இலக்கியமரபு, பக்.38.
க. காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், ப.15-16.
சு. இராசாராம், இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், ப.107.
பா. செல்வகுமார், தமிழ்ப்புதுக்கவிதைகளில் பின்னை நவீனத்துவக் கூறுகள், ப.70.
பா. செல்வகுமார், தமிழ்ப்புதுக்கவிதைகளில் பின்னை நவீனத்துவக் கூறுகள், ப.70.
கழகப்புலவர் குழுவினர், நன். சொல்.நூ.388.
ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, தொல்.மர.நூற்.1.
மேலது, தொல்.மர.நூற்.2.
மேலது, தொல்.மர.நூற்.3.
மேலது, தொல்.மர.நூற்.27.
மேலது, தொல்.மர.நூற்.1568.
கு.மோகனராசு, திருக்குறளில் மரபுகள் - முகவுரை, பக்.xi,xii.
கு.மோகனராசு, திருக்குறளில் மரபுகள், பக்.20-21.
துணை நின்ற நூல்கள்
காந்தி, க. தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத்தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113, மறுபதிப்பு: 2008.
சண்முகம், செ.வை. எழுத்திலக்கணக்கோட்பாடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டி.வளாகம், தரமணி, சென்னை – 600 113, மறுபதிப்பு: 2001.
சிதம்பரம்,க. பெரியபுராணத்தில் வருணனைகள் – ஓர் ஆய்வு, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
சுப்பிரமணியன், ச.வே. தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. முதற்பதிப்பு:1998.
செல்வகுமார், பா. தமிழ்ப்புதுக்கவிதைகளில் பின்னை நவீனத்துவக் கூறுகள், இ7, பாரத் அடுக்ககம், ஆர்.வி.நகர், அண்ணாநகர் (கிழக்கு), சென்னை – 600 102. பதிப்பு: 2010.
பாரதியார், பாரதியார் பாடல்கள், பாரதி பதிப்பகம், 126/108 உஸ்மான் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. முதற்பதிப்ப:1981.
பேராசிரியர், கழக வெளியீடு, சென்னை. முதற் பதிப்பு:1959.
மோகனராசு, கு. திருக்குறளில் மரபுகள், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், முதற் பதிப்பு:1981.
வரதராசன், மு. இலக்கியமரபு, பாரி நிலையம், 184, பிராட்வே, சென்னை – 600 108. முதற் பதிப்பு:1988.
வையாபுரிப்பிள்ளை, எஸ். இலக்கியச்சிந்தனைகள் நூற்களஞ்சியம்: தொகுதி-1, பாரி நிலையம், 184, பிரகாசம் சாலை, சென்னை-108, முதற்பதிப்பு:1999.
வையாபுரிப்பிள்ளை, எஸ். (ப.ஆ), தமிழ்ப்பேரகராதி,(லெக்ஸிகன் – தொகுதி 1,2), சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600 005, முதற் பதிப்பு: 1982.
இராஜராம், சு. இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும் காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோயில் – 629 001. முதற் பதிப்பு:2010.
* கட்டுரையாளர் - - முனைவர் பா.ஈஸ்வரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). கிருஷ்ணன்கோவில் - 626 126. -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.